இதன்படியாக
இதன்படியாக
============
உன்னை நினைக்கவென்றே
இப்படியொரு குளிர்,
எனக்கு அவசியப்பட்டுப்போகிறது நிலா
நிலா உனக்கு ஞாபகமிருக்கா
என்று ஆனந்தி
கேட்கிறாள்
இடையில் புகுந்து
அதான் தினமும் பார்க்கிறோமே
அப்பறம் என்ன கேள்வி
என்கிறேன்
என் வயது வராத குரலில்
ச்சீ போடா என்றுவிட்டு
எனக்கும் நாலடி முன்னாடி நடந்தபடியே
தொடரும் என்னைப்பார்த்து
வாய்ப்பொத்தி சிரித்தவாறு
ஜாடைப்பேசும் கண்களின்மேல்
துளியுமெனக்கு ரசனைத்தோன்றாத வயசு அது
குமிழியெறிதல் , கூழாங்கல், மணற்குளித்தல்
முத்துக்கெடுதல்
எல்லாம் செய்துவிட்டு
திருட்டுத்தனமா திண்ணையில் நுழையும் முன்பு
அரைக்கால் சட்டையில்
நாலு பம்பரம்
ஆணி மேற் தொடையை பதம்பார்த்திருக்கும்
பொருட்படுத்தமாட்டேன்
சாணியால்
நீ என் காலிலிட்ட
நானுன் கையிலிட்ட மருதாணி உணங்கலை
யாரும் பார்த்துவிடாமல்
மறைப்பதும்
விடிந்தால் காக்காய் விரட்டுவதும்
குருவி பிடிப்பதுந்தான்
அன்றைய பெரிய விஷயமாக இருக்கும் நமக்குள்
அதிகப்பட்சம்போனால்
பசித்தீரிய படுக்கைப்புரள்வு
பயணப்படாத இடைநாழிகைகள்
நிறமில்லாத இருள்
நற்காலை சலிப்பூட்டுகிற சூரியவிழிப்பு
நிறைமாத மழை
நடுநிசியின் கனவுப்பிறழ்தல்
விடாமல் சுற்றுகிற தூர்தர்ஷன் அலைப்பதிவி
இடையிடையே
நிர்மா வாஷிங் பவுடர், லைஃப் பாய் சோப், கங்காபார்
ஏவொன் க்ளீனிங் பவுடரினூடே
இடைக்கால திரைமலர்
ஒரு ஹிந்தி திரைப்பட சனிக்கிழமை
இராமாயண ஞாயிறு
நாட்கள் போகப்போக அதுவே மகாபாரத ஞாயிறு ம்ம்
தொடரில்லாத
நாற்பதுநிமிட மேடை நாடகம்
முதல் முறை
திறந்தவெளி வாரத்தொடர்
ரயில் சிநேகம், இவளா என் மனைவி
இரவிலொரு பகல்,
உடல் பொருள் ஆனந்தியின் திலீபன்
ஆளவந்தார் கொலை வழக்கின் செந்தமிழ் உரையாடல்
கொலையுதிர்க்காலம்
உறக்கத்தின்போதும்
வடிவேல் வாத்தியாரில் பீலிசிவம் திருந்திவிட்டானா
என்ற விசனம்
இதெல்லாமே
ஒவ்வொருநாளும் நீ சொல்லி
உனக்காய் என் பக்கத்தில் இடமொதுக்கிய
என் வீட்டின்
விளக்கணைத்த அந்த தொலைகாட்சி நேரங்கள் நிலா
எல்லோரும்
எதிலோ தீவிரமாய் மூழ்கியிருக்க
முதலில் கொஞ்சல்,
பின்பு சிணுங்கல்
பின்பு கிள்ளல்
அதுவே சண்டையென தொடங்கிடுகையில்
பாதியிலேயே
எழுந்து போய்விடுகிறாய்
இரண்டு நாட்களேனும் நீ பேசாவிட்டால் தான்
அந்த கோபத்திற்கு அழகு
இதிலெல்லாத்திலிருந்தும் தப்பித்துவிட்ட அன்றைய என் கண்களை
திருப்பித்தா நிலா
தனியாக இருவரும் கைப்பிடித்து நடக்கும்போது
யாரும் பார்த்தால்
ஏன் நீ விடுவிக்கிறாய் என்பதே தெரிந்திருக்கவில்லை
