கோபமும் மெழுகுவர்த்திதான்

கோபம்
மெய்யை பாடாய்படுத்தும்
மெய்ப்பாடு.

மனசின் நாற்றங்காலில்
முளைக்கும்
களைச்செடி!

மூளையை சூடாக்கி
உயிருக்குள்
உலைவைக்கும் அணுஉலை!

காயங்களை ஆறவிடாமல்
கனலை கக்கும் நெருப்புவிசிறி!

எதிர்த்தவனைவிட
எய்தவனிடமே
இரத்ததானம் கேட்கும்
விசஅம்பு!

கோபமும் மெழுகுவர்த்திதான்!
யாரையோ எரிப்பதாய்
தன்னை
கரைத்து கொள்ளும்.
அற்ப தீக்குச்சியுடன்
சண்டையிட்டு
தன் தலையில்
தானே கொள்ளி வைத்துக்கொள்ளும் .

கோபம்
வானை நோக்கியெறிந்த எச்சில்
விதைத்தவன் மீதே
விழும்!

கோபம்
எதிரியிடம் கட்டளையை பெற்று
எஜமானனை
கடித்து குதறும்
வெறிநாய்!

அடுத்தவர் துணையின்றி
நண்பர்கள் எவருமின்றி
உறவுகள் பங்களிப்புமின்றி
நாமே உற்பத்தி செய்து கொள்ளும்
துரோகம்.

அறிவும் நிதானமும்
சமரிட்டு
சட்டையை கிழித்து கொண்டு
இரண்டும் தோற்றுவிடுகிறது
கோபத்திடம்......

விலங்கின் பரிணாமம்தான் மனிதன்.
மனிதனுக்குள் உறங்கும்
விலங்குதான் கோபம்!
நாள்பட்ட கோபத்தின் சீழ்தான்
வன்முறை.

கோபத்திற்கு மட்டும்
இரண்டு தேசிய பானம்
கண்ணீர்
இன்னொன்று
இரத்தம்.


கோபம் முட்டாளின் ஆயுதம்
புன்னகை என்பது அறிவாளிகளின் ஆபரணம்

ஆயுதம் எறி, ஆபரணம் தறி
அறிவாளியாய்......

எழுதியவர் : ஆனந்த் நாகராசன் (23-Oct-17, 6:32 pm)
பார்வை : 146

மேலே