காதலும் கடவுள்தான் -கங்கைமணி
![](https://eluthu.com/images/loading.gif)
காதலே என்னை கட்டிக்கொள்ள -உன்
கருவறைக்குள் என்னை ஒட்டிக்கொள்
குழந்தையாய் என்னை நீ ஆக்கு -நான்
கும்பிடும் தெய்வம் நீயாகு !
காதலே நீயும் கடவுள்தான் -அந்த
கருமுகில் அற்ற உலகில்தான்.
உடலே உனக்கு உலகு !...
உயர் சிந்தனைதான் உன் இலக்கு.
கோவம் குரோதம் பழியுணர்வே
கொடுஞ்செயல் தூண்டும் காரணிகள்.
அவற்றை அழிக்க அவதரிக்கும்
அவதார புருஷன் நீதானே !
அன்பு பாசம் நட்பெல்லாம் -உன்
அவதாரமென்றே நானறிவேன்.
ஐம்பூதம் அடங்கிய உடலுக்குள் -நீ
அனைத்தையும் அடக்கும் உயர்சக்தி.
அன்னையின் அன்பில் அவதரிப்பாய்
தந்தையின் பாசமாய் மாறிடுவாய்
தங்கையின் புரிவாய் வரும்நீயே !
நட்பாய் மனங்களில் மலர்ந்திடுவாய்.
இதயம்தான் உன் கருவறை -நீ
இருக்கும் இடம் பெரும் அரியணை
இரக்கம் பிறப்பதும் உன்னிடமே
ஈகை என்பதும் உன் குணமே.
அள்ளி அணைக்கும் தாயும் நீ
அடங்கிப்போகும் சேயும் நீ
கட்டிக்காப்பதில் தகப்பனும் நீ
காதலில் மட்டும் எல்லாமும் நீ
இரு விழிகள் ஓர்நாள் மோதும் -உன்
அரியணை மெல்ல ஆடும்
அவதாரமெல்லாம் ஒன்றாகும்
அன்றோ காதல் உருவாகும்.
புலன்களில் எல்லாம் பூப்பூக்கும்
புவியும்கூட புதிதாகும்.
எல்லைதாண்டி போர்புரியும்
இன்பக்கடலை வார்த்தெடுக்கும்
இருபுறமும் சுயம்பாய் முளைத்திருக்கும்
இரு கூடுகள் இணைய வழிவகுக்கும்-
பெரும் காவியம் படைத்த உயர்க்காதல்
ஒரு ஓவியம்போல் அங்கு உருவெடுக்கும்!.
-கங்கைமணி