நேரத்தின் தத்துவம்

நேரத்தின் தத்துவம்..!
===================

இயற்கை தந்ததோ இருபத்திநான்கு மணிநேரமாகும்..
..........இதிலெத்துணை நேரத்தைப் பயனாக்குகிறோம் நாம்.!
வியத்தகு விஞ்ஞானம் வியப்புறும் விந்தைபுரிந்தாலும்..
..........வீணே கழியுநல்நேரத்தை சேமிக்க வழியில்லையோ.?
மயக்கும் செயல்கள்மீதே நம்மதிகெட்டுப் போனதால்..
..........மாயமாய் மறைந்தே போய்விடுகிறது மொத்தநேரமும்.!
இயங்கும் இவ்வுலகிற்குப் பஞ்சபூதம் காரணமாமவை..
..........இயங்காமல் சற்றுநேரம் நிலையாயின் என்னவாகும்..?

நேரமதை நேசிக்கநாம் பழகவேண்டும்! செயல்புரியும்..
..........நேரத்தில் நல்லநேரம் கெட்டநேரம் உண்டென்போர்.!
கூரரறிவு பெற்றிட கடுமுழைப்பில் கவனம்வேண்டும்..
..........குறுகியநேரம் கிடைத்தால்கூட வீணடித்தல் கூடாதாம்.!
சீரழியுமிச் சமுதாயத்தில் நாட்டமிலா நிலைவேண்டும்..
..........சிறுபருவத்திலேயே சீராக வாழ்வுநெறி கற்கவேண்டும்.!
ஈரடிப்புலவன் வள்ளுவன் ஆயிரம்வருடம் முன்னமே..
..........இடித்துரைத்தான்!இளமையில் கல்லென எழுதினான்.!

வானில் எழிலாயுதிக்கின்ற விரிகதிரும் வெண்ணிலவும்..
..........வருவதற் கொருநாளும் நேரம்பார்க்க நினைவதில்லை.!
தேனீக்கள் மலர்நாடிச் செல்லத்தகுந்த நேரமெதுவென..
..........தெரிந்தா செல்கிறது! சிந்தையிலிது உதிக்கவேண்டும்.!
நானிலத்தில் ஓடும்நதியெலாம் நிலம்செழிக்க உதவும்..
..........நேரம்பாரா நலமொன்றேயதன் இயற்கை விதியாகும்.!
இனிப்புடன் கசப்பும் வாழ்வில் வருவதியற்கையப்பா..
..........இனியாவது நேரத்தின்மீது பழிபோடாக் கடமையாற்று.!

நேரமில்லை நேரமில்லையெனவே புலம்புவார் பலரும்..
..........நேரம்குறித்த கவலையெலாம் அவரிடம் இல்லையே.!
நேரமதைப் பகுத்து நித்தம்செயும் செயல்களினாலதை..
..........வகுத்தெடுத்தால் நேரமென்பது நிறையவே கிடைக்கும்.!
பாரஞ்சுமக்கும் மாடும் நேரமறிந்து செயல்படும்போது..
..........பகுத்தறிவாளருக்கோ இன்னும் ஏனோ புரியவில்லை.!
சோரமில்லாது வாழ்வில் ஏற்றம்பெற வேண்டுமெனில்..
..........சோம்பல் விடுத்துநேரம் கூட்டிக்கழித்து வாழப்பழகு.!

========================================================
நன்றி:: வல்லமை வெளியீடு

நன்றி:: படம் இஸ்கான் கோட்ஸ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (19-Nov-17, 8:56 pm)
பார்வை : 549

மேலே