கல்வியழித்தல் -----ஆன்மீகம், உரையாடல்-------------“கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்

அன்புமிக்க திரு. ஜெயமோகன்

வாசிப்பு பற்றி குமார் முல்லக்கல் அவர்களின் கேள்விக்கு மிக விரிவாகப் பதிலளித்திருக்கிறீர்கள்.

“கற்றாரை யான் வேண்டேன் ;

கற்பனவும் இனியமையும்”

என்னும் மாணிக்க வாசகரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்றறிய ஆவல்

மரபின் மைந்தன் முத்தையா

***

Dear J,

ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து… .

”ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை இப்படிச் சொல்கிறார். காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம், இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை முள்ளை அறிவால் எடுத்தபின் அதையும் வீசிவிடவேண்டும். ”

நீங்கள் கல்வியழித்தல் குறித்து பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நடைமுறையில் அது சாத்தியம்தானா என்று ஐயப்படுகிறேன்

-Ram

***

அன்புள்ள ராம், முத்தையா,

இருவரும் கிட்டத்தட்ட ஒரே வினாவைக் கேட்டது ஆச்சரியம் அளிக்கவில்லை. இந்தக் கேள்வியை நான் என்னிடம் கேட்டுக்கொள்ளும்போது எனக்குச் சில தெளிவுகள் உருவாகின்றன. அவையே எனக்கு முக்கியமானவை.

கல்வியும் கல்வியழிதலும் நம் வாழ்வில் ஒவ்வொரு கணமும் நடந்து கொண்டிருக்கின்றன. மிக இளம் வயதிலேயே நாம் வந்து பிறந்த பண்பாட்டாலும் சூழலாலும் பயிற்றுவிக்கப்படுகிறோம். அதற்கு முன்னரே நம்முடைய அடிப்படை விலங்கியல்புகளால் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். பிறகு நாம் கற்பவை அனைத்துமே ஏற்கனவே கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தை நீக்கம் செய்தபின் அங்கே அமர்ந்து கொள்பவைதான். நாம் அறியும் ஒவ்வொன்றும் ஏற்கனவே நாம் அறிந்த ஒன்றை பொய்யாக்குகிறது. அந்த வெற்றிடத்தில் தன்னை அமர்த்திக் கொள்கிறது. கல்வியழிதல் நிகழ்ந்த பின்னர்தான் கல்வி நிகழமுடியும்.

அறிவதொவ்வொன்றும் அறியாமையையே என்று நாராயணகுரு சொல்கிறார். நாம் ஒன்றை அறியும்போது அக்கணத்தில் நாம் அறிவது அறியாமையையே. அந்த வெற்றிடத்தை நாம் உணரும்போது மட்டுமே புதிய அறிதல் சாத்தியமாகிறது. அந்த கல்வியழிதலுக்கு நாம் தயாராகவில்லை என்றால்தான் நம் அறிதல் தரைதட்டி நிற்கிறது. அதுவே மூடத்தனத்தின் உச்ச நிலை என்பது. பெரும்கல்வியாளர்கள் பெருமூடர்களாக ஆகும் தருணம் அதுதான்

ஜென் கதையில் தன்னிடம் வந்து கோட்பாடுகளாகப் பேசும் ஒரு அறிஞருக்கு நிறைந்த கோப்பையில் மேலும் டீயை விடச்சொல்லி அந்த டீ வெளியே வழிந்தோடுவதைச் சுட்டி ஜென் மாஸ்டர் சொன்னது இதைத்தான். கற்றதை எந்த அளவுக்கு விடுகிறோமோ அந்த அளவுக்கே கல்வி சாத்தியம். கணிப்பொறியியலில் நேற்று கற்றதை கைவிடாமல் இன்று கற்க முடியாது என்பது ஒரு பாடம் என்று ஒருமுறை ஒரு நண்பர் சொன்னார். எங்கும் அதுதான்

இயல்பாக நடந்துகொண்டிருக்கும் இந்த விஷயத்தை நாம் பெரும் குருநாதர்களின் அருகே செல்லும்போது தீவிரமாக உணர்கிறோம். அவர்கள் நமக்குக் கற்பிப்பவை அதிகமென்பதனால் அவர்கள் நம்மில் இருந்து வெளியே துரத்தும் கல்வியும் மிக அதிகம். அது உண்மையில் வேதனையான ஒரு அனுபவம். சில குருநாதர்கள் மென்மையாக அதைச் செய்யும்போது சிலர் மிகத்தீவிரமான வன்முறையுடன் அதைச் செய்கிறார்கள்

மில ரேபா என்ற திபெத்திய ஞானியின் வாழ்க்கை வரலாறு இதைத்தான் காட்டுகிறது. மிக முக்கியமான தியான நூல் அது கவிதை நூலும் கூட. ஞானம் தேடி தன்னை அணுகும் மிலரேபாவை மிகக் கடுமையான உடல் மன வலிகளினூடாக அழைத்துச் செல்கிறார் குருநாதர். அந்த துயரங்கள் வழியாக மெல்ல மெல்ல தன் கற்றலை அழித்து கற்கத்தயாரான சீடராக ஆகிறார் மில ரேபா. அவரது கவிதைகள் அந்தப் பரிணாமத்தைக் காட்டுகின்றன.

நித்யாவின் வாழ்க்கையில் இதைக் காணலாம். நடராஜகுரு நித்யாவை கடுமையான முறையில் உடைத்து மறுஆக்கம் செய்கிறார். நித்யாவில் ஊறியிருந்த அவரது காலகட்டத்தைச் சேர்ந்த பல சிந்தனைகளை பிடுங்கி ரத்தம் வழிய வெளியே வீசுகிறார் நடராஜ குரு. புத்தங்களை பிடுங்கி வீசுகிறார். வீட்டைவிட்டு வெளியே துரத்துகிறார். கண்ணீர்விட்டு கதறும் வரை கிண்டல் செய்கிறார். பலமுறை நித்யா கோபித்துக்கொண்டு ஓடிப்போகிறார், நடராஜகுரு தேடிவந்து கூட்டிச்செல்கிறார்.

