பிரிவிற்கும் தேவை ஒரு கவிதை
உனக்காக சில கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டேயிருகின்றன,
பல கவிதைகள் அரைகுறையாக எழுதவேண்டிய
கட்டாயத்தில் கிடக்கின்றன.
வெட்டவெளி மனதில்
முதல் முத்தம் முதல் கடைசிப் பார்வை வரையிலான
கற்பனை வாழ்க்கை மட்டும் தினமும் முழுமையாகவே
வாழ்ந்து வாழ்ந்து முடிக்கபடுகின்றன.
எப்படி சென்றிருக்கலாம் என்றும்,
எப்படி பேசியிருக்கலாம் என்றும்
கடந்த காலங்களை அடித்து திருத்திக் கொண்டேயிருக்கிறேன்.
இப்பொழுதெல்லாம் காதல் தோல்விகளை கலாய்ப்பதில்லை.
காதல் மரணம் சரியா தவறா என்ற விவாதங்களில்
தவறு என்றாலும் மரணத்தையொத்தது அவ்வலி
என்றே பேசுகிறேன்.
சில வாசனைகள்,
புலப்படாத சில இசைகள்
என உன்னை நினைவுபடுத்த எத்தனிக்கும்
அத்தனையையும் வெறுத்து ஒதுக்க முயல்கிறேன்.
கவரிமான்கள் பார்த்து பொறமைபட்டு நகர்கிறேன்.
மனதை திசைதிருப்பும் இடங்கள் அனைத்திற்கும்
லாவகமாக மனதை கழட்டிவைத்துவிட்டே செல்கிறேன்.
இரணத்தை ஆற்றும் காலம் வரும் திசைநோக்கி
கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
பிரிவுக்கும் தேவைப்பட்டது ஒரு கவிதை
ஆனால்,
கவிதை எழுதவும்
பாடம் கற்கவும் மட்டும் தானா காதல் தோல்விகள்?