கந்தப்பர் கண்டறியாத கனடா

முகவுரை
(இது ஒரு நகைச்சுவையும், உண்மையும் கலந்த எட்டு அத்தியாயங்கள் கொண்ட குறு நாவல் , இலங்கையில் இருந்து கனடாவுக்கு மகனின் ஸ்போன்செரில், புலம் பெயர்ந்த. மனவியை இழந்த ஒரு முதியவரின் கனடா அனுபவங்கள் பற்றியகதை இவர் படித்து அரச சேவையில் உயர் அதிகாரியாக பல வருடங்கள் வேலை செய்து, ஓய்வு பெற்றவர். அவர் கனடாவில் இருந்து தான் கண்டறியாததை, இலங்கையில் இருக்கும் தன் நண்பரோடு மின் அஞ்சல் மூலம் பரிமாறிக்கொள்கிறார் . கதை புதுமையான நடையில். மின் அஞ்சல் மூலம் இடம் பெறுகிறது ).


அத்தியாயம் 1

“ என்ன கந்தப்பு சாவகச்சேரிப் பகுதிக்கு ஏ ஜி ஏ (AGA) யாக வேலை செய்தபோது கூட இவ்வளவு யோசனையில் நீர் ஒருபோதும் இப்படி பேசாமல் இருந்ததில்லை . அப்படி என்ன தலை மூழ்கிப் போகிற பிரச்சனை உமக்கு”? இது அவர் நண்பர் சின்னப்பு, கந்தப்புவை பார்த்து கேட்ட கேள்வி.

கந்தப்பரும், சின்னப்பரும் ஒன்றாகப் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் படித்தவர்கள். அதன் பின் யாழ்ப்பானம் பல்கலை கழகத்தில் படித்து, அறிவியல் துறையில் பட்டம் பெற்று, இலங்கை பரிபாலான சேவை பரீட்சை எடுத்து, சித்தி பெற்று, ஏஜிஏ என்ற உதவி அரசாங்க அதிபர்களாக பல வருடங்கள் வேலை செய்தவர்கள். அவர்கள் இருவரும் பிறந்த ஊர் கரவெட்டி இருவருக்கும் நீண்ட பெயர்கள் . கந்தப்பரின் முழுப் பெயர் கணபதிப்பிள்ளை கந்தப்பாபிள்ளை. அதைச் சுருக்கி கணபதி கந்தப்பா என்று பலர் அவரைக் கூப்பிடுவார்கள் . சின்னப்புவின் முழுப் பயர். சின்னத்தம்பிப்பிள்ளை சின்னப்பாபிள்ளை அதை சுருக்கி சின்ன சின்னப்பு என்று நண்பர்கள் அவரைக் கூப்பிடுவதுண்டு. சின்னப்புவின் பெயரைக்கேட்டு அவர் உயரத்தில் கட்டை என்று நினைத்து விடாதீர்கள்..
சின்ன சின்னப்புவின் உயரம் ஐந்து அடி பதினொரு அங்குலம் ஏடை 90 கிலோ. கந்தப்பு சின்னப்புவை விட ஒரு அங்குலம் உயரத்தால் குறைவு. வயதும் அதே மாதிரி ஒரு வருசத்தால் குறைவு கந்தப்புவின் ஏடை ஐயிந்து கிலோ சின்னப்புவை விட குறைவு. பல ஊர்களில் வேலை செய்து அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இருவரும் தமது ஏடை கூடாமல் இருக்க கரவெட்டியின் வயல் வெளிகளில் இரு மைல்கள் தினமும் நடப்பார்கள்.
****
ஒரு காலத்தில் யாழ்ப்பாணக் குடாநட்டில் சீமைக்கு போகிறேன் என்று குறிப்பிடுவது பிரித்தானியாவுக்குப் போவதாகும் . சிங்களம் மட்டும் சட்டம் நடை முறையில் இல்லாத காலம் அது. பல யாழ்ப்பாணத் தமிழர்கள் சுயஸ் கால்வை மூடியதால் தென் ஆபிரிக்காவைச் சுற்றி சுமார் ஒரு மாதப் பயணத்தின் பின் சௌதம்டன் துறைமுகத்தை அடைவார்கள். கந்தப்புவின் ஒரே மகன் செல்லப்பா அவ்வாறே லண்டன் சென்று பெளதிக துறையில் முனைவர் பட்டம் பெற்று கனடா நோர்த் யோர்க் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் வேலைகிடைத்து சில வருடங்களுக்கு முன் சென்றவர் தாயின் மறைவுக்குப் பின் தந்தை கரவெட்டியில் உதவி இன்றி இருப்பதை செல்லப்பா விரும்பவில்லை. கந்தப்புவும் பிறந்த தன் ஊரையும். அவர் வாழும் பூர்வீக வீட்டையும் விட்டுச் செல்ல விருப்பமில்லை. வீட்டை வாடகைக்கு கொடுத்துச் சென்றால் வீடுதிரும்பவும் கிடைக்குமோ என்பது அவருக்கு சந்தேகம்.

