காதலே நீ கல்லெறிந்தால் ---

காதலே நீ கல்லெறிந்தால் --- !!

காதலே நீ கல்லெறிந்தால்
கண்களில் கண்ணீர் குளமாகி நிற்கும் .
சாதலை நீக்கிடவே மருந்தாகக்
காதலே நீ வாராயோ !!!

மேகமதைத் தூதுவிட்டேன்
மெல்லியலாள் மனமறிய !
சாகசங்கள் பலசெய்தேன்
சந்திக்க நினைத்தேங்கி !!!


தாகத்தைத் தீர்த்திடலாம் .
தாபத்தை என்செய்வேன் !
பாகமாக உணர்ந்தேனே !
பக்கமாக அழைக்கின்றேன் !!!


வெண்மேகம் தூதாகி
வேகமாகச் சென்றிடுவாய் !
கண்களிலே தேக்கிவைத்த
கனவுதனைச் சொல்லிடுவாய் !!!


பெண்மகளை விலக்கினாலே
பெருந்துன்பம் வந்திடுமே !
உண்மையினை உரைத்திடுவாய் !
உள்ளமதைச் செப்பிடுவாய் !!!


மேகங்கள் ஒன்றுகூடி
மேதினியில் தூதுசெல்லும் !
மோகத்தால் தவிக்கின்றேன்
மோகமுள்ளும் அவளன்றோ !!!


ஆக்கம் :- கவிச்சிற்பி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Oct-17, 4:34 pm)
பார்வை : 105

மேலே