ஒரு குட்டி செடியின் காதல்

ஒரு குட்டி தொட்டியில ஒரு குட்டி செடி இருந்துச்சாம் . அது ரொம்ப சந்தோசமா இருந்துச்சாம். அவங்க வீட்ல அந்த செடிக்கு ரொம்ப நல்லா தண்ணி ஊத்தி நல்லா பாசமா பாத்துக்கிட்டாங்களாம். அதுவும் அழகா வளந்துச்சாம். அந்த செடி காத்தடிக்கும் போது அழகா தன்னோட இலையை அசைச்சு தலையாட்டி நன்றி சொல்லுமாம். எதுக்கு தெரியுமா தினம் தோறும் காலைல எழும்பின உடனே வீட்டுக்கார அம்மா வந்து பாசமா தண்ணி ஊத்துறாங்களா அதுக்கு தான். அப்படியே அந்த குட்டி செடியும் அந்த வீட்டுக்கார அம்மாவும் நல்லா நண்பர்கள் மாதிரி ஆய்ட்டாங்களாம்.

அப்புறம் நாளாக நாளாக அந்த வீட்டுக்கார அம்மாக்கு அந்த செடி மேல இன்னும் பாசம் ஜாஸ்தி ஆகிடுச்சாம், அதுக்கு நெறய அழகான உரம் போட்டாங்களாம். செடியும் அதை நல்லா உறிஞ்சு சந்தோசமா இருந்துச்சாம். இன்னும் நல்லா நல்லா உயரமா வளந்துச்சாம். தன்னை நல்லா பாத்துக்கிட்டு இருந்த வீட்டுக்கார அம்மாவை அந்த குட்டிச் செடியை ரொம்ப பிடிச்சு போய் அது தினம் ஒரு அழகான பூவைக் கொடுக்க ஆரம்பிச்சுதாம், அந்த அம்மாவுக்கு ஒரே சந்தோஷமாம் பூவைப் பார்த்ததிலிருந்து. முதல் பூவை பார்த்து பார்த்து ரசித்து கொண்டார்களாம். ஆனால் பறிக்கவே இல்லயாம். நம்ம ஆசையா பூத்த பூவை நம்ம அம்ம்மா பறிக்கவே இல்லையே னு குட்டிச் செடி க்கு ரொம்ப சங்கடமா போச்சுதாம்.

அந்த முதல் பூ ரொம்ப சோகமாக வாடி கீழே விழுந்திரப்போறோம் னு நினைச்சுக்கிச்சாம். அந்த நேரத்துல அந்த அம்மா வந்து அந்த குட்டி பூவை மெல்ல பறிச்சாங்களாம். அப்பாடா அந்த முதல் பூ பெருமூச்சு விட்டு சிரிச்சுதாம் அம்மா கைல வந்து விட்டோம் இனி அவங்க அழகான தலையில போய் ஜாலியா உக்கார்ந்துக்கலாம் அப்படி னு நினைச்சுதாம்.

ஆனா அந்த அம்மா என்ன பண்ணினாங்க. பூவை மெல்ல வலிக்காம கைல எடுத்து கொஞ்சம் ரசிச்சு அந்த வாசத்தை மெல்ல உறிஞ்சுட்டு அப்படியே நடந்து போய் பூஜை அறைக்கு போய் சாமி படத்துல வச்சுட்டாங்களாம். அந்த குட்டிப் பூவுக்கு கண்ணீரா வந்துச்சாம். அம்மா நம்மள தலையில் வைக்காமல் இப்படி இங்க கொண்டு வீசிட்டு போட்டாங்க னு நினைச்சுதாம்.

