தலித் பூசகர்கள், -------------------------- கேள்விகள் -------------சிந்தனைக்கருத்துக்கள்----- தொகுப்பு
ஜெ
கோயில்களில் தலித் பூசகர்கள் என்பதை இங்குள்ள பிராமணர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் இப்படி நடப்பது சாத்தியமா என்ன?
எஸ்.ராகவன்
***
அன்புள்ள ராகவன்,
கோயில்களில் பூசைசெய்துவருபவர்களுக்கு இது தொழில்சார்ந்த போட்டி. ஆகவே அவர்களில் ஒருசாரார் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். ஆனால் இன்று பிராமணர்களிலேயே பெரும்பாலானவர்களுக்கு ஆலயப்பூசையில் ஒரு தொழில் என்றவகையில் ஈடுபாடில்லை. சென்னைக்கும் திருச்சிக்கும் வெளியே பிராமணர்கள் மிகமிகக்குறைவு. பல ஊர்களில் பிராமணப்பூசகர்கள் இல்லாமல் பூசைநிகழாத நிலையே உள்ளது. ஆகவே வேறுவழியில்லை, மெல்லமெல்ல பிராமணரல்லா பூசகர்கள் என்னும் நிலை வந்தே தீரும்.
அதை பிராமணர்களில் பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பதே என் எண்ணம். ஏனென்றால் இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த அத்தனை சமூகமாற்றங்களையும் மதச்சீர்திருத்தங்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு தங்களை மாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பழைமையின் எதிர்ப்பை தர்க்கபூர்வமாக விளக்கமுடிகிறதா இல்லையா என்பது மட்டுமே கேள்வியாக இருக்கிறது
ஆனால் பிராமணரல்லா உயர்சாதியினர் ஏற்பதுதான் மிகக்கடினம். இன்றும்கூட கண்டதேவியின் தேரை ஓட்டுவதே கடினம். மதுரை ஆலயநுழைவு நடந்து நூறாண்டு நெருங்கும் வேளையில். தலித் அர்ச்சகர்கள் அமையும் ஆலயத்திற்கு தமிழகத்தின் இடைநிலைச்சாதியினர் ஆதரவளிக்க மாட்டார்கள். அவர்கள் நடுவே எந்தவகையான முற்போக்கு அறிவியக்க ஊடுருவலும் இதுவரை இல்லை. சாதிவெறி அவர்களின் பண்பாடாகவே உள்ளது
அதை மறைக்கவே இங்கே இத்தனை பிராமணவெறுப்பு பேசப்படுகிறது. அது சாதிக்காழ்ப்பின் வெளிப்பூச்சு. இங்கே தலித் பூசகர் வந்தால் பிராமணர் எதிர்ப்பார்கள் என்று என்னிடம் சொன்ன ஒருவரிடம் நீங்கள் ஏற்பீர்களா என்று கேட்டேன். “அவங்களுக்கு தகுதி கெடையாது சார்” என்றார்.
இங்கே தலித் பூசகர் அமைந்ததைப்பற்றி எம்பிக்குதிப்பவர்கள் பெரும்பாலும் கோயிலை இடிக்கவேண்டும் என்று சொல்லும் நாத்திகர்கள். அவர்களைப் புரிந்துகொள்வது மிக எளிது, ஒரே ஒரு சர்க்யூட் மட்டுமே.
அனைத்துசாதிகளும் அர்ச்சகர் என்னும் கோஷம் இங்கே நாற்பதாண்டுகளாக உள்ளது. பலமுயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் ஆலயங்கள் மேல் மதிப்பில்லாதவர்கள் பிராமணர்கள் மேல் காழ்ப்பு கொண்டவர்கள் அதைச்செய்யும்போது அது சாதிக்காழ்ப்பின் விளைவாகவே பொருள்படுகிறது
நடைமுறையில் கேரளத்தைப்போல இடைநிலைச் சாதிகள் ஆகமங்களைக் கற்று வைதிகமரபு கொண்ட பெருங்கோயில்களில் பூசகர்களாகி அவர்களுக்கு பரவலான ஏற்பு உருவானபின்னர் அடுத்தபடியாகவே தலித் பூசகர்கள் என்னும் நடவடிக்கைக்கு ஆதரவிருக்கும்.
ஜெ
***
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
என்னுடைய மற்றும் நண்பர்களின் கேரள தலித் அர்ச்சகர் நியமனம் பற்றிய சந்தேகங்களுக்கு மிகத்தெளிவான தங்களின் விரிவான கட்டுரைக்கு நன்றி.அதில் என்னளவில் புரிந்துகொண்ட முக்கியமான கருத்துக்களை கீழே கொடுத்திருக்கிறேன்.
1) இது தற்போது ஊடகங்களிலும்,பொதுவெளிகளிலும் கூறப்படுவதுபோல் முழுக்கமுழுக்க “பினராயி விஜயன்” தலைமையில் இயங்கும் இடதுசாரி
அரசின் அதிரடி முடிவு மட்டுமல்ல பலரும் இதற்காக காலகாலமாக முயற்சி செய்துவந்திருக்கிறார்கள் என்பது.
2) குடும்ப பரம்பரை,பிராமண வகுப்பில் பிறப்பது மட்டுமே ஆலயத்தில் இறைவனுக்கு பூஜை செய்யும் தகுதியை ஒருவருக்கு கொண்டு வந்து விடாது என்பது.
3) தகுதியும்,ஆர்வமும்,பக்தியும் உடைய எவரும் அர்ச்சகராக வரலாம் என்பது.
4) முக்கியமாக இறை நம்பிக்கையில்லாததோடு மட்டுமல்லாமல் ஹிந்து கடவுளர்களை இழிவுபடுத்தி (சொல்லிலும்,செயலிலும்) செயல்பட்டு
வரும் தமிழகத்தை சேர்ந்த திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த முன்னெடுப்புக்கு எந்த வகையிலும் அருகதை இல்லாதவர்கள் என்பது.
