உச்சரிக்கப்படா முத்தம்

உச்சரிக்கப்படா முத்தம் !

இருட்டினில் தலை நீட்டும்
ஒளிக்கீற்றின் வாலென
இருதய குழம்பில்
கடவுள் துகளொன்று
கரும்பாகிக் குதிக்கும் !

சிட்டுக் குருவியின்
சிரத் திருப்பலென
மின்னி உதிக்கும்
நொடிமுள்ளிடை வாழ்
வசந்தத்தின் வாசமது
நாவிழுக்கும் வாச மது !

கருப்பட்டி குடித்த
அதிகாலை காற்றென
வளிப்புட்டி வந்திறங்கும்
அமிர்தந்தோய் கனவது
கானலென காணுவது
காணாமல் நாணுவது !

பாரும் பார்க்காவண்ணம்
என் புன்னகையை வண்ணமிடும்
நிகழ்வின் நிழலது
நிகழாத் தகவுகளின்
தகவமைப்பின் தரவுடன் !

உச்சரிக்கப்படா முத்தம்
உணரப்படும் போது
அண்ட சராசரங்கள்
மூழ்கி கிடைக்கும்
சொர்க்கச் சமுத்திரத்தில் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (11-Nov-17, 5:01 pm)
பார்வை : 76

மேலே