பாவம் அந்த குட்டிப் பூவுக்கு தெரியல நாம் இருக்கிறது சாமி புகைப்படத்துக்கு கிட்ட . அது நாம நேசிச்ச அம்மாவோட தலையில உக்கருகிற பாக்கியதைவிட இந்த பூஜை அறையில் இருப்பது ரொம்ப சுகம் என்று அந்த பூ உணரவில்லையாம். அது மனசு கேக்கவே இல்லே. ஏன் இப்படி ஆச்சு அப்படி னு அழுதுகிட்டே யோசிச்சுதாம். இது தெரியாத அம்மா கண்ணை மூடி சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்களாம்.அந்த அம்மாக்கு ரொம்ப பிடிச்ச சாமிக்கு முதல் பூவை வச்சுட்ட சந்தோஷத்துல அம்மா மனசு நிறைஞ்சு இருந்துச்சாம்.

ஜன்னலோரத்தில் இருந்து செடி எட்டி எட்டி பார்த்துச்சாம். அம்மா தலையில் அந்த குட்டிப் பூ எவ்வளவு அழகா இருக்கு அப்படினு பார்க்க செடிக்கு ஆசை. அது எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்துச்சாம். அம்மா பூஜை அறையில் இருந்து வந்து சமையல் ஆரம்பிச்சாச்சு. அங்க இங்க எட்டிப் பார்த்த செடி ஒருவழியா அம்மா தலையை பார்த்துச்சாம். என்ன இது அம்மா தலையில பூ இல்லையே னு செடி நினைச்சுதாம், அதனோட இலைகளெல்லாம்
ஒரு நொடியில் அப்படியே வாடி போய் விட்டதாம் வருத்தத்தில்.அதனாலா தாங்கவே முடியவில்லையாம்.

. அப்புறம் அடுத்த மொட்டு வந்ததாம். இந்த இரண்டாவது மொட்டை அம்மா பறிப்பார்களா மாட்டார்களா என ஏக்கத்தோடு அந்த குட்டி செடி இருந்துச்சாம் . ரொம்ப குழம்பி இருந்துச்சாம். முதல் மொட்டை சுமந்த போது இருந்த சுகம்னா இப்போது இல்லை இந்த செடிக்கு.

இரண்டாவது மொட்டை பார்த்த உடனே அந்த அம்மாவின் விழிகள் அதிகம் சந்தோசம் கொண்டன. தினம் அதன் அழகை ரசிக்க தொடங்கினாங்க. இந்த பூ என்னைக்கு விரியும் னு காத்திருந்தாங்களாம், அம்மாக்கு ஆவலை அடக்க முடியல. அவ்ளோ ஆசை அந்த பூ மேல. ஆனா பாவம் இந்த குட்டிச் செடி உற்சாகம் இல்லாமல் தான் அந்த மொட்டை சுமந்து கொண்டிருந்ததது. இந்தப் பூவையும் அம்மா பறிச்சு வேற யார் கிட்டயோ தான் கொண்டு போக போகிறார்கள் னு அது நினச்சுகிட்டே இருந்ததாம்.

ஒரு அழகான காலையில அந்த குட்டி மொட்டு விரிஞ்சுதாம். அந்த செடிக்கு ஒரே படபடப்பு என்னனு அம்மா பறிப்பார்களா, பறித்தால் எங்க கொண்டு போவாங்க, என்ன செய்வாங்க அப்படி னு நினைச்சுதாம். ஆனா அம்மா அந்த பூவை பார்த்ததும் பரவச நிலை தான் அம்மாவுக்கு. எனக்கான பூ அப்படி நெனச்சங்களாம்.

மெல்ல தன கையால் அந்த செடிக்கு வலிக்காமல் அந்த குட்டிப் பூவை மெல்ல பறிச்சாங்களாம். அந்த குட்டிச் செடி இதுவரை மனசில் கொண்டிருந்த வலியெல்லாம் அந்த சின்ன ஸ்பரிசத்தில் கரைஞ்சு போச்சுதாம். அந்த சின்ன பூ அம்மா கையில அழகா அன்பா ஓட்டிகிட்டதாம். அம்மா என்ன பண்ணினாங்க. அந்த குட்டிப பூவை ஆசையா பார்த்தங்களாம். அப்புறம் அழகா ஒரு விரல் வைத்து அதை வருடி அதற்கு ஒரு ஆசை முத்தம் கொடுத்தார்களாம்.
அப்புறம் அறைக்குள்ள போனாங்க அம்மா.