இறுதியாக ஒரு ஆதங்கம் கேரள கோயில்களில் ‘ஆடை குறியீடு’ (Dress Code) பக்தர்களுக்கும் கண்டிப்பாக பேணப்பட்டு வரும் நிலையில் ‘யது கிருஷ்ணா’ அவர்களுக்கு வழங்கப்படும் கோயிலின் “பூர்ண கும்ப மரியாதையை” சட்டை அணிந்து கொண்டு வழங்கியது மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்தியது. (இங்கு தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம் அதிகாரம்,அந்தஸ்து உள்ளவர்கள் சில கோயில்களில் கருவறைக்குள்ளேயே சட்டை அணிந்து செல்லலாம்,யாரும் கேட்க முடியாத அவல நிலை)
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி
கேரளத்தின் ஆலயச்சடங்குகள் முறைப்படித்தான் பேணப்படும். ஆதங்கங்கள் தேவையில்லை. அந்தந்த ஊரின் முறைமைகளுக்கு சிறிய மாற்றங்கள் இருக்கும்
யதுகிருஷ்ணாவை ஆலயத்தின் பூசகரோ வைதிகரோ பூர்ணகும்பம் அளித்து வரவேற்கவில்லை. அது ஊர்க்காரர்களால் செய்யப்பட்டது. அவருடைய வரலாற்றுச்சிறப்புமிக்க நுழைவை கௌரவிக்கும்பொருட்டு. அது எதிர்பாராததும் கூட.பூரணகும்ப வரவேற்பு கேரளத்தில் இல்லங்களிலேயேகூட அனைவராலும் செய்யப்படுவதுண்டு. செய்பவரும் சட்டையுடன்தான் இருக்கிறார்
மேலும் யதுகிருஷ்ணா அந்தப்புகைப்படத்தில் சட்டையுடன் இல்லை. அவருக்குப் போர்த்தப்பட்ட சால்வையை அணிந்திருக்கிறார்.
யது கிருஷ்ணா சந்தனப்பிரசாதம் வழங்கும் முறையைக் கவனியுங்கள். பெறுபவரைத் தொடாமல் கையில் போடுகிறார். இது கேரள மரபு. தாந்திரிக விதிப்படி நீராடி சங்கல்பம் எடுத்துக்கொண்ட பூசாரி மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும். எவரையும் அவர் தொடக்கூடாது.தொட்டால் மீண்டும் நீராடவேண்டும். சென்றகாலங்களில் இது பிராமணச் சாதிவெறி என்றும் தீண்டாமை என்றும் சிலரால் தமிழகத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்று தலித் பூசகர் வந்தாலும் அதில் மாற்றமில்லை
ஜெ
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிராமணர் அல்லாத தலித் உள்ளடக்கிய 36 பேரை அர்ச்சகர்களாக நியமனம்
[திருவல்லா வளஞ்சவட்டம் மணப்புறம் சிவன் கோயிலில் பூசாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் பக்தர்களால் வரவேற்கப்பட்டு ஆலயத்திற்குள் நுழைந்து முதல்மணியோசையை எழுப்பும் முதல் தலித் பூசகர் யதுகிருஷ்ணா]
மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு வணக்கம் ,
சமீபத்தில் வந்த கேரளத்தை பற்றிய செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது . திருவிதாங்கூர் சமஸ்தானம் பிராமணர் அல்லாத தலித் உள்ளடக்கிய 36 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்தது பற்றியது.போதுமான கல்வியறிவும் இலக்கிய வாசிப்பும் நிறைந்த ஒரு மாநிலத்தில் இத்தகைய மாற்றம் வருவது இயல்பே.
சமுதாய அடுக்கில் இதன் மூலம் ஏற்படும் மாற்றம் என்ன ? ஒரு புறம் கம்யூனிச சிந்தனைகளும் மறுபுறம் ஜாதிய பெருமிதம் என முரண் கொண்ட ஒரு நிலத்தில் இத்தகைய முன்னெடுப்பு உயிர்ப்புடன் இருக்குமா ? உலகமே ஒரு வணிக சந்தையாகி விட்ட ஒரு காலத்திலும் இத்தகைய முன்னெடுப்புகள் அவசியமாக இருப்பது எதை குறிக்கிறது ? சங்க கால சடங்குகள் இன்னமும் வழக்கத்திலிருக்கும் சில கோவில்கள் உள்ள கேரளத்தில் அந்த தொன்மை சங்கிலி விடுபட்டு விடுமா?
கடவுளின் தேசம் இதை எப்படி எதிர் கொள்ளும்? இல்லை இந்த கேள்வியே தேவையற்ற ஒன்று என சொல்லும் படி இந்த மாற்றம் ஒரு சலனமற்ற நதியாக ஓடி விடுமா?
- ஜெயகுமாரன்
அன்புள்ள ஜெயமோகன்,
கேரளத்தில் ஆறு தலித்துகளையும், ஏறக்குறைய 30 பிராமணர் அல்லாதோரையும் அர்ச்சர்களாக நியமித்து, பினராயி விஜயன் புரட்சி செய்துள்ளார்; தமிழகத்தில் பிராமணர்களே கோவில்களில் கோலோச்சுகின்றனர், சமூகநீதி நிலைநாட்டப்படவில்லை என தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களிலேயே பரம்பரையாக அர்ச்சகர்களாக இருக்கும் பூஜாரிகள் பிராமணர் அல்லாதவர்கள்தான், இது இன்று நேற்றைய நடைமுறை அல்ல, பல பத்தாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது, அவை பெரும்பாலும் கிராமக் கோவில்களாக இருக்கின்றன, இவற்றில் பெரிய கோவில்கள் அநேகமாக எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் பிராமணர் அல்லாத ஜாதியினர் கடவுள் பூஜை செய்ய தமிழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இல்லையா?
