காத்திருப்பேன் உனக்காக

சில்லென்ற காற்றினிலே கலந்த வாசம்
சிலிர்த்துவிட்டேன் உணர்வுகளில் உன்றன் நேசம் !
நில்லாமல் அலைபாயும் நெஞ்சின் ஏக்கம்
நித்திரையைக் கலைத்ததடா நினைவின் தாக்கம் !
நல்லிரவும் சுட்டெரிக்கும் கதையைக் கேட்டால்
நதியலைக்கும் அழுகைவந்து கரையை முட்டும் !
சொல்லெடுத்துப் பாடிடுவாய் தணியும் வேகம்
தொலைவினில்நீ இருந்தாலும் தீரும் சோகம் ....!!!

இளங்காற்றைத் தூதாக அனுப்பி விட்டே
இமைக்கதவை மூடாமல் காத்துக் கிடப்பேன் !
அளப்பரிய என்காதல் நெஞ்சைச் சொல்லும்
அதுகேட்டால் கல்மனமும் கரையக் காண்பாய் !
உளங்குளிர பதிலைநீ அனுப்பி வைத்தே
உடைந்தமனம் அமைதியுற வகையும் செய்வாய் !
குளமான விழிகளிலே அன்பைத் தேக்கிக்
குடியிருக்க வரும்நாளைப் பார்ப்பேன் எண்ணி !!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Oct-17, 11:17 pm)
பார்வை : 398

மேலே