மனமே இறுதியில் துர்மணமே

தாவுகின்ற மனமே..
நீ தாவுகின்ற மனமே...
எதில்தான் நீ தாவியதில்லை?!
எதைத்தான் நீ ஆய்வதில்லை?!
ஆசையில் ஆழமாய் பொதிந்துவிட்டு
மோசமாய் நாசமாகும்
மனமே...
நேசமாய் வாழ்ந்திருக்க
மறந்து இச்சையில் சிக்கி நச்சைக் கக்கும்போதிலும்
நன்றி மறந்த மனமே!
நீ தினசரி நாறிச் சிதையும் மனமே!
பிறரைப் புறங்கூறியே
தன்னிலை மறந்து
தன்மானமிழந்த மனமே!
கண்ணெதிரே கலவரம்
நேரினும் காதுகேளாத மனமே!
பொன் பொருளில் மயங்கி இறுதிமண் இருளை மறந்த மனமே!
நீ மனிதநேயமெனும் மாண்பை தவணையில்
தவறவிடும் மனமே!

தாகத்தில் வீழ்ந்து மோகத்தில் ஆழ்ந்து
அதிவேகத்தில் நொந்துவிடும் மனமே!
நீ அநாகரிகம் கற்பிக்கும் கற்பையிழந்த கள்ள மனமே! குள்ள மனமே!
சுற்றம் மறந்த குற்றமனமே!
பணப்பை அறிந்து பந்தம் கொள்ளும் மனமே! மனப்பை அறியா மாசுபடிந்த மனமே!
குணப்பை இருந்தும் கூனுள்ள மனமே!
சினப்பை கொண்டு பழிகொள்ளும் மனமே!
சீறுவதுபோல நாறுகின்ற மனமே!
நாறுகின்றபோதும் நக்கிச் சுவைக்கும் நயவஞ்சக மனமே!
ஆணவத்தில் ஆடுகின்ற மனமே!
ஆடம்பரத்தை நாடுகின்ற மனமே!
காக்கா பிடித்து காரியம் தேடுகின்ற மனமே!
நீ ஓடுவதெல்லாம் அழிவை நோக்கிய பயணமே!
இறுதியில் அழுகிய நிலையில் பிணமே!
பூ மணமல்ல.. தேன் மணமுமல்ல... என்றைக்கும் நிரந்தரமே துர்மணமே!..

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (19-Nov-17, 9:41 pm)
பார்வை : 93

மேலே