அன்றெல்லாம்
எனக்கு நினைவு தெரிந்து
உனக்குத்தெரிந்த பெரிய குசலமெல்லாம்
ஏய் இப்படிவா
தோ போறானே அவன் சிகரெட் பிடிக்கிறான்
அவன் கூட பேசாத
அவனுக்கும் மஞ்ச ரிப்பன் அக்காவுக்கும்
டொக் டொக்
என்பதாகத்தான் இருக்கும்
உனக்குத்தெரிந்த பெரிய மிரட்டல்
நான் பேசும் ஒன்றிரண்டு கெட்டவார்த்தைகளை
வீட்டிற்கு சொல்லிடுவேன்
என்பதாகத்தான் இருந்திருக்கும்
பருக்களைத்தாண்டி மீசை முளைத்ததை
அழகாக பார்க்கத் தெரிந்த
அந்த முதல் நாளில்
நீ என்னிடம் பேசிய எல்லாமே
அனர்த்தங்களாகத்தான் தெரிந்தன
நாவல் பழம் பறித்ததும்
மரத்திலிருந்து நீ
கீழே விழ எத்தனித்தபோது
என் உள்ளங்கைகள்
உன் இடைப்பிடித்ததும் என்பதில் தொடங்கி
கண்ணா மூச்சியில்
எல்லோரையும் ஏமாற்றிவிட்டு
என் நாசித்துளைகள்
உன் பவுடர் வாசனை
நுகரவேண்டியும்
நீ தலைக்குளித்த சோப்பு வாசனை
நுகரவேண்டியுந்தானே
அப்போது உன் பின்னாடி வந்து ஒட்டிக்கொள்கின்றன
நம் சோட்டு குழந்தைகள்
அதை அரசல் புரசலாக கிண்டலடிப்பார்கள்
அதன் பேர் தெரியாமலேயே
உள்ளுக்குள் லேசாக பொடிதட்டும்போது விலகிடுவேன்
அது முதல் முறை
அதுதான் முதலுணர்வு ம்ம்
என்னை தக்கவைப்பதற்காக
நீ செய்யும்
இத்தனை ப்ரயத்தனங்களையும்
புரிவதற்குள்
காலம் உன்னை எங்கோ கொண்டு சேர்த்துவிட்டது பாரேன் நிலா
ராஜிவ் காந்தி
குண்டு வெடிப்பில் இறந்துவிட்டதாக
கோஷமிட்டுக்கொண்டிருந்தார்கள்
வேலையத்த பெரியவர்களும், சில சிரியவர்களும்
அதிலிருந்து
கொஞ்சநாள் கழிந்த சீசனொன்றில்
எருமைக்கொம்பிற்கு
சாயமடித்துக்கொண்டிருந்தாள் பாட்டி
தட்டுவடிவி உணர்கொம்பு தயார் செய்துக்கொண்டிருந்தான்
முரளி மாமா
கல்லூரிவிடுமுறை அண்ணன்களின்
ரஜினி ரசிகனா
கமல் ரசிகனா என்னும் தர்க்கம் மறைந்து
உடையிலும்
கேசக்கலைவிலும், கால் பூட்ஸிலும்
ஹிந்தி பாடல்களிலும் என
ஆரம்ப கால
ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான்களை
உடுத்தியிருந்தார்கள்
பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க ஆயத்தமாய்
சில்வர் குடங்கள் வரிசையில்
கிடத்தப்பட்டன
எங்கே போறீங்க
என்ற வாலுகளின் கேள்விகளை
உதறியவாறு
எங்கோ படையெடுத்தப்படி இருந்தார்கள்
முப்பது வயதிற்கும் நாப்பது வயதிற்கும் இடைப்பட்ட
பெண்டீரெல்லாம்
உன் வீட்டு மும்முரத்தில்
பந்தலிட்டிருந்தார்கள்
நீ ப்ரியப்பட்ட என் முற்றத்துப்பூக்கள்
வாசம் பரப்பி
அவை பூத்திருப்பதை
அன்றுதான் உறுதி செய்தன ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"