கலங்காதே கண்ணீரே

விடிகின்ற விடியலுக்கும் விளங்காதே
நள்ளிரவில் நான் வடிக்கும் கண்ணீரின் அர்த்தங்கள்
வடிகின்ற நீர் துளியும் உறங்காதே
வலிகின்ற உள்ளத்தின் யதார்த்தங்கள்
துடைகின்ற கரம் தேடி ஏங்கையிலே
கலங்காதே கண்ணீரே !
வாடையின் விசாரிப்பு வருத்தங்கள்- போதாதே
கலைந்து போகும் கனவிலும்
கைவிடவில்லை கணவா
இதுவும் கனவா
கவலையில் இதயத்தின் எதிரொலி
நிறைந்து சோகம் நினைவிலும்
உன் முகம் கணவா இன்னும் என்
உயிர் போகவில்லை
நிலுவையில் நிற்கிறது என் உயிர் பலி
வாழ்ந்த நாட்களிலே வளர்ந்ததே வருத்தங்கள்
வீழ்ந்த பூக்களிலே தளர்ந்ததே வசந்தங்கள்
வரைந்த கண்மையும் கண்ணீரில் கரைந்ததே
மறைந்த உண்மையும் இப்பெண்மையில் புதைந்ததே
உன் நிழல் சுமக்காத உன்னவளின் பாரம்
என் சூழல் விளக்காத தாய்க்குபின் தாரம்
படர்ந்து செல்லும் முட்களுக்கு
பாதைபற்றி பரிவு இல்லை
நகர்ந்து செல்லும் நாட்களுக்கு
நம்மைபற்றி கவலையில்லை
தூக்கங்கள் தொலைந்தால்
தேகம் நோகும்
ஏக்கங்கள் விளைந்தால்
சோகம் ஆகும்
பொருள் கொண்ட தாரமே பொருளாதாரம்
இதுவே சில ஆடவரின் பண கணக்கு
கரம் பிடித்த கரமே வரம்
இதுவே பல பெண்மையின் மன கணக்கு

எழுதியவர் : புதுக்கவி (19-Oct-17, 5:20 pm)
பார்வை : 338

மேலே