நடை பயிற்சி
இமை வழிந்த நித்திரையை
தனியே சிணுங்க விட்டு
பிரியா விடை தந்து
விரைகின்றான் நடை பயில....
அதிகாலை தன் பனி ஆடையை
அவன் மேல் படரவிட்டு
அவன் உடல் சூட்டில்
கொஞ்சம் குளிர் காய்ந்து
சிலிர்க்கிறது......
அவன் பார்வையை அள்ளிச் சென்ற
வாகனங்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில்
இறக்கி விடுகின்றன
முன் அனுமதி ஏதும் இல்லாமல்......
அறிமுகமில்லாதவர்களின்
நாட்பட்ட புன்னகைகள்
நட்பு வட்டத்தின்
காலி நாற்காலியை
கரம் காட்டிச் செல்கின்றன......
விறைப்பாய் தூக்கி நின்ற
பனித்திவலைகளால்
அவன் பாதம் கழுவி
தரை சாய்ந்த பசும் புல்லின்
மடி சாய்ந்து மனதை
அழவிட்டு
பின்னலிட்டு
நடை போடுகின்றன
தனியே மனிதத்தின்
இரு கால்களாய்....
அவன் கால்கள்! . . .