விலகிச் செல்தலும் காதல்தான்

என் வாழ்க்கையின் மார்பை கிழித்துக்கொண்டு மகா பிரவாகங்கள் வெடித்து புரளுகின்றன..
அங்கு பட்டாம்பூச்சிக்கும் ஒற்றை ரோஜாவுக்கும் என்ன வேலை?.

கல்லையோ மனித மாமிசம் தின்னும் மண்ணையோ மர்மங்கள் சுழ்ந்த அந்த மலைகளையோ, சுட்டெரிக்கும் சூரியனையோ, புயல் சூழ்ந்த வியாழனையோ, பிரபஞ்சத்தின் முடிவிலியையோ என்னிடம் கேள் சொல்கிறேன்..
காதலைப் பற்றிக் கேட்டால் எப்படி?..

மனதால் நான் ஒரு மார்க்கோ போலோ..
நீ நினைக்கும் இடத்திலெல்லாம் என்னால் முடியாது, நிலவு மட்டும்தான் நமக்கு அலைவரிசை..
நடுச் சாமமும் நடுக்கடலுமே என் போக்கிடங்கள்..
இதில் உன் தூண்டிலுக்கு நான் துரோகிதான், ஏனென்றால் நான் இருப்பது இரும்பு குழைந்து செய்த உருக்குக் கப்பல்..

நானும் ரசிகன், நான் ரசிப்பது சீசரின் இரத்தத்தில் மலர்ந்த ரோஜாக்களை..
அத்தர் தெளித்த அடர்ந்த மூலிகைக்காட்டில், காலைப்பனி சூழ்ந்த நீர்தாரையின் ஓரத்தில் நொடிக்கு ஒற்றைத்துளி பருகி, முகை விரித்து மகரந்தம் பரப்பி புணரக் காத்திருக்கும் ஓர்கிட்டுகளையல்ல..

நீ புனித ரோஜா.. உன்னை எங்கனம் விதைத்து மலராக்குவேன்.. மன்னித்து விடு. மலர் தோப்பில் நீ ஜொலிக்க வேண்டும்..
மாநிலம் போற்ற நீ வாழ வேண்டும்..
விலகிச் செல்தலும் ஒருவகை காதல்தான்..

எழுதியவர் : றிகாஸ் (5-Nov-17, 11:34 pm)
பார்வை : 1591

மேலே