ஓவியச் சிற்பி

வானளக்கத் துடிக்கும்
வண்ணத்துப் பூச்சியின்
வட்டங்களெல்லாம்
முடிவிலிகளில் மூழ்கியபின்
தென்றலொன்று தேடிவந்தது
ஒரு ஓவியத்தின் விலாசத்தை !

இலைபறிக்க வருதென பயந்து
நடுங்கிய மரத்தின் நிழலில்
இளைப்பாறிய பின்
விசாரித்தன காற்றுக்குட்டிகள்
சற்றே சரிந்து உட்கார்ந்தபடி !

அழகியல் தவழும்
அம்முப்பரிமாண ஓவியத்தை
தன் நகம்கீறிக் கிழிந்ததாய்
சற்று தூரத்தில் - அழுது
கொண்டிருந்தது வானம் !

கடந்து சென்ற - ஒரு
ஆவின் மனசாட்சி
ஒப்பாரி சமைத்தது மௌனமாய்
என் குரலின் வெளிச்சம்
ஓவியத்தை சுட்டிருக்குமோவென !

இவையேதும் அறியாமல்
தன் றெக்கைகளை
தூரிகையின் மூக்காக்கி
வேறொரு வெற்றிடத்தில்
மீண்டும் வரையத் தொடங்கியிருந்தது
அந்த ஓவியச் சிற்பி !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (11-Nov-17, 4:19 pm)
பார்வை : 95

மேலே