உன் சிறுதுளி வேர்வையும் தீர்த்தமன்றோ
உள்ளத்தை கல்லாக செய்தாயோ?ஆளானதும்
தெள்ளமுதாய் அளந்தே பேசினாய் அரிதாய்
கற்சிலை கொண்டே கடவுளை படைத்தது
அற்புத உருவே உம்மனதின் உதாரணமா?
நீர்த்தடுத்து காக்கும் கல்லணை உருவானது
நீர்தடுத்து தேக்குமுன் அன்பின் தாக்கமோ?-நீ
என்முன் சொல்லாத அன்பின் ஆழம்
ஊரார் சொல்கையில் தீராமல் நீளும்...!
நூறுமுறை நின்றது கடிகாரமும் ஓய்வுக்காய்
ஒருமுறை தேங்காது ஓடியோடி உழைத்தாய்
திருமுறை பாடிடும் நடராசன் போலவே-நின்
திருவடி நாடிய ஓய்வினை துறந்தாய்...
வெட்டும் பனையேறி உயிராட பிழைத்தும்
வாட்டம் திணையின்றி அன்போடு அழைத்து
பொட்டலம் பிரித்து நீட்டியநின் கைரேகை
தீட்டிய காவியமோ இனியதென் வாழ்க்கை...!
பெரியதோர் குடும்பம் பாட்டன் படைத்தார்
அரிப்புகள் ஆயிரம் அலைச்சல்கள் என்றாலும்
பிரியாமல் இன்றுவரை சேர்ந்தே நடந்தீர்
குடியியல் ஆசான்நீ எந்தையே எந்நாளும்...!
அதிகார வர்க்கத்தில் உற்றோர் பலருண்டு
அதிகம் தனம்படைத்த நண்பரும் சிலருண்டு
உதிரம் வறண்ட வறுமையிலும் கையேந்தி
உதவிட கேளாத உன்சிரிப்பே என்தொண்டு...!
ஏடெழுதி படிக்காமல் காடுழுது களைத்தும்
ஓடாய் இளைத்தும் ஊனுருக வதைந்தும்
வாடாமகனே நாளை நமதேயன வாழ்க்கை
பாடம் சொல்லிய பரம்பொருள் அல்லவோ?
வறுமையின் வண்மையில் சண்டைகள் இட்டாலும்
ஒருமையில் தாழ்மையில் சாடல்கள் செய்தாலும்
இருமெய் ஓருயிரென எந்தாயினை கனிவாய்-உயிர்
இருப்பதே உனக்கென காதலும் பொழிவாய்...!
அல்லல்கள் ஆயிரம் ஆர்ப்பரித்தாலும்
பிள்ளைகள் எம்மிடம் குதூகலித்தாய்..!
ஒருகுறை ஏதுமின்றி எமைவளர்த்தாய்-உன்
சிறுதுளி வேர்வையும் தீர்த்தமன்றோ?
மரமேறி பிழைத்தாய் மரம்வெட்டியும் பிழைத்தாய்
உரமென எங்களை உம்மனதினில் ஏற்றாய்
மைல்கள் தேய்ந்திட மிதிவண்டி மிதித்தாய்
மூட்டைகள் தோளேந்தி குறுவணிகம் செய்தாய்
பயிர்வணிகம் செய்தாய் விவசாயமும் வென்றாய்
இயன்றதை கொடுத்தாய் உயிருதவி புரிந்தாய்
உயர்கல்வி ஈந்தாய் உயர்ந்தாய் மென்மேலே
இயல்பே நிறைவாய் எளிவுடன் சிறந்தாய்
முன்னெழுத்தாய் இல்லாமல் முற்பெயராய் எழுதையில்
பொன்னெழுத்தாய் தோன்றுது நீயிட்ட என்பெயரும்
பின்னடவேன் உன்பாதையில் நன்னடக்கம் பொருந்தி
இன்னன்பு தந்தையே வரலாறும் உனைக்கூறும்...!