திருவட்டார் ஆதிகேசவனுக்கு ஆராதனம் செய்பவர் கூட பிராமணர் அல்லாதவர் என்பதாகத்தான் கேள்வி. கேரளத்தில் இவ்விஷயத்தில் தேவஸ்வம் போர்டின் நிலை என்ன? கேரள நடைமுறை என்ன?
தலித்துகள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவதில், என்னளவில் அபிப்ராய பேதம் ஏதும் இல்லை, ஆண்டவன் சந்நிதியில் ஜாதி பேதத்திற்கு இடமில்லை, ஆனால் இதில் உள்ள அரசியல் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. விளக்கவும்!
பாஷ்யம்.
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
இன்றுதான் தங்களின் ‘மெல்லியநூல்‘ சிறுகதையை படித்து காந்திஜியால் போற்றப்பட்ட அய்யன்காளி போன்றவர்களின் பெருமைகளை மேலும் அறிந்துகொண்டேன்.அத்துடன் இன்று ‘தி ஹிந்து’நாளிதழில் படித்த இந்த செய்தியை நீங்களும் அறிந்திருப்பீர்கள் -Dalit youth Yadukrishna appointed as head priest of temple in Kerala .கேரளம் மனப்புரம் சிவன் கோயிலில் ‘புலையர்’ இனத்தைச் சேர்ந்த யதுகிருஷ்ணா மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?.உண்மையிலேயே இது ஒரு பெருமைப்படத்தக்க வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சியல்லவா?.அய்யன்காளி,நாராயணகுரு போன்ற பெரியவர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த பயனல்லவா?.அதுவும் அந்த இளைஞர் தனது 12 வயது முதல் பத்து வருடங்களாக அனிருத்தன் தாந்திரி அவர்களிடம் தாந்த்ரீகம் பயின்று தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்று நியமனத்தை பெற்றிருக்கிறார்.இவரின் குருவும் பிறப்பால் அல்ல ஒருவனின் நற்செயலால்தான் பிராமணனாக கருதப்படுகிறான் என்று சரியாக கூறியிருக்கிறார்.இந்த இளைஞரும் இதை ஒரு பணியென்று கருதாமல் பக்தியுடனும்,அர்பணிப்புணர்வுடனும் கோயில் சடங்குகளை செய்யப்போவதாக கூறியுள்ளார்!.
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள நண்பர்களுக்கு
நான் இதைப்பற்றி என்ன சொல்வேன் என்பது என் எழுத்துக்களுடன் அறிமுகமுள்ள அனைவருக்கும் தெரியும். நாராயணகுரு தொடங்கிவைத்த புரட்சியின் அடுத்தபடி. ,இயல்பான பரிணாமம் என்றே இதை எண்ணுகிறேன்.
இதைப்பற்றி தமிழகத்தில் பொதுவெளியில் ஒரு மௌனம் நிலவுகிறது. ஆனால் உள்ளூர இங்கே சில விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையை ஈ.வே.ரா பக்தர்கள் வரவேற்பதும், ஈ.வேரா.வுடன் தொடர்புபடுத்தி இதை சிலர் பேசுவதும் உடனடியாக இந்துக்களிடையே எதிர்விளைவுகளையே உருவாக்குகின்றன. கோயில்களை பீரங்கிவைத்துப் பிளக்க விரும்பியவர் அவர். அவருடைய இந்து வெறுப்பு, பிராமண வெறுப்பு மற்றும் நாஜி பாணியிலான இனவெறிப்பிரச்சாரத்துடன் இணைத்தே இதை இங்கே பலர் புரிந்துகொள்கிறார்கள்.
அதையொட்டியே பலவகையான ஐயங்கள் சூழலில் சிலரால் எழுப்பப் படுகின்றன. ஒன்று, இது கேரள இடதுசாரி அரசு எடுக்கும் அதிரடி முடிவு. ஆலயச்சடங்குங்களை அரசு இப்படி மனம்போனபோக்கில் மாற்றக்கூடாது. இரண்டு, தகுதியற்றவர்கள் இதனால் பூசகர்கள் ஆகிறார்கள். இது ஆலயங்களை அழிக்கும். மூன்று, நாத்திகர்கள் எப்படி ஆலயவழிபாட்டில் தலையிடலாம். உங்கள் கேள்விகளும் மிகத்தோராயமாக அதையே சுட்டுகின்றன. அவற்றுக்கான பதிலையே இங்கே கூறவிழைகிறேன்.
13 தலித்துக்கள் உடபட 36 பிராமணரல்லாத பூசாரிகளை நியமிக்கும் ஆணை ஒரு புரட்சியின் தொடக்கமே. ஆனால் பலரும் எண்ணுவதுபோல இது இடதுசாரி அரசின் ‘அதிரடி’ முடிவு ஒன்றும் அல்ல. கடந்த கால்நூற்றாண்டாகவே இதற்கான இயக்கமும் பலவகையான முயற்சிகளும் நடந்துள்ளன. முப்பதாண்டுகளுக்கு முன்னரே பிராமணரல்லாத ஜாதிகளிலிருந்து பூசாரிகள் கேரள ஆலயங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. அவர்கள் பூஜைசெய்த ஆலயங்கள் பக்தர்களால் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் இன்று அவர்கள் ஏற்கப்பட்டுவிட்டனர். கேரளம் முழுக்க ஈழவர்கள் பூசை செய்யும் தொன்மையான மரபுள்ள பல பேராலயங்கள் இன்றுள்ளன.
