தாழம்பூக்கள் தவமிருக்கின்றன

பள்ளிக்கூடம் சென்றார்
பாடங்கள் பல பயின்றார்... 
கல்லூரியும் சென்றார் 
பொறியியற்கல்வியில் சிறந்தார்... 
மணவாளன் கைப்பிடித்து 
மணவாழ்வு காணச் சென்றவர் 
பிறந்த நல்லூர் திரும்பி வந்தார் 
இனிய மணவாளனுடன் 
வருடங்கள் பல கழித்து... 

வாயிற்கதவுகள் இல்லாத 
செங்கோட்டை தன் 
நேசக்கதவுகள் திறந்து 
பெண்ணிவரை வரவேற்கும்... 

குற்றால நீர்வீழ்ச்சி 
நடனமிட்டு பெண்ணிவரை 
வரவேற்க இப்போதே 
ஒத்திகையைத் துவக்கியது... 

சாலை ஓரங்களில் 
பசுஞ்சோலைகளுக்கு நீரூற்றிப் 
புதுப்பிக்க மேகங்கள் 
ஏற்பாடு செய்வதாய்த் தகவல்... 

குற்றாலத் தென்றல் அன்புடன் 
வரவேற்று மகிழ்ந்து 
உடனிருந்து குதூகலித்து 
ஊர்செல்லத் திரும்புகையில் 
வழியனுப்பி வைக்கத் 
தயாராயிருப்பதாகவும் செய்தி... 

குயிலினங்கள் கூட்டம் 
போடுகின்றன எந்த ராகம்பாடி 
இசைப்பெண்ணை வரவேற்று 
எந்த ராகத்தை அவரிடம் 
கற்கலாம் என்று... 

ஐந்தருவி பாயும் 
ஆற்றங்கரையோரமெல்லாம் 
மலர்ந்திருக்கும் தாழம்பூக்கள் 
தவமிருக்கும் தம்வாசம் 
ஊரெங்கும் மணக்க... 

வனங்களில் மூங்கில்கள் மட்டும் 
சும்மாவா இருக்கும்... 
புல்லாங்குழல் ஆவதற்கு 
முன்பே இனியநல் இசை கற்க 
ஆர்வம் கொள்ளும்... 

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (27-Nov-17, 4:01 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 210

மேலே