அன்புத்தாயே
இவ்வுலகம்தனிலே ஓர் உடலில்
ஈருயிராய் எனைச் சுமந்து
முன்னூறு நாட்கள்
உன் கருவறைக் குடிசைக்குள்
எனை வைத்து பத்தியங்கள் பல காத்து உன் உதிரம் என் உணவாய் ஊட்டி வளர்த்த உத்தமித் தாயே!
நீ பட்ட பாடு மறந்திடுமோ என் மனம்
கந்தல் உடையை நீ அணிந்து
கலர் கலராய் எனை அலங்கரித்தாய் நீயே
கண் விழித்த நாள் முழுதும்
கண்மணியே என்று உரைத்த தாயே
உனைக் காலன் அழைக்கிறான் என்ற வார்த்தை தீயால்
கருகிச் சுருங்குதே மனம் தினமும்தானே
உற்றதுணை உனைத்தவிர யாரென்று?
உக்குதம்மா என்னிதயம் உனைநினைத்து
பத்து மாதம் எனைச்சுமந்த. பத்தினியே
பார் போற்றும் அன்னை உனை வாழ்த்திடுவேன்
பக்குவமாய் எனைக்காத்த கவிநயமே
உனை கவிதையிலே சொல்லிடவே வார்த்தை இல்லை
துன்பங்கள் எத்துனைதான் வந்திடினும்
துயரத்தில் நான் நிதமும் மிதந்திடினும்
உன் பணிகள் மறவாது எனதுள்ளம்
தோள்தனிலே உனையிட்டு சுமந்திடுவேன்
அன்பான அன்னையே உனை
அல்லும் பகலும் ஆலாபிக்கிறேனம்மா
அம்மா என்னுயிரும் நீயம்மா
உத்தமியே உனதுயிரும் நானம்மா.