மவுனம் ஏன்

அழகிய மதியே – நீ
மண்ணில் பூத்த நாளன்றே,
எனக்கென்று உன்னை உரித்தாக்கினான்...
உன்னை படைத்த நான்முகன்...!
கண்கள் உன்னைக் கண்ட கணத்தில்,
என் இதயம் விழித்துக் கொண்டது...!
அந்த நொடி முதல் உனக்காக,
துடிக்கிறது என் இதயம்...!
உயிரோடு கலந்து அணு அணுவாய்...!
என்னோடு காதல் யுத்தம் செய்கிறாய்...!!
உன் கரங்களைத் தழுவத்
தவிக்கும் என் கரங்களுக்கு...
உன்னில் இளைப்பாறுதல் உண்டோ...?
இரு சக்கர வாகனத்தில் என்பின்னே..
இனியவளே நீயமர்ந்து - என்
இடையைக் கட்டிக்கொண்டு செல்லும்,
புனித யாத்திரை பயணிப்பேனோ...?
கடற்கரை மணலில் வீசும் காற்றில்...
என் மடிமீது நீ தலைசாய்த்து,
என் இதழோடு இதழ் சுவைத்து,
நாணம் தரும் முத்தமொன்று தாராயோ...!
செல்லச் சண்டைகளோடு சிறு கோபம் கொண்டு...
சில நிமிடங்களிலே ஓடி வந்து...
கட்டித் தழுவி கோபம் தகர்த்திடாயோ...!
உன் மனம் விரும்பியதை - நீ
அறியும் முன்னே அதை – நானறிந்து
ஈடேற்றும் வாய்ப்பு கிடப்பது எப்போது...?
என் மனதில் தோன்றிய காதலை
மங்கையே உன் மனதில் இணைத்து
காதல் பூ பறிப்பேனோ...!
உலகம் கூடி நின்று, நம் காதலை
எதிர்த்து என்முன் நின்றாலும்...
துணிவோடு போராடி – உன்னோடு
மணப்பந்தலில் மணவாளனாய் நின்று,
மணப்பெண்ணாய் உன்னை மணமுடிக்கும்
தருணம் வர காத்திருக்கிறேன்...!
மணம் முடிந்த நாள் முதல்...
மண்ணோடு சேரும் நாள் வரை...
உள்ளங்கையில் கிடைத்த உலகமாய்,
உன்னைத் தாங்கி நிற்பேனடி உயிரே...!
என் அன்பின் தாகத்தைத்
தீர்த்து வைக்க கட்டிலில்,
மோகத்தோடு கட்டி அணைப்பாயோ...!
நம் உறவிற்கு அடையாளமாகப்
பூத்த தொட்டில் மலரைத்,
தாலாட்டத் தவிக்கிறது மனம்...!
படிப்பிற்கு ஏற்ற வேலை...
மனம் விரும்பிய வாழ்க்கை...
மகிழ்ச்சியின் மனதோடு,
மண்ணில் வாழும் நாள் வரை...
உன்னோடு வாழ விளைகின்றேன்...!
தேவதையே...
இந்த கனவுக் கோட்டை - நம்மை
வாழ வைக்கும் வசந்தத்தின் மாளிகையா...?
என் தேகத்தை புதைக்க நான் கட்டும்
கல்லறைத் தோட்டமா...?
என் வாழ்வின்..
தொடக்கத்தையும்... முடிவையும்...
உனக்குள் விதைக்கின்றேனடி – அது
முளைத்து துளிர் விடுமா – இல்லை
காய்ந்த சருகாகி விடுமா...?
ஏன்... ஏன்... ஏன்...
பதில் இல்லையே... ஏன்...?
Written by JERRY