உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி 1

" ப்ரண்ட பார்க்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனாள். இன்னும் வரலையே. மதியம் சாப்பிட்டாளோ, இல்லையோ? "

மேரி அம்மாவின் குரலில் பதற்றம் தென்பட்டது.

" நான் சென்று பார்க்கிறேன். "

கனகராஜ் கிளம்பினார் பேரூந்து நிறுத்தத்தை நோக்கி.

பேரூந்துகளைப் பார்த்துக் கொண்டே கனகராஜ் நின்றிருந்தார்.

ஏதேச்சையாக வலப்பக்கம் திரும்பிய போது அங்கு ஜெனிபர் நடந்து வருவதைக் கண்டார்.

" ஏம்மா ஜெனி! நீ பஸ்ல வருவனு நினைச்சேன். ஆனால், நீ நடந்து வருகிறாயே!. "

" சும்மா தான் பா. வீட்டுக்குப் போகலாம். "

வீடு நோக்கி விரைந்தார்கள்.

ஜெனி தன் தந்தையிடம் பேச எண்ணினாள்.
காரணம், ஜெகன் காதலை ஏற்பதா, வேண்டாமா? என்பதைப் பற்றிய சந்தேகம்.
அவள் ஆதியைக் காதலித்தது அவள் தந்தைக்கு தெரியாது.

" அப்பா! உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். அம்மா உங்ககிட்டயும் தான். இப்படி வந்து உட்காருங்க. "

மேரியும், கனகராஜும் சோபாவில் அமர்ந்து ஜெனியின் முகத்தைப் பார்த்தார்கள்.

" முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரம் அப்பா. உங்களுக்கு தெரியாமல் ஆதியென்ற ஒருவனைக் காதலித்தேன். அவனுக்கு என்னைத்தவிர வேற பெண்களோட பழக்கம் இருக்கிறது நேற்று தான் தெரிந்தது.
உயிருக்கு உயிரா நேசித்தவன் ஏமாற்றுக்காரனாக இருக்கிறானே என்று நினைத்த போது அழுகை அழுகையாக வந்தது. அழுதே விட்டேன். அப்போது ஆதி அங்கிருந்து பொய்ட்டான். நான் அழுதுகிட்டு இருந்ததைப் பார்த்து இன்னொருவன் வந்து அன்பாக பேசினான்.
அந்த ஜோடிப்புறாகளைக் கொடுத்ததும் அவன் தான்.
அவன் பெயர் ஜெகன்.
இன்னைக்கு அவன்கிட்ட பேசிய போது தான் தெரிந்தது அவன் கடந்த பத்து வருடங்களாக என்னைக் காதலிப்பது.
அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
உங்களுக்கு தெரியாமல் நான் எடுத்த முடிவு தப்பாயிடுச்சு. அதனால், இந்த விடயத்தில் உங்க முடிவே என் முடிவு. "

என்று கூறிவிட்டு தன் பெற்றோர் முகத்தைப் பார்த்தாள் ஜெனி.

மேரி அம்மாவும், கனகராஜும் மற்ற பெற்றோர்களைப் போல் கோபப்படவில்லை.

சில பெற்றோர்கள் தங்கள் இளமைக்காலக் காதல் நிறைவேறாவிடில் தங்கள் பிள்ளைகளைக் காதலிக்க அனுமதிப்பதில்லை.
இன்னும் சிலருக்கு, என்னதான் தங்கள் காதல் வெற்றியடைந்து சேர்ந்து வாழ்ந்தாலும், பணமும், சமூகத்தில் தான் கொண்ட கௌரவமும் தங்கள் பிள்ளைகள் காதலுக்கு குறுக்கே நிற்கும்.
அதோடு, சாதியும், மதமும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும்.

ஆனால், இப்பெற்றோர் அப்படி இல்லை..

ஜெகனைப்பற்றி ஜெனிபரிடம் கேட்டார்கள்.

" அவன் என்ன வேலை பார்க்கிறான்? "

" தெரியாது. "

" அவன் எங்கே இருக்கிறான்? "

" தெரியாது. "

" அவன் என்ன படித்துள்ளான்? "

" தெரியாது. "

" நாங்க கேட்ட கேள்விக்கெல்லாம் தெரியாதென்று பதில் சொல்கிறாய். அவனுக்காக எங்களிடம் பேசுகிறாய். பழகிய இரண்டு நாட்களில் உன் மனதில் அவன் பதிந்துவிட்டான். "

கனகராஜ் தனது புரிதலை வெளிப்படுத்தினார்.

" அடுத்தமுறை அவனை சந்திக்கையில் எங்களிடம் அழைத்து வா. "

மேரி அம்மா கட்டளையிட்டார்.

