அனிதா எனும் நல்லதங்காள்

அனிதா இறந்துவிட்டாள்
இது வெறும் தகவலல்ல
ஒரு தலைமுறையின் கதறல்.

இது அனிதாவின் மரணமல்ல
அநீதியை அவளுக்கிழைத்த
அரசாங்கத்தின் மரணம்.

தானாக முடிவைத் தேடிக்கொண்டதால்
இது தற்கொலையாகிவிடாது
பதவி சுகத்திற்காக பாமரனை நோகடித்த
படுபாவிகள் செய்த படுகொலை

அன்று ரோஹித் வெமுலா
இன்று அனிதா
இயங்காத அரசாங்கத்தில்
இதயங்கள் மட்டும்
எதற்க்காக இயங்கவேண்டுமென்று
துடிப்புகளைத் துண்டிக்கிறார்கள்

ஓவியாவைக் காப்பதிலேயே
நம் காலம் அழிந்துவிட்டது
இந்த அபத்தமான காலம்தான்
அனிதாவையும் அழித்து விட்டது

நிகழ்கால அரசியல்வாதிகளின்
நியாயமற்ற கையெழுத்துக்கள்தான்
எதிர்கால யுகத்தின் அழிவைத்
தீர்மானிக்கும் தலையெழுத்துக்கள்

அதிகாரவர்க்கம் விதிக்கும்
அநியாய சட்டங்களாலதான்
மருத்துவம் என்னும் மகத்துவம்
ஏழைகளுக்கு எட்டாக்கனியானது

பண்பாளர்கள் என நம்பி
பசுத்தோல் போர்த்திய புலிகளுக்கு
பலகாலமாய் வாக்களிக்கிறோம் - அந்தத்
தவறான முடிவுகள்தான்
தலைமுறைகளை அழிக்கும் பிணியானது

அப்பாவி மக்களின்
வீழ்ச்சிகளுக்குப்பின்னால்
அரசியல் பிழைப்பவர்களின்
சூழ்ச்சிகள்தான் விளையாடுகிறது

வயிற்றுக்கு உணவிட்டு
நம் கல்விக் கண்களை திறந்துவிட்டார்
காமராஜர் எனும் கர்மவீரர்

கல்விக்கண்ணை குருடாக்கிவிட்டு
அடிவயிற்றில் அடிக்கிறார்கள்
இந்த கரும "வீரர்கள்"

பல உயிர்களைக் காப்பதையே
கனவாகக் கொண்டிருந்தாள்
இன்று அவள் உயிரையே காக்க வழியின்றி
ஊசலாடிவிட்டாள்

கலாமின் அறிவுரை கேட்டு
இரண்டு கண்களால்
கனவு காண்கிறோம் - ஆனால்
ஆயிரம் கரங்களால்
அந்தக் கனவுகளைச் சிதைக்கிறார்கள்

பிறர் வாழ்வில் ஒளியேற்ற
தெருவிளக்கில் படித்த திருவிளக்கு
இன்று அவள் வாழ்வே இருளில் மூழ்கி
அவள்முன் எரிகிறது அகல்விளக்கு

சமமான உணவில்லை
சமமான கல்வியில்லை
சமமான கட்டமைப்பில்லை
சமமான வாழ்க்கைதரமில்லை
சமமான தேர்வுகள் மட்டும் எதற்கு?
சவமாகத் தொங்குவதற்கா?

மாநில அரசு
மானிடத்தை மறந்துவிட்டது
மத்திய அரசு
சத்தியத்தைப் புதைத்துவிட்டது - அதனால்தான்
அரியலூர் இன்று எறியலூரானது.

முதுகெலும்பற்றோர்கள்
முக்கியப் பதவிகளிலும்
பிணம் தின்னும் கழுகுகள்
பிரதானப் பதவிகளிலும்
இருக்கும் இந்நாட்டில்
படிக்கும் பிள்ளைகளுக்குப்
பாடைகள்தான் அரியாசனம்

இனிமேலும் இவ்வுலகில்
நன்மைகள் நடக்கும்
நியாயங்கள் பிறக்கும்
என நம்பிப் போராடிக்கொண்டிருக்கிறது
இதை அறியா சனம்

குழந்தைகளின் கொடும்பசிக்குக்
கொடுக்க ஏதுமின்றி, பரிதவித்துப்
பெற்ற தனது பிள்ளைகளைக்
கிணற்றில் வீசிவிட்டு, தானும் விழுந்து
தன்னுயிர் நீத்தாள்
அந்த நல்லதங்காள்

மருத்துவம் எனும் கனவுக்குழந்தையைக்
கருவில் சுமந்துகொண்டு - இந்தக்
கருணையற்ற உலகில் வாழ வழியின்றி
கயிற்றில் தொங்கிவிட்டாள் - இந்த
அனிதா எனும் நல்லதங்காள்

எழுதியவர் : விஜயகுமா நாட்ராயன் (20-Oct-17, 4:40 pm)
பார்வை : 402

மேலே