தலித்துக்களுக்கு பூசாரிகளாக இடமளிப்பது குறித்து உயர்சாதியினரிடம் கடுமையான எதிர்நிலைபாடு இருந்தது. அதைத் தொடர்ந்து பலகோணங்களில் விவாதங்கள் நிகழ்ந்துவந்தன. இன்று பொதுவான ஏற்பு நிகழ்ந்துள்ளமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அரசோ நாத்திகர்களோ எடுத்த முடிவு அல்ல.
[அஜய் தறயில்]
கேரளத்தின் தேவஸ்வம்போர்டுகள் இங்குள்ள அறநிலையத்துறை போல அரசுத்துறைகள் அல்ல. அவை சுதந்திரமான அமைப்புகள். அரசுநிதியும் வழிகாட்டுதலும் மட்டுமே அவற்றுக்குமேல் உள்ள கட்டுப்பாடு. திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சுதந்திரத்திற்கு முன்னரே திருவிதாங்கூர் மன்னரால் உருவாக்கப்பட்டது. 1950ல் இன்றைய வடிவில் autonomous body ஆக கட்டமைக்கப்பட்டது. அதன் கீழே பள்ளிகளும் கல்லூரிகளும் ஆலயக்கலைப் பயிற்சிமையங்களும் கலையமைப்புகளும் உள்ளன.
இன்றுவரை அதன் செயல்பாடு குறித்த எந்த புகாரும் வந்ததில்லை. சொல்லப்போனால் தன் விதிகளை தானே மூர்க்கமாகக் கடைப்பிடிப்பது பற்றிய புகார்களே வந்துள்ளன. தலைப்பாகையைக் கழற்ற மறுத்ததனால் இந்திய ஜனாதிபதியான கியானி ஜெயில்சிங்கை ஆலயத்தில் அனுமதிக்க மறுத்தது உட்பட.
அவற்றின் உறுப்பினர்கள் நூற்றுக்குநூறு ஆலயவழிபாட்டாளர்கள். அறியப்பட்ட சமூக, ஆன்மிகச் செயல்பாட்டாளர்கள். நூற்றுக்குநூறு ’லாபம்’ அற்ற கௌரவம் மட்டுமே அளிக்கும் பதவி அது. இன்றிருக்கும் குழுவில் காங்கிரஸ்காரர்களே அதிகம்
வெறும் அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் அல்ல அவர்கள். ஆகவே முடிவெடுக்கும் உரிமையும் தகுதியும் அவர்களுக்குண்டு. கடந்தகாலத்திலும் இதேபோன்ற பல முக்கியமான முடிவுகளை அவர்கள் எடுத்துள்ளனர். அவர்கள் மேல் அரசு தன் முடிவுகளைத் திணிக்க முடியாது. ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் வலுவாக உள்ள கேரளத்தில் அது எவ்வகையிலும் சாத்தியமல்ல. ஆகவே இது கேரள அரசின் முடிவு அல்ல.
சென்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே காங்கிரஸ்காரரும் இன்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு உறுப்பினருமான அஜய் தறயில் போன்றவர்கள் இந்த முடிவை வலுவாக முன்வைத்து வாதிட்டு வந்தனர். பொதுக்கருத்தை உருவாக்க அஜய் தொடர்ந்து முயன்றார்.அவர்களின் குரல்கள் அடைந்த ஏற்பே இன்றைய அரசு இம்முடிவை எடுப்பதற்கான காரணம். அதாவது இது முந்தைய திமுக ஆட்சி ஆலயங்களின் புத்தாண்டுக்கணக்கை ஒரே ஆணையால் மாற்றியமைத்ததுபோல ஓர் அரசியல் அதிரடி ஆணை அல்ல, இந்து சமூகத்திற்குள் நிகழ்ந்த தொடர்விவாதம் மூலம் எட்டப்பட்ட ஒன்று.
இம்முடிவு ஆலயச்சடங்குகளை அறியாதவர்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பதாகுமா? சுவாரசியமான ஒரு நிகழ்வையும் சுட்டவேண்டும். சபரிமலை ஆலயத்திற்கு பரம்பரை அர்ச்சகர்கள்தான். கேரளத்தின் சிலகுடும்பங்களிலிருந்தே அவர்கள் வரமுடியும். அவர்களில் ஒருவரான கண்டரரு மோகனரு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வந்தன. அவர் அனைத்து தாந்த்ரீக விதிமுறைகளையும் மீறினார். கன்னட நடிகை மாலாஸ்ரீயை ஆலய சன்னிதி வரை அனுமதித்தார். அது குறித்த விசாரணை ஜஸ்டிஸ் கே.எஸ்.பரிபூர்ணன் முன்னிலையில் நிகழ்ந்தது. மோகனருக்கு தந்திரவழிபாட்டு நெறிகளைப் பற்றி மட்டும் அல்ல இந்து புராணங்கள், எளிய சடங்குகளைப்பற்றிக்கூட அடிப்படை அறிவேதும் இல்லை, என நீதிபதி அறிக்கை அளித்தார்.
ஆலயப்பூசகர் குறித்த விவாதத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. குடும்பமரபு முறையில் பூசை செய்யப்படும் பல ஆலயங்களில் அடிப்படைப் பயிற்சிகூட இல்லாதவர்கள் பொறுப்புக்கு வருகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. ஆலயங்களின் பூசகர்களுக்கு தெளிவான அடிப்படைத் தகுதிகளை வரையறைசெய்வதும், வெளிப்படையான தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதும், ஆலயநெறிகள் அவர்களால் மிகச்சரியாகப் பேணப்படுவதை உறுதிசெய்வதும் அவசியம் என்ற கூற்று வலுப்பெற்றது. முறையாகக் கற்ற தகுதியான பூசகர்கள் சாதியைக் காரணம் காட்டி அகற்றப்பட எந்த தகுதியும் இல்லாதவர்கள் சாதியினாலேயே நியமனம் செய்யப்படுவதே உண்மையில் ஆலயங்களை அழிப்பது என மக்கள்முன் வைக்கப்பட்டது.
