வெளிநாட்டுவாழ் மென்பொறியாலனும் மரணமும் - ஒரு கவிதை
காற்று உறையும்,
காலையில் கதிர் மறையும்
வினோத மண்ணினிலே;
எட்டுத் தோல் கொண்ட
ஒரு மனிதன் வாழ்ந்தான்
கதகதப்பு பொந்தினிலே.
விரல் நர்த்தனக் கலையின்
நிரந்தர களைப்பினிலே,
உலகம் மறந்தாலும்
ஒளித்து வைத்திருந்தான் தாயின் உயிரை
தன் காப்பி உதிரத்திலே.
“மரண உருவம் தாவி வரும்,
தாயின் உயிரை கவ்விப்பெறும்;
கட்டித் தங்கம், கணத்த வைரம்
கொட்டிக் கொடுத்தால் ஓடி விடும்”,
புழுதியில் புரண்ட புரளி கேட்டு
அணிந்தான் பட்டையாய் ஒரு கோட்டு.
எகிப்து கம்பளம்,
பாரசீக வைடூரியம்,
வங்கக்கடல் முத்து,
எண்ணிலடங்கா சொத்து
அள்ளி அள்ளி பையில் திணித்து
போதைக் கொண்டான் பித்துப்பிடித்து.
ஊர்ஜித்து கேட்டு,
கர்ஜித்து சேர்த்து
ஓடிக் கொண்டிருந்தன அவன் கால்கள்;
கடல் கடந்து எங்கோ,
மொசைக்கு மாளிகையில்
விம்மிக் கொண்டிருந்தன இரு கண்கள்.
அலப்பறையில்லை,
அழைக்கவும் இல்லை
வந்தது தாயிற்கு மரணம்;
ஏழு கடல் தாண்டி வந்த மகனுக்கு
அன்று மட்டும் தட்டவில்லை கரணம்.
வேலைப் பிடிக்கா வேலையாளி,
உலகம் வெறுத்த நோயாளி போல் மரணத்தின் தோற்றம்;
அலன்றலின் நுதலோ கோடுகள் திரித்த ஏற்றம்.
அதன் கண்கள்,
ஆச்சர்யம் போல் மின்னவும் இல்லை,
துயில் போல் இரு இமைகள் பின்னவும் இல்லை.
மெல்லிய சிறு கோடாம் வாயால்
கடவுளை போற்றியதுமில்லை,
சாத்தானை வஞ்சித்ததுமில்லை.
பார்க்கக் கூடாத பலவற்றை பார்த்ததுபோல அதன் கண்கள்,
கேட்கக் கூடாத பலவற்றை கேட்டதுபோல அதன் காதுகள்,
வாய் மட்டும் ஓயாமல் உதிர்ப்பது
‘வேண்டும் உயிர்’, ‘வேண்டும் உயிர்’ என்ற வார்த்தைகள்.
மகன்
தடுமாறாமல் ஓடி வந்து, தடவிப் பார்த்து
அடுக்கினான் தங்க வைர கற்களை;
நிலைமாறா தொனியில் நின்று, முகம் பார்த்து
மரணம் கேட்டதோ நேரக்கல்லை.
நேரக்கல்?!!
பல்லாயிரம் இடங்கள் ஓடியது உண்டு,
பல நூறு சொத்துக்கள் சேர்த்ததுண்டு
நேரக்கல் என்று ஒன்று
இதுவரை நான் கண்டதில்லை கண்டு.
நேரத்தின் துளியை ஒவ்வொன்றாய் சேர்த்து
சிரிப்பு துயரத்தை அலங்காரமாகக் கோர்த்து
வடிக்கப்பட்ட பெரிய முத்து
தெரியாதோ உனக்கு?
"உன் தாயுடன் கிளி பற்றி பேசினால் ஒரு துளி விழுகும்,
வீதி உலா சென்றால் மறு துளி ஒழுகும்,
அவள் பாட்டை இரசித்து,
புடவையை மடித்து கைக்கோர்த்தால்
மழையாய் துளிகள் பெருகும்."
சிறு மௌனம்
"உன்னிடமும் இல்லையோ அந்த கல்?"
பெரும் வெட்கம்
“விதவிதங்களுக்கும், கொழிப்புகளுக்கும்
நடுவே சீரழிந்து கொண்டிருக்கிறது நேரம்;
எதிர்கால உணர்தல் மனிதத்தின் மிகப்பெரிய சாபம்”,
நறுக்கென்று வார்த்தையைக் கொட்டி தாயுடன் சென்றது சாவு.
விழுந்து எழுந்து,
அழுது புரண்டு
எடுபடா நொடிகளுக்குப்பின்,
வெட்கி கேட்டான் தவப்புதல்வன்
“நேரக்கல் இருத்தல் உண்மையில் உயிர் காப்பற்றுமா?” என்று
மெல்ல இளித்து மறுத்தது மரணம்,
“இல்லை!
நேரக்கல் வாழ்க்கைக்கு வழிகாட்டும்,
அதன் இருப்பால்,
வாழ்கையில் உயிர் அண்டம் கடக்கும்,
மரணிக்கையில் உயிர் சிரித்துச் சாகும்”,
சொல்லிவிட்டு நடந்தது மரணம்,
மகனுக்கு எஞ்சியதோ மனதில் ஆறா ரணம்.