மாறியதோ நெஞ்சம்
""மாறியதோ நெஞ்சம்""
துக்கத்தில் புரள்கிறது
நீயில்லாத என் வாழ்வு..
தூக்கத்திலும் பிதற்றுகின்றது
உன் பெயரை என் உதடுகள்...
பக்கத்தில் நீ இல்லாததால்,
பட்டுப் போன மரமாய் நான்...
விக்கித்து நிற்கின்றேன்
விலகாத விதியின் கொடூரம் கண்டு...
நீ நீயாக இருந்து,
நெடுந்தூரம் பயணிக்க முற்பட்டுவிட்டாய்.
நான் நானாகவே பிடிவாதம் விலகாமல்
பின் தொடர மறுக்கின்றேன்.
நாம் நமக்காக மாற மனத்தளவில்
சற்றேனும் முயலவேயில்லையே..
கடந்தவைகளை மீண்டும் மீண்டும் ஒலிப்பதிவாக்கி,
கிடைக்கும் காலங்களை விரக்தியில் நகர்த்துகிறோம்.
எண்ணங்களில் நிறைந்து நிற்கும் காதல் ஏனோ..
வன்மங்களில் தான் இப்போதெல்லாம் பயணிக்கின்றது.
இனிப்பாக இருந்தாலும் அளவை மீறுகையில்,
கசந்திடும் என்பது உணவில் மட்டுமல்ல, உணர்விலும் தான்..
மரங்கொத்திப் பறவையாய் நம் காதலை நான்
துளைத்துக் கொண்டே போகிறேன்..
சிதறும் துகல்களாய் பறக்கின்றது சேமித்த புரிதல்கள்..
துளைகளில் ஊடுருவும் துல்லித ஒளியில்
சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாய் நீ
சுதந்திரமாய் தூர விலகுகின்றாய் நிம்மதியாய்..
இன்பமோ.. துன்பமோ.. கோபமோ.. மகிழ்ச்சியோ..
எதுகை மோனையாய் சேர்ந்து கவிதைப் படைப்போம்,
என்றதெல்லாம் வெறும் சொற்றொடராகியது நம் வாழ்வில்..
உன்னைச் சார்ந்து நானும், என்னைச் சார்ந்து நீயும்,
மரபுகவிதையாய் இனிமை சேர்த்தக் காலங்கள் மறைந்து,
புதுக்கவிதையாய் புரிந்தும் புரியாமல் மாறியதும் விதிதானோ...
மகேஸ்வரி பெரியசாமி