வலி
டெட்டால் ஒற்றிய தரைகள்
சிட்டுக் குருவிகளாய் சுழலும் செவிலியர்
நோயாளி மனைவிக்கு உணவூட்டும் கணவன்
இறத்தலை தள்ளிப் போட மருத்துவரிடம்
இரந்து நிற்கும் மனிதர்கள்
ஜனித்த மழலையின் வீரிடலில்
பதைபதைக்கும் தந்தை
ஏதுமறியாப் பட்டாம் பூச்சிகளாய்
எல்லோரிடமும் உறவாடும் குட்டி தேவதைகள்
பாக்கெட்டில் பணம் பொதுமானதாயென
எண்ணிப் பார்க்கும் மாமனார்
சக்கர நாற்காலியில் வெட்கப் பட்டு நகரும்
கால் உடைந்த மாணவன்
மருந்துப் பொருட்களுடன் தாதியுடன்
விவரம் கேட்கும் ஆச்சி
நிகழ்வுகள் அறியா பெரு மரத்திலிருந்து
இயல்பாய் உதிர்ந்த பூ ஒன்று
தரையில் மோதியது
பெருஞ் சப்தத்துடன்!