புதிய இந்தியா
சந்திரனுக்கு ராக்கெட் விடுவோம்!
சந்ததி காக்க ஆக்ஸிஜன் வாங்கமாட்டோம்!
மாடுகளுக்கு ஆலயம் கட்டுவோம்!
மனிதனுக்கு ஆம்புலன்ஸ்
கொடுக்க மாட்டோம்!
ஆன்மீகவாதிகளை
தொழிலதிபர் ஆக்குவோம்!
அன்றாடம் உழைப்பவனை
திண்டாட விடுவோம்!
பாரதத்தாய் என்போம்!
பாரபட்சமின்றி சுவாதி,நந்தினிகளைக்
கொல்வோம்!
திரையரங்கில் ஜனகண மன பாடுவோம்!
ஜனங்களின் மனமறியா ஆட்சி நடத்துவோம்!
எதிர்கால இந்தியா
இளைஞர் கையிலென்போம்!
நீட் தேர்வு தந்து
தாய்மொழி வழிக்கல்வி தடுப்போம்!
விவசாய நாடென்போம்!
விவசாயி வாழ்வாதாரம் அழிப்போம்!
பொதுவுடைமை பேசுவோம்!
நாட்டை தனியுடைமை ஆக்குவோம்!
நீதிக்குமுன் அனைவரும்
சமம் என்போம்!
நிதிக்கே நீதி வழங்குவோம்!
கட்சிகளை இணைப்போம்!
நதிகளை இணைக்கமாட்டோம்!
மக்கள் பிரதிநிதிக்கு
மாதசம்பளம் உயர்த்துவோம்!
மக்களுக்கோ அத்தியாவசியப்
பொருட்களை நிறுத்துவோம்!
வேற்றுமையில் ஒற்றுமை
என்போம்!
மாற்று சாதி திருமணம்
மறுப்போம்!
மகத்தான கருவி பல
கண்டு பிடிப்போம்!
மலம் அல்ல
கருவி கண்டுபிடிக்கமாட்டோம்!
தலைவர்களுக்கு
சிலை வைப்போம்!
தனிமனித சுதந்திரத்திற்கு
உலை வைப்போம்!
எழுபதாவது சுதந்திர தினம்
என்போம்!
ஏழடுக்கு பாதுகாப்புடனே
கொண்டாடுவோம்!
அவலங்கள் பல
அவற்றுள் இங்கே சில
ஆயினும் கொண்டாடுவோம்!
புதிய இந்தியா!!!