அவ்வாறுதான் இந்த பூசகர்தேர்வு நிகழ்ந்துள்ளது. அதாவது ஆலயச்சடங்குநெறிகளும் ஆசாரங்களும் கைவிடப்படவில்லை. நம்பிக்கைகள் புறக்கணிக்கப்படவில்லை. அவை மேலும் திட்டவட்டமாக பேணப்படுகின்றன. அதேசமயம் ஆலயச்சடங்குகளுடனும் ஆசாரங்களுடனும் பின்னிப்பிணைந்திருந்த சாதியடையாளம் மட்டும் காலத்திற்கேற்ப அகற்றப்படுகிறது.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூசகர்கள் வேதக்கல்வி பெற்றவர்கள். கேரள ஆலய பூசைமுறைமையான தந்திரவிதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆலயச் சடங்குகளிலும் இந்து ஆசாரங்களிலும் வழிபாட்டுமுறைகளிலும் முறைப்படி பயிற்சிபெற்றவர்கள். போட்டித்தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றிபெற்றவர்கள்.பூசகர்களாக ஆவதை வாழ்க்கையின் இலக்காகக் கொண்டவர்களும்கூட. ஏனென்றால் கேரளத்தில் பூசகர்பணி என்பது நிலையான அரசு ஊதியம் பெறும் ஒன்று என்றாலும்கூட அது இன்றையச் சூழலில் பெரியதல்ல. அந்தப்பணி அளிக்கும் சமூகக் கௌரவமும் ஆன்மிகமான நிறைவுமே முக்கியமானது என அவர்களில் ஏறத்தாழ அனைவருமே கூறியிருக்கிறார்கள்.
இது சாத்தியமானது எப்படி என நாம் பார்க்கவேண்டும். நாராயணகுரு தன் இயக்கத்தைத் தொடங்கியபோதே ஈழவர்களுக்குரிய வேதகல்வியை, வேள்விப்பயிற்சியை ஆரம்பித்திருந்தார். இன்று நான்காம் தலைமுறையாக அந்த மரபு தொடர்கிறது. கேரளம் முழுக்க பல பிராமணரல்லாத வேதவிற்பன்னர்கள் இன்று உள்ளனர். வேதபாடசாலைகளும் உள்ளன.
[ பரவூர் ஸ்ரீதரன் தந்திரி]
உதாரணமாக பரவூர் ஸ்ரீதரன் தந்திரிகளைச் சுட்டிக்காட்டலாம். ஸ்ரீதரன் தந்திரிகள் கெடாமங்கலம் களவம்பாற வீட்டில் மாமன் வைத்தியருக்கும் எடவனக்காடு கடயந்தரவீட்டில் பார்வதியம்மாவுக்கும் மகனாக 1925ல் பிறந்தார். அடிப்படைக் கல்விக்குப்பின்னர் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளிடமிருந்தே வேதங்களையும் சம்ஸ்கிருதத்தையும் தந்திரவிதிகளையும் கற்றுத்தேர்ந்தார். சோதிடம், புரோகிதச்சடங்குகள், ஆலயச்சடங்குகள் செய்வதில் பெருமதிப்புக்குரியவராக கருதப்பட்டார்
ஸ்ரீதரன் தந்திரிகள் இருநூற்று எட்டு புதுஆலயங்களில் இறைநிறுவல் சடங்குகளை [தேவப்பிரதிஷ்ட்டை] செய்திருக்கிறார். ஐம்பதாண்டுகளாக கேரளத்தின் முதன்மையான பேராலயங்களில் தந்திரியாகவும் தலைமைத்தந்திரியாகவும் பணியாற்றியிருக்கிறார். தேவயக்ஞபத்ததி, பித்ருகர்மவிதி, குருசிஷ்யசம்வாதம் உட்பட கேரளத்தில் பயிலப்படும் முதன்மையான தந்திரநெறி சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். 2011ல் மறைந்தார்.
அவருடைய ஸ்ரீநாராயண தாந்த்ரிக வித்யாலயம் தலித்துக்கள் உட்பட அனைவருக்கும் அக்கல்வியை வழங்குகிறது. அவருடைய மைந்தர் பரவூர் ராகேஷ் தந்திரிகள் இன்று பெரும்புகழ்கொண்ட தாந்திரிக, வேத ஆசிரியராக அறியப்படுகிறார். பரவூர் ராகேஷ் தந்திரிகள் சபரிமலையிலும் தந்திரியாக முன்னரே பணியாற்றியிருக்கிறார் இவ்வாறுதான் பூசகர்களுக்குரிய கல்வி அனைவரையும் சென்றடைந்தது. அதன் அடுத்தபடிதான் நாம் இன்று காணும் அறிவிப்பு.இதிலுள்ள ’அரசியல்’ இதுதான்.
பாஷ்யம் அவர்கள் சொன்னதுபோல திருவட்டார் தேவாலயத்தில் பிராமணரல்லாத பூசகர் இல்லை.துளு பேசும் பிராமணப் பூசாரிகள் மட்டுமே அங்கே பூசைசெய்யமுடியும். அவர்கள் போற்றிகள் என அழைக்கப்படுகிறார்கள். பழைய திருவிதாங்கூரிலிருந்து 1735ல் நம்பூதிரிகள் வெளியேற்றப்பட்டனர். ஒரே இரவில் மார்த்தாண்டவர்மா மகாராஜாவால் அவர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்பது வரலாறு. அங்கே துளுபிராமணர்கள் நியமிக்கப்பட்டனர்.
