அம்மாவும் அவள் சிரிப்பும்

அம்மாவும்....
அவள் சிரிப்பும்.....
அர்த்தங்கள்
அதிகம் கொண்டது
அவள் சிரிப்பு ...
தன் உணர்வுகளுக்கெல்லாம்
முலாம் பூசிக்காட்டுவது
அவள் சிரிப்பு ...
என் அழுகுரல் கேட்டால்,
எல்லாம் மறந்து ஓடிவரும்
அவள் சிரிப்பு ...
வேண்டாமென சொன்னால், இன்னும் கொஞ்சமென அக்கறைகள் ஊட்டும்
அவள் சிரிப்பு ...
கேட்டது முடியாவிடில், என் சோகம்
தவிர்க்க வேடிக்கைகள் காட்டும்
அவள் சிரிப்பு ...
கைப்பேசியில் என் குரல் கேட்டால்,
என் நலனை மட்டுமே விசாரிக்கும் அவள் சிரிப்பு ....
வெகுநாள் கழித்து வீடு வந்தால்,
வாசலிலேயே காத்திருக்கும்
அவள் சிரிப்பு ...
தன் உடல் நிலை சரிந்த
நாளில் கூட, ஒன்றுமே
இல்லையென வலிகளை மறைக்கும்
அவள் சிரிப்பு ...
என் வேதனை வலிகள் நான் சொல்லாவிடினும், என்
மனத்திரை அறிந்து மருந்திடும்
அவள் சிரிப்பு ....
என் வார்த்தைகள் அவள் மனதை உடைத்து விட்டாலும்,
அடுத்த நாள் அதை உதறி எனை புதுப்பிக்கும்
அவள் சிரிப்பு ....
என்னைப் பெருமை படுத்தும் அத்தனையும் தாண்டி,
உச்சத்தை தருகிறது
அவள் சிரிப்பு ...
என் அம்மாவின் சிரிப்பு ....
என் உணர்வுகள் புரிந்த
அவள் சிரிப்பு,
அவளை எனக்கு
உணர்த்துகிறது.... எப்பொழுதும் ....
சுகன்...