விதி கிழித்துத் தை

புவிஈர்ப்பு விசையென
தாள் பிடித்திழுக்க
காரணிகள் ஆயிரம்
வாய்கடுக்க காத்திருக்கும் !

வைரப் பற்களோடு
ஊளையிடும் சூழ்நிலையை
கடந்தோடும் கால்களை
பெறமுடியாது ஒருபோதும்,
றெக்கை வரைந்துகொள் !

இந்த நொடியை
உள்ளங்கை ஏந்து,
அடுத்த நொடியை
மூளையில் அமர்த்து,
கடந்த நொடியை
கண்களில் நட்டுவை !

ஓடுவதை நிறுத்திவிட்டு
எங்கு ஓடுகிறாய் எனயோசி !
இலக்கடைதல் இரண்டாம் பட்சம்,
கழுகின் கண்களை கடன்வாங்கி
இலக்கு எதுவென தீர்மானி !

செத்த மீன்கள் தான்
நதியின் திசை நோக்கும்,
படகுகள் உடைத்துவிட்டு
நீந்தக் கற்றுக்கொள்
திரும்பிய திசையெல்லாம்
வழிக்கடல் பிறக்கும் !

இரையாகும் நொடி
கழுத்தருகே வந்தால்கூட
இரையெதுவென
இறைவனே கூட
கணிக்க முடியாதபடி
விதி கிழித்துத் தை !

நீயே
உன் புருவ மத்தியில்
அமர்ந்து யோசி,
தோல்விகளை குளிப்பாட்டி
தோளில் போட்டுக்கொள்,
வெற்றிகளை பிறந்தவுடன்
தெருவாசலில் கட்டு !

தக்கன மட்டுமே தகும் !
தகத் தகு தகவமைப்புகள்
இருந்தால் கூர் தீட்டு
இல்லையெனில் கூடு கட்டு
சுயமாய் கருத்தறி
தேவைகளை பிரசவி !

எந்த நொடியையும்
குழைத்தது நெற்றியிடும்
வித்தை வேண்டாம் !
எந்த நொடி கூடவும்
கை குலுக்கக் கற்றுக்கொள் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (23-Nov-17, 5:57 pm)
பார்வை : 132

மேலே