நிசப்தத்தை விழுங்கிய இரவுகள்

அம்மாவின் விசும்பல் சத்தமின்றி
நான் உறங்கிப்போன இரவுகள்
இருந்ததாய் நினைவில்லை
நிசப்தமான இரவுகள்
நிலைத்ததாய் நியாபகமுமில்லை

அப்பாவின் உளறல்கள் எப்போதும்
அம்மாவின் அலறல்களுக்குப்பின்னே
அமைதிபெறும்

அவர் தள்ளாடி வரும்போதெல்லாம்
எதிர்காலம் எக்காளமிட்டு
சிரித்துக்கொண்டிருக்கும்

அவர் மதுவை
வீட்டிற்கு அழைத்து வருவார்
மது எங்களை
வீதிவரை இழுத்து வரும்

அம்மாவின் அலறல்கள் ஓய்ந்துபோன
அந்நாளில் நிலவிய நிசப்தம் விசத்தை
உமிழ்ந்துகொண்டிருந்தது.

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (4-Nov-17, 1:12 pm)
பார்வை : 111

மேலே