ஊரில் உள்ள பழனியின் கள்ளுக் கொட்டிலில் அடிக்கடி நண்பர்களோடு கூடி புலாவில் பனம் கள்ளும், இரால் வடையும், ஊறுகாயும் ருசித்துக் கடித்து நண்பர்களோடு சேர்ந்து குடித்து அரட்டை அடிப்பதையே அவர் பெரிதும். விரும்புவார் அப்படி ஒரு சந்திப்பில் சின்னப்பர் கேட்ட கேள்விக்கு
“எண்டை மகன் ஸ்போன்சர் செய்து கனடாவுக்கு நான் போக விசா கிடைத்து விட்டது சின்னப்பு. அது தான் உங்கள் எல்லோரையும் பிரிந்து போவோமா விடுவோமா என்ற யோசனை எனக்கு. பழனியின் சுவையான பனங்கள்ளும் இரால் வடையும் அங்கை கிடைக்கவா போகுது இங்கை வாங்கில் இருந்து கள்ளு குடித்தபடி அரசியல் அரட்டை அடிக்ககிற மாதிரி அங்கையும் முடியுமோ தெரியாது . அவன் என்னை இங்கை தனியாக இருக்காமல் அங்கை கனடாவுக்கு வரட்டாம். எனக்கு ஒரு சுகயீனம் எண்டால் என்னை கவணிக்க ஒருவரும் இல்லையாம். எண்டை வாரிசான பேரன் விஸ்வாவையும் கவனித்து கொள்ளலாமாம். அப்பப்பா எப்ப வருவார் என்று என்னை அவன் தேடுரானாம். தானும் என் மருமகள் ரேவதியும் வேலைக்குப் போன பின் இரண்டு வயது விஸ்வாவை குழந்தை வளர்ப்பு இடத்தில் விட்டு செல்கிறார்கலாம். அதாலை என் பேரனுக்கு தமிழ் பேச வராதாம். நான் அங்கை வந்தால் அவனுக்கு தமிழ் சொல்லி கொடுக்கலாமாம் என்று போனில் என் மகன் சொன்னான். எண்டை பேரன் அப்படியே என்னை உரித்து வைத்த மாதிரியாம். படம் அனுப்பி இருந்தான். அது தான் கனடா போவதா விடுவதா என்று யோசனை.”. கந்தப்பு விளக்கம் கொடுத்தார்


“ எல்லோருக்கும் இப்படி கனடாவுக்கு போக விசா கிடைக்க. வில்லை உமக்கு உது ஒரு அதிர்ஷ்டம். அதோடு நீர் ஆங்கிலம் பேசுவீர். ஓரளவுக்கு கொம்பியூட்டர் கூட உமக்குப் பாவிக்கத் தெரியும். என்னோடு தினமும் இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம். காசு செலவில்லை. கனடா புதினம். கால நிலை . எங்கடை தமிழ் மக்களின் வாழ்க்கை, வேலை வாய்ப்பு. வைத்திய சேவை பற்றி எனக்கு ஒவ்வொரு நாளும் எழுதும். நான் உடனே இங்கை உள்ள புதினம் பற்றி உமக்கு எழுதுறேன். என்ன’?

“நல்ல யோசனை தான் சின்னப்பு. ஆனால் இமெயிலுக்கு உடனே பதில் அளிப்பது எங்கடை யாழ்ப்பாணத்து கலாச்காரம் இல்லையே “

“ யோசிக்காதையும் நான் அப்படி இல்லை. உடனுக்கு உடன் பதில் போடுவன். அங்கை போய் உமது கணினி அறிவைப் பெருக்;கும். நாங்கள் இருவரும் பெளதிகம் படித்தவர்கள் . எங்களுக்கு புதிய விஷயங்கள் புரிந்து கொள்வது இலகு . நாங்கள் இருவரும் டியூப் லைட்டுகள் இல்லை.” என்றார் சின்னப்பு

“ அப்ப நான் கனடா வருவதாக ஒப்புக்; கொண்டு மகனுக்கு போன் செய்து சொல்லுறன். அங்கை நான் கண்டறியாது என்ன இருக்குது எண்டு பார்த்து உமக்கு எழுதுகிறேன். நீர் இங்கை என்ன புதினம்? அரசியல் நிலமை எப்படி. தமிழ் ஈழம் கிடைக்குமா என்று எனக்கு எழுதும். கோவில் கோபுரம் விழி எந்தளவில் இருக்குது என்று எழுத மறக்காதையும் என்ன? “

"நிச்சயமாக கந்தப்பு நான் எழுதுகிறேன் . கனடா போகும் பொது, ஆணைக்கோட்டை நல்லெண்ணை, பனங்காய் பணியாரம். கறுத்த கொழும்பான் மாம்பழம். புழுக்கொடியல், வடகம் . ஊறுகாய் கொண்டு போக மறக்காதையும் அது சரி மச்சான் போவதெண்டால் எப்ப போக இருக்குறீர்"?

“ ஒரு மாதத்தில். நீர், முருகேசு, சுப்பர், மாணிக்கம். விதானையார் வினாசி எல்லோரும் என்னை வழி அனுப்ப எயர் போர்ட்டுக்கு வருவீர்கள் தானே”? :

“ நல்ல கேள்வி கந்தப்பு வராமல் இருப்போமா மினி பஸ் பிடித்து வருவோம். செலவை நீர் தருவீர்தானே”?.

“ செலவை பற்றி யோசிக்காதையும். இப்ப கனேடிய டொலர் ஓன்று இலங்கை ரூபாய் 120,. எண்டை மகனுக்கு டாலரில்ல உங்கடை செலவு கால் தூசு “ பெருமையாக கள்ளை உறிஞ்சி இழுத் சுவைத்த படி கந்தப்பு சொன்னார்.
சுற்றி இருந்தவர்களுக்கு தங்களுக்கு கொழும்பு பார்க்க இலவசமாக சந்தர்ப்பம் கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷம்.

( தொடரும் )
******

எழுதியவர் : Pon குலேந்திரன் கனடா (23-Oct-17, 1:18 am)
பார்வை : 193

மேலே