இவன் பெயர் நேர்மை

இவன் பெயர் நேர்மை
====================

மறைந்து கொண்டிருக்கும் ஆதவனை பார்த்துக்கொண்டு மதுரம் இடாத காப்பியை பருகுகிறேன்

என் வாழ்க்கை போக்கு, தொலைநோக்குப்பார்வை எல்லாத்திலிருந்தும் வித்யாசப்பட்டவன் நீ

என்னை அறிந்தவர்கள் மத்தியில், அதிகம் பேசாமல் எல்லோரையும் சிரித்துக்கொண்டே கடந்துவிடும் எனக்குப்பின்னால் இரண்டாமவன் நீ

யாரைப்போலவும் இல்லாமல், வாழும் வாழ்க்கையில் எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி போகிறேன், எதையும் யாரையும் திரும்பிப்பார்க்காமல் போகும் என் பாதையெங்கும்,
பூக்களோ முட்களோ, நானிப்படித்தான்

இப்போது என்னை நீ பின் தொடர்கிறாய், முதல் முறையாக நானும் உன்னை திரும்பி பார்க்கிறேன்
உனக்காக என் நடையை தாமதிக்கிறேன், இன்று ஒன்றாக ஒரே பாதையில் நடக்கிறோம் ம்ம்

பொருளாதாரத்தின் பின்னால் ஓடி குடும்பத்தை பார்க்கிறேன், குடும்பங்களோடு ஓடி பொருளாதாரம் பார்க்கிறாய்

உன் கையில் ஒன்றை கொடுத்தால்
அதை நூறாக்கிக் காண்பிக்கிறாய், நூறை கொடுத்தால் லட்சங்களாக்குகிறாய்
கணக்கில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் என்னிடம் மட்டும் நீ கணக்கு பார்ப்பதே இல்லை
அன்பிலும்

எனக்கென்று ஒன்று நேர்ந்தால் எங்கிருந்து வந்துவிடுகிறாய் முதலாவதாக

என்னை ஒத்த குணமுடையாத உன்னை, எங்கே அவன் சாப்பிட்டானா என்று கேட்கும்படி எப்படி செய்தாய்

என் வீட்டு விசேஷத்திலெல்லாம், நான் வெறும் காகிதங்களை இறைக்கிறேன், நீ உன்னையே இறைக்கிறாய்,

கூட்டங்களிடை நான் இருக்கையிலும், எல்லோரும் உன்னையே தேடியதை உணர்கிறேன்

வருடமிருமுறை வரும் நான் வெறும் விருந்தாளிதானே, எங்கே எது வேண்டுமென்றாலும் என்னால் வெறும் பணத்தை மட்டுமே கணக்கிடமுடியும்

உன்னால் மட்டுமே யாருக்கு என்ன வேண்டும் என்று கணிக்க முடிகிறது

உன் சிறு தியாகங்களுக்கு முன்னால், என் பணம் ஒன்றுமில்லை,

கடலே மூழ்குவதாய் நினைத்து நான்
கரை ஒதுங்கியிருப்பேன், உன்னால் எனக்கு ஒன்றுமே கொடுக்க முடியாது அறிவேன்

ஆனால் உன் வருகை எனக்கு யானை பலம் தருவது எப்படி

உன் வருமானத்திற்குள் நீ வாழுகிறாய், உன் தன்னம்பிக்கையை எனக்குத் தருகிறாய்

இருந்தாலும்

என் பிரவேசம் உனக்கு ஆலமரம் என்கிறாய்

நம் உறவுகளில், எல்லோரும் எதையோ எதிர்ப்பார்த்து என்னை நெருங்கும்போதும், சிலர் என்னைப்பார்த்து இவன் மட்டும் எப்படி இப்படி இருக்கிறான் என்னும் கௌரவ சின்னத்தை பேச்சுகளில் நிறைக்கும்போது

உனக்கென்று ஏதாவது கொடுத்தால், வேண்டாமென்று சொல்லி ஒதுங்கும் உன் சுயமரியாதையில்
என்னை கட்டியிடுகிறாய்