செடி நெனச்சுதாம் ஐயோ இப்பவும் பூவை எங்கோ கொண்டு போறாங்க னு நெனச்சுதாம். அம்மா எப்ப வருவாங்க னு அது ஆசையா எட்டிப்பார்க்கலயம். ஏன்னா அந்த செடி நெனச்சுதாம் அம்மா தலைல இந்த பூவை வைக்க மாட்டாங்க னு நெனச்சுதாம். அந்த செடி எதோ ஒரு நிலையில் இயல்பாய் இருக்க முயற்சித்ததாம்.

அப்போ பூவை எடுத்துக்கொண்டு உள்ளே போன அம்மா ஒரு கையில் பூ ஒரு கையில் பூவை சூட ஹேர் பின் அப்படி னு கண்ணாடி பக்கம் போனார்களாம். பூவுக்கு வலிக்காம அதை அழகா தலைல வச்சுக்கிட்டாங்களாம். இந்த பின் சொருகிய வலி பூவுக்கு கொஞ்சம் கூட வலிக்கலையாம். நம்ம அம்மா தலையில் ஓட்டிகிட்டோம் னு அதுக்கு சந்தோசம் தாங்கவில்லை. தன வீட்டுப் பூவை சூடிய அம்மா மகிழ்ச்சியில் புன்னகையோடு நடக்க தொடங்கினாள்.

ஜன்னலோரத்தில் இருந்து அம்மாவின் கண்ணாடி பிம்பத்தை பார்த்த அந்த குட்டிச் செடிக்கு அம்மாவின் தலையைப் பார்க்கும் முன் அம்மாவின் மகிழ்ச்சி வந்து அந்த குட்டிச் செடியின் இதயத்திலும் ஒட்டிக் கொண்டது.

அம்மா என்ன நினைத்தாளோ ஜன்னல் பக்கம் வந்து திரும்பி தன் தலையை காட்டி ஆளாக இருக்குதா என்று செடிக்கிட்டே கேட்டாளாம், அந்த குட்டிச் செடி தன இலைகளை வேகமாக ஆடி சிரிச்சுதாம். அந்த தென்றலின் சுகம் அந்த இலைகளில் இருந்து அந்த அம்மாவின்அ விழிகளுக்குள் ஊடுருவ தொடங்கியது .அந்த சந்தோஷத்தில் அதன் வேர்கள் அடுத்த மொட்டை வளர வைக்க அழகாய் பூ பூக்க வைக்க தேவையான நீரை தேடி ஒடத் தொடங்கின. அவர்களுக்குள் அழகான பந்தம் தென்றலின் தாலாட்டோடு வளர ஆரம்பித்தது.

கதையின் கருத்து:
காத்திருத்தல் சுகமே சில நேரம் எண்ணங்கள் தவறே.காத்திருத்தல் சுகமே . வாழ்க்கையிலும் இது போல தான். நேசித்த இதயங்களும் ஆசைப்பட்ட வெற்றிகளும் கிடைக்க தாமதமாகலாம் ஆனால் காத்திருந்தால் நேசத்தோடும் நம்பிக்கையோடும் காத்திருந்தால் எதிர்பாராத நேரத்தில் ஆனந்த கூத்தாடும் அழகிய தருணங்கள் கட்டாயம் வரும். இனிய பொழுதுகளுக்காக காத்திருத்தல் சுகமே .. காத்திருங்கள் கவலையோடு அல்ல கனவுகளோடு !

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (15-Oct-17, 7:42 pm)
பார்வை : 679

மேலே