குழந்தைகள் தினத்தில்
கவிதைகளைப் பற்றி
கவிதையெழுதுவதில்
களிப்புதான் எப்பொழுதும்!
குழந்தைகள் தினத்தன்று
மகனின் பள்ளியில்
காணக் கிடைத்தவை
கவிதையாய் இங்கு...
சீருடை சிட்டுக்குருவிகள் இன்று
பல வண்ணப் பட்டாம்பூச்சிகளாய்!
பள்ளிக்கூடம் இன்று நந்தவனமானது
இந்தப் பஞ்சவர்ணக் கிளிகளால்!
வியாழன் கிரகத்திற்கு
அறுபதிற்கும் மேற்பட்ட
நிலவுகளாமே?
இதோ பூமியில்
அறுநூறுக்கும் அதிகமான
நிலவுகள்
அதுவும் அருகருகே!
மயில்கள் பங்கேற்ற
மாறுவேடப் போட்டியை
வேறெங்கிலும் கண்டதில்லை இதுவரை!
அழகான ஒப்பனையால் தங்கள்
அரக்க குணம் மறைக்கும்
அநேகருக்கு நடுவே
அரக்கர் வேடத்திலும்
அழகாகவே தெரிகின்றன
குழந்தைகள்!
பிஞ்சுகளிடம் கற்றுக்கொள்ள
இப்பிரபஞ்சத்தில் இருக்கிறது
இன்னும் ஏராளம்!
வேறு வேறு நிறங்களில்
வேடமிட்டிருந்தாலும்
வேற்றுமையின் நிழலிலிருந்து
விலகியே இருக்கின்றன
இந்த வெள்ளை உள்ளங்கள்!
இராவணனுக்கு உணவூட்டும்
இராதை!
எமதர்மனுடன் கைகோர்த்தபடி
இயேசுநாதர்!
ஆண்டாளின் ஆடை சரி செய்யும்
அன்னை தெரசா!
இவ்விசித்திர பந்தங்களைக் காண
விழியிரண்டு போதவில்லை!
கோணலும் கொள்ளை அழகுதான்
இவ்வண்ணத்துப் பூச்சிகள்
வரிசையில் நிற்கும்போது!
தேசிய கீதம் இசைக்கையில்
பேசியது யாரென்ற கேள்விக்கு
பாரத மாதா
வேடமணிந்த குழந்தை என
பார்த்தவர்கள் சொன்னபோது
சிரிப்பதைத் தவிர வேறு
வழியில்லாமல் போனது
விளையாட்டு ஆசிரியைக்கு!
கொள்ளையரைப் பிடிக்கப்போவதாக
ஒலிபெருக்கியில் சொன்ன
காக்கி உடுப்புக் குழந்தை
கொள்ளையடித்துப் போனது
அத்தனை உள்ளங்களையும்!
மான் வேடமிட்டிருந்த குழந்தை
வேடம் கலைத்தபின்னும்
மானாகவே தெரிந்தது!
மாறுவேடப் போட்டியில்
வேறு எல்லோரையும்
காண முடிந்தது
நேருவைத் தவிர!
நிகழ்ச்சி அரங்கத்தை
மலர்களால் அலங்கரித்த
மடத்தனத்தால்
மலர்கள் எவை
மழலைகள் எவை
என்ற அழகிய குழப்பம்
அரங்கேறியது அங்கே!
மேலும் இரசிக்க
ஏராளம் இருந்தும்
அலுவல் அழைத்தபடியால்
விடுமுறையின்
கடைசி நாளுக்கான
குழந்தையின் மனநிலையோடு
விடை பெற்றேன்
அவ்விடம் விட்டு!
அடுத்து செய்யவேண்டிய
அவசர வேலை ஒன்றிருக்கிறது!
வருடமொருமுறை வரும்
குழந்தைகள் தினத்தை இனி
மாதமொருமுறை என
மாற்றித் தரும்படி
மனுவொன்று
அனுப்பவேண்டியிருக்கிறது
மத்திய அரசுக்கு!