பதினெண் கீழ்க்கணக்குநூல்கள்
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்களின் அனுபவ உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர். நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.
திருக்குறளும் நாலடியாரும்
திகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’, ‘சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது’, ‘பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா:
"நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்,கடுகம்,கோவை,பழமொழி,மாமூலம்,
இன்னிலைய காஞ்சியோடு,ஏலாதி என்பவே,
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு."இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
நீதி நூல்கள்
1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னா நாற்பது
5.இனியவை நாற்பது
6.திரிகடுகம்
7.ஆசாரக்கோவை
8.பழமொழி நானூறு
9.சிறுபஞ்சமூலம்
10.ஏலாதி
11.முதுமொழிக்காஞ்சி
அகத்திணை நூல்கள்
1.ஐந்திணை ஐம்பது
2.திணைமொழி ஐம்பது
3.ஐந்திணை எழுபது
4.திணைமாலை நூற்றைம்பது
5.கைந்நிலை
6.கார் நாற்பது
புறத்திணை நூல்
1.களவழி நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை
வரிசைஎண் நூல்பெயர் பாடல் எண்ணிக்கை பொருள் ஆசிரியர்
1. நாலடியார் 400 அறம்/நீதி சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை 101 அறம்/நீதி விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது 40+1 அறம்/நீதி கபிலர்
4. இனியவை நாற்பது 40+1 அறம்/நீதி பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம் 100 அறம்/நீதி நல்லாதனார்
6. ஏலாதி 80 அறம்/நீதி கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி 10*10 அறம்/நீதி கூடலூர்க்கிழார்
8. திருக்குறள் 1330 அறம்/நீதி திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை 100+1 அறம்/நீதி பெருவாயின் முள்ளியார்
10. பழமொழி 400 அறம்/நீதி முன்றுரை அரையனார்
11 சிறுபஞ்சமூலம் 104 அறம்/நீதி காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது 50 அகம் பொறையனார்
13. ஐந்திணை எழுபது 70 அகம் மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது 50 அகம் கண்ணஞ் சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது 150 அகம் கணிமேதாவியார்
16. கைந்நிலை 60 அகம் புல்லங்காடனார்
17. கார்நாற்பது 40 அகம் கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது 40+1 புறம் பொய்கையார்