ஆதிசிவன் தந்த ஆடற்கலை
ஆடிய பாதன் அளித்தநற் கலையாம்
***அற்புத நாட்டியக் கலையே !
சூடிய புலித்தோ லாடையு மிடையில்
***சுற்றிய அரவமும் கொண்டு
மூடிய கையில் டமருகம் அடித்து
***முயலகன் காலினில் மிதித்தே
ஆடினான் உடுக்கை மான்மழு வுடனே
***அக்கினி ஏந்திய சிவனே !
பதஞ்சலி வியாக்ர பாதரின் தவத்தால்
***பரமனின் தாண்டவம் காண
சிதம்பரந் தலத்தில் அம்பலந் தன்னில்
***திருநடம் புரிந்தனன் அன்றே !
பதமிடந் தூக்கி யாடிடும் கோலம்
***பார்த்திட அள்ளிடும் உள்ளம் !
விதவித மாக நாட்டியம் புரியும்
***விமலனின் திருவுரு அழகே !
தாண்டவ மாடு மீசனே முதலாய்த்
***தந்ததிவ் வருங்கலை தானே !
காண்பதற் கெழிலாய் மங்கைய ராட
***கலைநயங் கொஞ்சிடும் திண்ணம் !
ஆண்டிடுந் தேவன் அருளிய கலையை
***ஆண்களு மாடுவ துண்டே !
ஈண்டிதற் கில்லை ஈடென வுணர்ந்தே
***இக்கலை வளர்த்திடு வோமே !
( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
சியாமளா ராஜசேகர்