திருவட்டார் ஆலயத்தின் தலைமைப்பூசகர் நம்பி என அழைக்கப்படுவார். அவர் நான்கு ஆண்டுக்காலத்திற்கு நியமிக்கப்படுவார். அப்போது அவர் குடும்பத்திலிருந்து பிரிந்து, தன்னந்தனியாக, இருவேளை உணவுண்டு துறவிக்குரிய வாழ்க்கை வாழவேண்டும். ஆலயத்திற்கு அன்றி வேறெங்கும் செல்லக்கூடாது. அவருடன் அவருடைய மாணவராகிய அனுஜநம்பி மட்டுமே தங்கவேண்டும். ‘மறைக்குடை’ இல்லாமல் நீராடவும் செல்லக்கூடாது. இறுதியாக என் தந்தையின் நண்பர் நாராயணன் போற்றியின் அண்ணா அப்படி அங்கே நம்பியாக இருந்தார். இன்று அந்த மரபு ஏதும் அங்கே பேணப்படுவதில்லை. சாதாரணமாக ஒரு துளுபிராமணர் பூசை செய்கிறார்
ஆலயவழிபாட்டில் அரசு தலையிடலாமா என்ற கேள்விக்கும், ஆலயநெறிகள் மாற்றப்படலாமா என்னும் கேள்விக்கும் இதுவே பதில் – தலையிடாத காலம் என ஒன்று இருந்ததே இல்லை. ஆலயநெறிகள் வசதிக்கேற்ப மாறிக்கொண்டேதான் உள்ளன. ஆக்கபூர்வமான மாறுதல் வரவேற்கப்படுகிறது. ஆக்கபூர்வமான மாறுதல் என்றால் என்ன? நான் நான்கு விதிகளைச் சுட்டிக்காட்டுவேன்.
1. ஆலயம் என்பது ஓரு குறியீட்டமைப்பு. அந்த அடிப்படைக்குறியீட்டை மாற்றங்கள் சிதைக்கலாகாது. ஆலயசடங்குகள், பக்தர்களின் நடைமுறைகள் ஆகிய இரண்டு தளங்களிலுமே இது செல்லுபடியாகும்.
உதாரணமாக சபரிமலைக்குப் பெண்பூசாரிகள் நியமிக்கப்பட்டால் என்ன ஆகும்? அய்யப்பன் நித்யபிரம்மசாரி என்று உருவகம் செய்யப்பட்டுள்ள குறியீடு சிதையும். ஆலயங்களின் கருவறைக்குள் பக்தர்கள் அனைவரும் செல்லலாம் என்றானால் என்ன ஆகும்? அது நுண்வடிவில் தேவர்களும் தெய்வங்களும் நிறுவப்பட்ட இடம், அங்கே நோன்புகொண்டவர்கள் மட்டுமே நுழைவார்கள் என்னும் குறியீடு அழியும். அது காலப்போக்கில் ஆலயத்தையே அழிப்பதுதான்
இன்று தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பது இத்தகைய ஆலய அழிப்புதான். மூலச்சிலைகள் மேல் கந்தலாடையை ஆண்டுக்கணக்கில் சுற்றி வைக்கிறார்கள். பெயிண்டால் வரைகிறார்கள். ஆகமமுறைப்படி ஆடை செதுக்கப்பட்ட சிலைகள் மேல் கோவணம் கட்டி விடுகிறார்கள். அந்தந்த தெய்வங்களுக்குரிய தனிப்பட்ட பூசைகள் கைவிடப்படுகின்றன. சோதிடர்களின் விருப்பப்படி பூசைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
கேரளத்தைப்போல தமிழகத்தின் ஆகமமுறைகள் நூல்வடிவில் தொகுக்கப்பட்டு அறநிலையத்துறையால் வெளியிடப்படவேண்டும். அவை முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என அரசும் பக்தர்களும் கண்காணிக்கவேண்டும். இன்றைய தமிழகத்தில் அனேகமாக எந்த அர்ச்சகருக்கும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சார்ந்த ஆகமப்பயிற்சியோ வேதக்கல்வியோ, திட்டவட்டமான ஆசாரப்பயிற்சியோ கிடையாது. பிராமணர் என்னும் தகுதி, குடும்ப மரபு அன்றி வேறெந்த தகுதியும் இல்லை. இதுவே ஆலயங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.
2 ஆலய வரலாறு சார்ந்த சடங்குகள் மற்றும் நடைமுறைகளை மாற்றக்கூடாது. ஏனென்றால் அவை நாம் அறியாத தொன்மை கொண்டவை. ஓர் ஆலயம் புத்தாண்டுக்கணக்கை ஆவணியில் வைத்திருக்கிறது என்றால் அதற்கு ஒரு வரலாற்றுக்காரணம் இருக்கும். ஓர் ஆலயம் தாழம்பூவை விலக்குகிறது என்றால் அதற்கு இன்னும் நாம் கண்டறியாத வரலாறு இருக்கலாம். அதை அறியாமையால் அரசோ பக்தர்களோ விருப்பப்படி மாற்றலாகாது. அவ்வாறு மாற்றுவது ஆலய அழிப்பு.