ஆனால் நித்யா மிக மென்மையானவர். அதிர்ந்துபேசுவதும் ஏளனம் செய்வதுமெல்லாம் அவர் அறியாதவை. பூ மலர்வது போல பேசக்கூடியவர். ஆனால் தொண்ணூறுகளில் நான் அவரைச் சந்தித்தபோது கடுமையான மன வலியை அனுபவித்தேன். ஆரம்ப நாட்களில் அவருடன் நான் விவாதித்தேன். நான் கற்றவற்றை தக்க வைத்துக் கொள்வதற்கான கடைசி முயற்சிகளில் ஈடுபட்டேன். ஒவ்வொருமுறையும் கடுமையான மனச்சோர்வை அடைந்துதான் அவர்முன் இருந்து வெளியே வருவேன்.

அப்படியானால் நான் கற்றவை அடைந்தவை அனைத்துமே பொய்யா, நான் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையே வீண்தானா என்று மயங்கினேன். மெல்ல மெல்ல அந்த அலை அடங்கியபோது ‘கற்பனவும் இனி அமையும்’ என்று அவர்முன் அமர்ந்துகொண்டேன்.
ஒரு நல்ல நூலின் முன், ஒரு அறிஞனின் முன் நம் கல்வியை கொஞ்சமேனும் நாம் அழித்துக்கொள்ளாவிட்டால் நாம் எதுவுமே கற்கப்போவதில்லை என்றே பொருள். சுந்தர ராமசாமியிடம் மட்டுமல்ல நித்யாவிடம் வந்து கூட தாங்கள் சொல்ல வேண்டியதை மட்டுமே சொல்லிவிட்டுச் செல்லும் பலரை நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக அதிதீவிரக் கோட்பாட்டு நம்பிக்கையாளர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கற்க ஏதுமில்லை. கற்றவற்றை உலகுக்குச் சொல்லி உலகை மாற்றும் வேலை மட்டுமே இருக்கிறது

மதம், அரசியல், தத்துவம் சார்ந்து இவ்வாறு இறுகிப் போனவர்களைத்தான் மாணிக்க வாசகர் சொல்கிறார் என்று எண்ணுகிறேன். இந்த வரிகளுக்கு நிகரான வரிகளை நாம் திருமந்திரத்திலும் சித்தர் பாடல்களிலும் காணலாம். இயேசு ‘நீங்கள் மனம் திருந்தி குழந்தைகளைப்போல ஆகாவிட்டால் விண்ணுலகில் நுழைய மாட்டீர்கள்’ என்று சொல்வதும் இதையே. ஒருகல்வியின் முன் நாம் பெற்ற முந்தைய கல்வி அழியுமென்றால் அந்த முந்தைய கல்வி எல்லாம் வீணா? அல்ல அவை படிகள். அப்படிகள் வழியாக ஏறித்தான் அந்த படியை நாம் அடைந்திருக்கிறோம். முந்தைய படிகளை நிராகரித்தே புதிய படியை அடைந்தோம். ஒரு கல்வியழிதலுக்கு நாம் தயாராவதே அக்கல்வி நமக்களிக்கும் விவேகம் மூலம்தான்.

மேலும் உக்கிரமான முறையில் அந்த கல்வியழிவு நிகழ முடியும். விவேகானந்தர் ராமகிருஷ்ணரை பார்க்கச் சென்றபோது பிரம்மசமாஜத்தின் சீர்திருத்தக் கருத்துக்களினால் மனம் நிறைந்தவராக இருந்தார். அவர் கண்களுக்கு விக்ரக ஆராதனை செய்யும் ஓர் அஞ்ஞானியாகவே ராமகிருஷ்ணர் தோன்றினார். ராமகிருஷ்ணர் விவேகானந்தரைக் கண்டதும் கண்கலங்கி அழுகிறார். ஏன் இத்தனை தாமதம், உனக்காக எத்தனை நாளாகக் காத்திருந்தேன் தெரியுமா என்று அணைத்துக் கொள்கிறார். மனம் கலங்கிய விவேகானந்தர் ஓடிவிடுகிறார்

மீண்டும் சந்திக்கும் போது ராமகிருஷ்ணர் அவரை தன்னுடன் தியானத்தில் அமரச்செய்கிறார். அப்போது விவேகானந்தரை ராமகிருஷ்ணர் சற்று தீண்டுகிறார். அந்த தொடுகையால் சட்டென்று தியான அனுபவத்தின் அடியற்ற ஆழத்தை உணரும் விவேகானந்தர் கதறி விடுகிறார். இறந்துவிடுவோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் அந்தத் தருணத்தில் அவரது கல்வி பூர்ணமாக அழிந்துவிடுகிறது. தூய உள்ளத்துடன் அவர் ராமகிருஷ்ணர் முன் தன் ஆத்வாவை திறந்து வைக்கிறார்

கல்வி துளித்துளியாக பாறை இடுக்கு வழியாக ஊறி தேங்கும் நீர் போன்றது. யோகஞானம் என்பது சுனாமி அலை. அது கல்வியை முழுமையாக அடித்துக் கொண்டு சென்றுவிடும். அந்த மகத்தான கல்வியழிதலை ஞானிகளின் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.

எழுதியவர் : (15-Oct-17, 5:28 am)
பார்வை : 109

மேலே