மக்கள் மைய அமைப்புகள்
மெகா ஸ்டோர்களும், உலகளாவிய மளிகைக் கடைகளும் பொருளாதார ஊக்கத்துக்கு வழி என்று, இந்திய அரசைத் தற்போது ஆக்கிரமித்துள்ள ‘சுதந்திரச் சந்தை’ வாதிகள் தினம் செய்திகளைப் பொதுவெளியில் வீசி விடுக்கிறார்கள். அவை வெறும் கருத்துகளாக இருந்தால் அபாயம் குறைவு. அவை காரியங்களாக, அரசுடைய நடவடிக்கைகளாக, நம் பொருளாதாரத்திற்கு உலை வைக்கும் செயல்களாக இருக்கையில், நாம் ஏன் இப்படி எதையும் தாமதமாகவே கற்கிறோம் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. உலகெங்கும் இன்று தோற்றுக் கொண்டிருக்கும் பொருளாதாரங்கள், தேங்கி நிற்கும் பொருளாதாரங்கள், இப்படி ராட்சத நிறுவனங்களை நம்பித் தம் மக்களை, சமூகங்களைக் கைவிட்டு விட்டு, இன்று அந்த நிறுவனங்களை ஆளும் சிறு கூட்டம், தன் நலனை மட்டும் பார்த்துக் கொண்டு, பரந்த மக்கள் சமுதாயங்களின் நலன்களைக் காற்றில் பறக்க விட்டு விட்டதைக் கவனிக்காது, மறுபடி அந்த நாடுகள் செய்த அதே தவறுகளைத் தாமும் செய்யத் துணிவதுதான் என்ன ஒரு மூடத்தனம்? இங்கே ஜெர்மனியோ, தன் தூரங்களில் ஆழ்ந்திருக்கும் சிற்றூர் வெளிகளில் பெருநிறுவனங்கள் அழிப்பை நடத்துகின்றன என்பதை உணர்ந்து, காலியாகி வரும் சிற்றூர்களில் மக்களை இடம் பெயர்ந்து போகாமல் அங்கேயே வாழும் வகையில் நிறுத்தி வைக்கவென, கிராமப்புறங்களும், சிற்றூர்களும் தொடர்ந்தியங்கும் வகையில் மறுபடி சமூக மையக் கடைகளை ஊக்குவிக்கத் துவங்கி இருக்கின்றது. இது ஏதோ ஜெர்மனியின் கிருஸ்தவ ஜனநாயகம் என்ற கருத்தியலை முன்வைக்கும் வலதுசாரி முதலிய மைய அரசால் ஊக்குவிக்கப்படும் நடவடிக்கை அல்ல. இது அம்மக்களே முனைந்து தம்மைக் காக்க எடுத்துள்ள நடவடிக்கை என்று தெரிகிறது. இந்திய மக்கள் தம் எதிர்காலத்தைப் பாதுகாக்க, தம் நலன்களின்பால் இத்தனை கவனமாக இருந்தால், பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தை ஒழித்து நம் சிற்றூர் வாழ்வை, கிராமப்புறங்களில் வாழும் மனிதர்களின் நலன்களை ஓரம் கட்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
காந்தியமோ, ஜே.ஸி.குமரப்பாவோ, சிறு நிறுவன, சிறு அமைப்பு மையப் பொருளாதாரமோ அப்படி ஒன்றும் பிற்போக்குவாதமல்ல. மக்கள் மைய அமைப்புகளே இறுதியில் வாழ்க்கையை வளமாக்கும் என்பதை ஜெர்மனியர் அறியத் துவங்கியுள்ளனர் என்பது கொஞ்சம் மகிழ்ச்சியூட்டும் செய்தியே.
மகரந்தம்
ஆசிரியர் குழு
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