ஆனால் இத்தகைய சீர்திருத்தங்கள் எந்த விவாதமும் இல்லாமல் ஆலயங்களைப் பழிக்கும் அரசுகளால் கொண்டுவரப்படும்போது தமிழகத்தில் எந்த வகையான எதிர்ப்புகளும் எழவில்லை. ஏனென்றால் அவை எவருடைய வருமானத்தையும் பறிக்கவில்லை.ஆனால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் என்னும் கோரிக்கை பதறச்செய்கிறது
3 ஆலயத்தின் சிற்ப அமைப்பை மாற்றக்கூடாது. அவை தொன்மையான சில கட்டிட உருவாக்க நெறிகளின்படி அமைந்தவை. அவை பலநூற்றாண்டுகளாக மெல்லமெல்ல உருவாகி வந்தவை. இன்று தமிழகத்தில் சிற்பிகளின் ஒப்புதலோ அறிதலோ இல்லாமல் சோதிடர்களின் கருத்துப்படி ஆலயங்கள் இடித்துக் கட்டப்படுகின்றன. சிற்பங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இதுதான் ஆலய அழிப்பு. இதற்கு எதிராக தமிழகத்தில் ஓர் அலை உருவாகவேண்டும்
4 ஆலயத்தொன்மங்களை உள்ளூர் பூசாரிகளும் பிறரும் விருப்பப்படி மாற்றியமைக்கவும் நூலாக வெளியிடவும் கூடாது. குறைந்தபட்சம் அந்த ஆலயத்தில் அதிகாரபூர்வமாக அது சொல்லப்படக்கூடாது. தமிழக ஆலயங்களில் வெறுமே சொல்லின் ஒலியை வைத்து விருப்பப்படி கோயிலின் தொன்மத்தை கட்டி விடுகிறார்கள். இது ஆலயத்தின் உண்மையான தொன்மத்தை நிரந்தரமாக அழிக்கும். இதுவும் ஆலய அழிப்பே
5 இந்த நான்குவகை அழிப்புகள் நிகழாமல், காலத்திற்கேற்ப, நிகழும் அத்தனை மாற்றங்களும் வரவேற்கத்தக்கவையே
[தெக்கேக்காட்டு கே. கே. அனிருத்தன் தந்திரி]
முன்னரே இந்து ஆலயங்களில் பிராமணர் அல்லாதோர் பூசை செய்வதில்லையா என பாஷ்யம் அவர்கள் கேட்கிறார்கள். ஆலயங்கள் பலவகை. ஒரு வசதிக்காக மூன்றாகப்பிரிக்கலாம். திருவட்டாறு போன்ற மையப்பேராலயங்கள். பகவதி ஆலயங்கள், சாஸ்தா ஆலயங்கள் போன்ற சிற்றாலயங்கள். இட்டகவேலி தேவி போன்ற சிறுதெய்வ ஆலயங்கள். தமிழகத்திலும் சமானமான உதாரணங்கள் உண்டு. மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் முதல்வகை. சமயபுரம் மாரியம்மன் இரண்டாம் வகை. அய்யனார் ஆலயங்கள் மூன்றாம் வகை
சிறுதெய்வ ஆலயங்களில் பிராமணரல்லாதவர்களே பெரும்பாலும் பூசகர்களாக இருக்கிறார்கள். அவை சில சாதிகளுக்குரியவையாக இருப்பதோ. ஊன்படையல் கொண்டவையாக இருப்பதோ அதற்கான காரணங்கள். அவை கிராமப்புற பூசாரிகளால் வழிபாடு செய்யப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் பரம்பரைப் பூசகர்கள்.
சிற்றாலயங்களில் சிலவற்றில் பிராமணரல்லாத பூசகர்கள் உண்டு. அவர்கள் சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவோ அவ்வாலயத்தின் சில குறிப்பிட்ட வகையான நெறிமுறைகளை ஒட்டி அமைபவர்களாகவோ இருப்பார்கள். ஆனால் சென்ற இருபத்தைந்தாண்டுகளில் மேற்கண்டவகை ஆலயங்களிலும் பிராமணர்களே பூசகர்களாக வந்துகொண்டிருக்கிறார்கள். பிற சாதியினருக்கு ஆர்வமில்லை என்பதுதான் முதன்மைக்காரணம்.
ஆனால் சென்ற ஆயிரமாண்டுகளாக பேராலயங்களில் எங்கும் பிராமணரல்லாத சாதியினர் பூசகர்களாக இருந்ததில்லை. சோழர்கள் ஆட்சிக்காலத்திலேயே அது வகுக்கப்பட்டுவிட்டது. இதை ‘ஆதிக்கம்’ என்றோ ‘கைப்பற்றல்’ என்றோ நான் எண்ணவில்லை. அன்று எல்லா தொழிலும் சாதியடிப்படையில் வரையறை செய்யப்பட்டது. பூசகர்தொழிலும் அவ்வாறே. வேதக்கல்வியும் சடங்குப்பயிற்சியும் நோன்பும் நெறிகளும் அவர்களுக்கு வகுத்தளிக்கப்பட்டன.
இன்று அனைத்துத்தளங்களிலும் சாதிமரபு இல்லாமலாகிவருகிறது. பூசகர்தொழிலில் மட்டும் அதை பிடிவாதமாக நிலைநிறுத்துவதென்பது ஏற்றதல்ல. அத்துடன் பூசகர்தொழில் என்பது சமூக அந்தஸ்து சார்ந்தது என்பதனால் அதை ஒரு சாதிக்குரியதென்றாக்குவது ஒருவகை சமூக ஒதுக்குமுறையாகவே கருதப்படும். இன்று அந்த பழையமுறைகளை கடந்தாகவேண்டும் என்னும் நிலை வந்தணைந்துள்ளது.
ஆகமங்களில் பிராமணர்கள் மட்டுமே பூசை செய்யவேண்டும் என்று சொல்லப்படவில்லை. பிற்கால ஆகமத்திரிபுகளையும் கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளலையும் செய்தே அவ்வாறு சிலர் வாதிடமுடிகிறது. அவர்கள் நோக்கம் உண்மையை அறிவதுமல்ல. திருவிதாங்கூர் தேவஸ்வம் ஆவணங்கள் இதை விரிவாகவே சொல்கின்றன.
ஆகமங்கள் பூசைமுறைமைகள், மரபுகள் பற்றியே சொல்கின்றன. சென்றகாலங்களில் அவ்வாறு மரபார்ந்த பயிற்சி பிற சாதியினருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை அவ்வளவுதான். ஆகவே ஆகமமுறைப்படி பூசைநிகழவேண்டுமென்றால் பிராமணரே பூசை செய்யவேண்டும் என்ற கூற்று பொருளற்றது. ஒவ்வொரு ஆலயத்திலும் மரபுமுறைபூசகர்களே பேணப்படவேண்டும் என்றால் சென்ற முப்பதாண்டுக்காலத்தில் பிராமணப்பூசகர்கள் பல சிற்றாலயங்களில் பூசகர்களாக ஆனது எப்படி நியாயப்படுத்தப்படும்? மரபுசார் பூசாரிகளின் பயிற்சியின்மையும் அக்கறையின்மையும் உருவாக்கும் அழிவுகளைக் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம்.