" சரி. பசிக்கிறது. வாங்க சாப்பிடலாம். "

கனகராஜ் சாப்பாட்டு மேஜையை நோக்கி நடந்தார்.
மேரியும், ஜெனியும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

" ஏன்டா ஜெகன் நீ திருந்தவே மாட்டியா?
வெளியூரில் கிடைத்த வேலையை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இப்படி புறாகளை வளர்த்துட்டு ஊர் சுற்றுகிறாயே! அது உனக்கே நல்லா இருக்கா? "

ஜெகனின் அம்மா காயத்ரியின் வழக்கமான சம்பஜனை ஆரம்பமானது.

ஜெகனோ வழக்கம் போல வாயைத் திறக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

" வேளா வேளைக்கு வயிற்றுக்கு கொட்டுவதற்கு மட்டும் தவறுவதே இல்லை.
எசமான் இன்னைக்கு அப்படி என்னத்த வெட்டி முறிச்சீங்களாம். "

ஜெகனின் அப்பா கந்தசாமியின் காரசாரமான வார்த்தைகள் அம்புகளாக ஜெகனை நோக்கி பாய்ந்தன..

ஜெகனுக்கு அவற்றால் எந்தக் கோபமும் இல்லை.
காரணம், தன் அப்பா, அம்மா திட்டுவது தன்பால் கொண்ட அன்பினால் தான் என்று அவனுக்கு தெரியும்.

நல்லா சாப்பிட்டுவிட்டு போய் தனது படுக்கை விரிப்பில் படுத்துக் கொண்டான் புறாக் கூண்டுகளுக்கு அருகில்.

சிறிது நேரம் கழித்து கந்தசாமி அங்கு வந்தார்.
ஜெகன் கொசுக்கடியில் புரண்டு புரண்டு படுத்தவாறு இருந்தான்.
கந்தசாமி தன் போர்வையை எடுத்து ஜெகனுக்கு போர்த்திவிட்டு வந்தார்.
வாசலில் நின்றிருந்த காயத்ரி, " ஏங்க! அவன் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கீங்க. அப்புறம் ஏன்க அவன் கிட்ட எப்போதும் கோபப்படுமாதிரி பேசுறீங்க?. ", என்று கேட்டார்.

" அப்படியாவது கோபப்பட்டு வேலைக்குப் போய் தன் சொந்தக்காலில் அவன் வாழ்ந்தால் அதைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன்னு தான் அப்படி பேசுறேன். "
" ம்ம், சரி. நேரமாச்சு. நீங்க போய் படுத்துக் கொள்ளுங்க. பாத்திரங்களைக் கழுவனும். "

என்றவாறு காயத்ரி சமையலறைப் பக்கம் சென்றார்.

கந்தசாமி தனது படுக்கையில் படுத்து கண்ணயர்ந்தார்.

காலையில் கண் விழித்த போது, ஜெகன் மீது தான் போர்த்திய போர்வை தன் மீது போர்த்தி இருப்பதைக் கண்டார்.
எழுந்து சென்று ஜெகனைத் தேடினார்.

" அவன் காலையில சீக்கிரமே கிளம்பிட்டாங்க. "

" ஏதாவது சாப்பிட்டானா? "

" இல்லைங்க. "

" சாப்பிடாமல் எதுக்கு எங்கப் போனான்? "

" தெரியாதுங்க. நான் எழுந்து பார்த்த போது அவனை படுக்கையில் காணவில்லை. "

" சரி. சாப்பாடு ரெடியா? எனக்கு நேரமாயிடுச்சு. "

கந்தசாமி ஒரு மின் பணியாளர்.
மிகவும் நேர்மையானவர்..

ஜெகன் கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தான்.

அவனை ஜெனி தேடிக் கொண்டு அங்கு வந்தாள்.

ஜெகன் கடலலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அருகில் சென்று, " என்னவாயிற்று? ஒரு மாதிரி இருக்க?. "
என்றாள் குழந்தை குரலில்.

" ஒன்றுமில்ல ஜெனி. சும்மா தான். "

" சரி நீ கவிதை எழுதுவியா? "

" எழுதியதில்லை. "

" பொய் சொல்லாமல் சொல்லு. "

" பட்டுப் போல் பெண் நீ பக்கத்திலேயே இருந்தால் பாட்டுக்கேது பஞ்சம்?
முத்துப் போல் பெண் நீ கவிதை சொல்லச் சொன்னால் முத்தமிழில் முழ்கிய என் கவிதைகள் உன்னைக் கொஞ்சும்.. "

" வாவ்! நல்லா இருக்கு. "

" அப்படியா? ஏதோ உளறுனேன் உன்னைப்பற்றி. அது கவிதையாயிற்று நீ போற்றி. "

" ம்கூம். "

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Dec-17, 1:21 pm)
பார்வை : 554

மேலே