என்னை யாருக்கேனும் பிடிக்காமல் போனால் அங்கிருந்து சிரித்தபடி விலகுவேன்,
மரியாதை என்ற ஒன்றைவிட என் அன்பை பெரிதாக்கி தொடர்கிறாய்

என் வாக்குகளின் வீரியம் எல்லோரையும் வீழ்த்திவிட்டபோதும்
அதை உன்னிடம் என்றுமே பிரயோகிக்காமல் கடக்கிறேன்

எதை எதையோ பெரிதாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் மத்தியில்
நீ மற்றும் நினைத்துக்கொண்டிருப்பது
ஒரு சிறிய சந்தோஷமான வட்டத்தை மட்டுமே

மனிதன் வாழ அதிக அறிவும் அதிக அழகும் அதிக ஆடம்பரமும் வேண்டாம் என்பதை
ஒவ்வொரு நிலையிலும்
உன் ஏதோ ஒரு எதார்த்த செயகையினால்
உணர்த்திவிட்டு போகிறாய்

உனக்கு தெரிந்ததெல்லாம்
நீ உன் மனைவி உன் குழந்தை பின் என் வீடு
உன் பெரிய கவலையெல்லாம்
நூறு ரூபாய் கடனாக இருந்தாலும் திருப்பிக் கொடுக்கவில்லையே
என்பது மட்டுமாகத்தான் இருக்கும்
மேற்படி போனால்
அன்று கிடைக்கும், வருமானத்தை
பெட்ரோலுக்கு இவ்வளவு
ஆட்டோ தவணைக்கு இவ்வளவு
பராமரிப்பு செலவு இவ்வளவு
மிஞ்சுவது சம்பளம் இதை என்ன செய்யலாம்
என்பதாகத்தான் இருக்கும்

வியக்கிறேன் உன் கட்டுமானத்திற்குள் நீ கௌரவத்தோடு இருப்பதை எண்ணி

தனிஷிமா தக்ஷின் இருவருக்கு மத்தியில், நீ மரியாதை மிக்கவனாக தெரிகிறாய்
அன்பு மிக்கவனாக இருக்கிறாய்
நவநீதா மற்றும் எனக்குப்பின்னால்
உனக்கென்று ஒரு இடத்தை
அவர்களிடம் உருவாக்கி இருக்கிறாய்

என் வாழ்க்கைக் கோட்டிற்குள் நீ வருவதற்கு முன்னால்
லட்சங்களோடு புரளும் என்னை
இப்போதெல்லாம்
நீ நவநீதாவோடு வாதாடும் ஆயிரங்களின் மதிப்பை
எனக்குப் புரிய செயகிறாய்

ஆயிரம் வசதிகள் புரளும் அனைவரின் வீட்டிலும் உன் ஒருவனின் அன்பு இல்லை

நீ வந்த பின்னால் தான் என் இதர நட்புகளின் எண்ணிக்கை குறைய தொடங்கின

என்னைக்கண்டு பிரமித்திருப்பாய்,
ஆனால் உனக்குத் தெரியாது, உன்னிடம் தான்
இப்படித்தான் வாழவேண்டும் என்பதை கற்றுக்கொண்டிருக்கிறேன்

மனிதர்கள் உனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு பின்னால்
உன் நேர்மை இருப்பதை அறிகிறேன்

எப்போதுமே உயர்தர காரில் பயணப்படும் எனக்கு, முதல் முறை நீ வாங்கிய புதிய ஆட்டோவில் பயணித்தது வசதியாக இருந்தது

இந்த comfort யாரிடமும் முன்பு எனக்கு தோன்றியதில்லை

சகலைகளுக்குடையே பெரும்பாலும், சேர்வார் தோஷமே இருக்குமிடையில்

நாமிருவரும் ஏன் வித்யாசப்படுகிறோம்

ஆரம்பம் முதலே, உன்னை என் சகோதரனாக பாவித்துவிட்டதால் இருக்கலாம்

என்னை அண்ணன் என்று அழைக்கும் எவரிடமும் உன் அன்பை உணர்ந்திருக்கவில்லை, இதுவரையிலும்

அன்புடன் நான் - அண்ணன்

எழுதியவர் : அனுசரன் (11-Nov-17, 8:33 pm)
Tanglish : ivan peyar nermai
பார்வை : 369

மேலே