தமிழக ஆலயங்களில் ஆகமமுறைகள் எவ்வகையிலும் பேணப்படுவதில்லை. சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் பணம்கொடுத்தால் பக்தர்களை கருவறைக்குள்ளேயே கொண்டுசென்று நிறுத்துவதைக் கண்டேன். கருவறைக்குள் பூசை செய்தபடியே கூச்சலிடுகிறார்கள், அரட்டையடிக்கிறார்கள். வேடிக்கைபேசிச் சிரிக்கிறார்கள். செல்பேசியில் பேசுகிறார்கள். ‘நேயர்’ விருப்பப்படி பூசைகளைச் செய்கிறார்கள். இதுதான் காலப்போக்கில் ஆலயவழிபாட்டை அர்த்தமிழக்கச் செய்வது.
எந்தக்காரணத்திற்காக பிராமணர் என்னும் தனிவகுப்பினர் பூசைகளைச் செய்யவேண்டுமென மரபில் வகுக்கப்பட்டதோ அந்தக்காரணம் இன்று அழிந்துவிட்டது, உண்மையில் நேர்எதிராகவே ஆகிவிட்டது. ஆகவே அனைத்துச்சாதியினரிடமிருந்தும் தகுதியும் நம்பிக்கையும் உள்ளவர்கள் அர்ச்சகர்களாக வருவதே நல்லது. எவர் எதிர்த்தாலும் எதிர்காலம் அதுவே. ஆலயப்பிரவேசத்தை அன்று எதிர்த்தவர்களின் நிலையில் இன்று சிலர் இருக்கலாம், ஆனால் காலம் அவர்களைக் கடந்துசெல்லும்.
ஆனால் தமிழகத்தில் ஆலயத்தை வெறுக்கக் கற்றுத்தரும் அரசியல் தரப்பினரிடமிருந்து இந்த சீர்திருத்தங்கள் வரக்கூடாது. அவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை. அவர்கள் வெறுப்பையே உருவாக்க முடியும். ஆலயங்களை அழிப்பதைப்பற்றிப் பேசியபடி, இந்துமதம் அழியவேண்டும் என வாதிட்டபடி இதைப்பற்றிப் பேசுபவர்கள் உண்மையில் இந்த தேவையான மாற்றத்தை தோற்கடிக்கிறார்கள். இந்துமதம் வாழவேண்டும். அது அறச்சார்பும் மானுடநேயமும் கொண்டிருக்கவேண்டும் என நம்பும் தரப்பிலிருந்தே மாற்றத்திற்கான குரல்கள் எழவேண்டும்
கடைசியாக ஒன்று. உண்மையிலேயே பிராமணர்கள் பூசைசெய்யும் ஆலயங்களில் மட்டுமே ஞானமும் பக்தியும் உண்டு என நம்புபவர்கள் என்ன செய்வது? அவர்கள் தங்களுக்குரிய ஆலயங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான். பேராலயங்கள் மன்னர்களால் உருவாக்கப்பட்டவை. ஆகவே அவை இந்துக்கள் அனைவருக்கும் உரியவை. அவை ஜனநாயக காலத்திற்கேற்ப மாறியாகவேண்டும்.
சீர்திருத்தங்கள் நிகழ இரு அடிப்படைகள் தேவை. ஒன்று கேரளம்போல, முறையான வேதக்கல்வியும் பூசைப்பயிற்சியும் அளிக்கும் அமைப்புகளும் மரபுகளும். இரண்டாவதாக அவற்றைச் சரிவர நோக்கி தேர்ந்தெடுக்கும் நேர்மையான நோக்கமுள்ள அமைப்பு. வடக்குபரவூர் மூத்தகுந்நம் ஸ்ரீ குருதேவ தந்த்ர வித்யா பீடத்தின் மாணவர்தான் முதல்முறையாக தலித் பூசகராக பதயேற்ற யதுகிருஷ்ணன்.அக்குருகுலத்தில் இருந்து மூன்று தலித் மாணவர்கள் அர்ச்சகர்களாக இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவருடைய ஆசிரியர் தெக்கேக்காட்டு கே. கே. அனிருத்தன் தந்திரி புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர், வேதபண்டிதர், தாந்திரிகநெறி தேர்ந்தவர். யதுகிருஷ்ணன் பதவி ஏற்கும் ஒளிக்காட்சியில் அவருடைய அடக்கமும் அறிவும் வெளிப்படுகிறது. ஆசிரியர் நேரில் வந்திருந்து வாழ்த்துகிறார். ஊரார் அவரை வணங்க அவர் குருவின் கால்களை தொட்டு வணங்கி ஆலயத்திற்குள் நுழைகிறார். https://youtu.be/-yzDbC5YFMc
மூன்றாவதாக ஒன்றுள்ளது, கேரளம் போல தொடர்ந்த விவாதங்கள் மூலம் இந்துசமூகத்தின் கருத்தியலில் தெளிவான மாற்றங்களை உருவாக்கினால்தான் இச்சீர்திருத்தங்கள் நிலைக்கும். இல்லையேல் வெறும் சலசலப்பாகவே எஞ்சும். அந்த வளர்மாற்றம் இங்கும் சற்றுத்தாமதித்தேனும் நிகழுமென்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்துமதம் சடங்குகளால் ஆனதல்ல, அதற்கப்பால் செல்லும் தத்துவ சாரம் கொண்டது. மெய்மையை மையமாக்கியது.
ஜெ