வேண்டாத பிரயாணி

வேண்டாத பிரயாணி

இரவு மணி இரண்டுக்கு மேல் ஆகி விட்டது. ஆனாலும் நீண்ட தூரம் செல்லும் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறையவில்லை. காரணம் நாளை மறு நாள் தீபாவளி பண்டிகை. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. வெளி ஊர் செல்லும் பயணிகள் கூட்டம் பேருந்தில் ஏறிக்கொண்டும், பேருந்துகள் தொடர்ந்து சென்று கொண்டும் இருந்தன. அழுக்கடந்த உடையும் மெல்லிய உடலுடன் நடுத்தர வயது மனிதன், அவனுடைய மனைவி, மூன்று குழந்தைகள், இவர்கள் ஒவ்வொரு பேருந்தாக இடம் கிடைக்க அல்லாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக கூட்டம் குறைவாக காணப்பட்ட பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டனர். பத்து நிமிடங்கள் கழித்து ஒரு கூட்டம் பேருந்தில் ஏறி உட்கார்ந்தது. அதன் பின்னால் ஒருவர் பின் ஒருவராக கூட்டம் ஏற ஆரம்பித்தது. ஏறியவர்களில் ஒரு சிலர் இந்த குடும்பத்திடம் வந்து இது “ரிசர்வ்” செய்யப்பட்டது என இவர்களை எழுப்பி விட்டனர். இவர்களும் என்ன செய்வது என்று திகைத்து நின்று கொண்டிருந்தனர். கண்டக்டர் பதிவு பட்டியலுடன் பேருந்தில் ஏறி ஒவ்வொரு இருக்கைகளாக பார்த்து பட்டியலில் குறித்து வந்தார். இந்த குடும்பத்தின் அருகில் வந்தவுடன் நீங்க ரிசர்வ் பண்ணியிருக்கீங்களா? என்று கேட்டார். அதற்கு அந்த ஆள் விழித்தான். “ஐயா நாங்க அவசரமா ஊர் போயாகணும்” என்று சொன்னான். கண்டக்டர் ‘ஏம்ப்பா’ இதுல டிக்கட் எல்லாம் முடிஞ்சுதப்பா, நீ அடுத்த வண்டியில வந்துடு சொல்லி விட்டு அடுத்த சீட்டை நோக்கி சென்று விட்டார். அவருடைய வேலைகள் முடிந்து வரும்பொழுதும் இந்த கூட்டம் நிற்பதை பார்த்ததும் ‘ஏம்ப்பா’ நான்தான் சொன்னேனே? சீட் எல்லாம் முடிஞ்சுடுச்சுன்னு. ஐயா நாங்க நின்னுட்டு வேணாலும் வர்றோம் டிக்கட் இல்லையின்னு மட்டும் சொல்லிடாதீங்க என்று கெஞ்சினான். கண்டக்டருக்கும் இவனை பார்க்க பரிதாபமாய் இருந்தது. சரிப்பா ஒரே இடத்துல இடம் கிடைக்காது சொல்லி விட்டு அவர்களை பிரித்து பிரித்து உட்கார வைத்து பயணசீட்டுக்கான பணத்தையும் பெற்று சென்று விட்டார்.
பேருந்து சீராக ஓடிக்கொண்டிருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பேருந்தில் விளக்குகள் அணைக்கப்பட்டிடுந்தன. திடீரென்று ஒரு குரல் “ஐயோ” என் பணத்தை காணோம் என்று. டிரைவர் சீட் எதிரில் அமர்ந்து கொண்டிருந்த கண்டக்டர் சத்தம் கேட்டு திரும்பி பார்த்து டிரைவரிடம் லைட்டை போட சொன்னார். டிரைவர் லைட்டை போட்டார். பேருந்துவின் நடுவில் நின்று கொண்டிருந்தான் அந்த அழுக்கான ஆள். ஐயா இங்க வச்சுட்டு போன என் பையில் 10,000 ரூபாய் வச்சிருந்தேன், அதை காணல, கூப்பாடு போட்டான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பயணிகள் சட சட வென கண் விழித்தனர். என்ன? என்ன? கேள்விக்கணைகள் எல்லா பக்கமிருந்தும் வந்தன. அந்த ஆள் அழுது கொண்டே என் பணத்தை காணல, யாராவது எடுத்திருந்தா தயவு செய்து கொடுத்திடுங்க, அருகில் வந்த ஒரு பயணி அவனது தோற்றத்தை பார்த்து நம்பிக்கையில்லாமல் ஏம்ப்பா நிச்சயமா இதுலதான் பணத்தை வச்சிருந்தியா? கேட்டார். ஐயா இதுலதான் பணத்தை வச்சேன். நீங்க செக் பண்ணி பாருங்க, அந்த பயணி இவன் பையை கவிழ்த்து கொட்டி பார்த்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. “இதுதான் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் ஏத்திட்டு வரக்கூடாதுங்கறது” அலுத்துக்கொண்டார் ஒரு பயணி. பயணிகள் அனைவரும் கண்டக்டரை பார்த்து நாங்க எல்லோரும் வீடு போய் சேர வேண்டாமா? நீங்க அந்த ஆளை என்னன்னு கேளுங்க? தங்களை பற்றி மட்டும் கவலைப்பட்டனர்.
இப்பொழுது “இவன்” பிரச்சினை ஆனது கண்டக்டருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. கண்டக்டர் நீ பேசாம வேற பஸ்ல போ அப்படீன்னு சொன்னா கேட்காம இப்ப என் உயிரை எடுக்கறயேயா? என்றவர் அண்ணே வண்டியை பக்கத்துல இருக்கற ஒரு போலீஸ் ஸ்டேசன் கிட்டே நிறுத்தண்ணே என்றார். டிரைவர் அப்பொழுது சென்று கொண்டிருந்த ஊரில் போலீஸ் ஸ்டேசன் பக்கம் பேருந்தை கொண்டு சென்று நிறுத்தி விட்டு பயணிகள் இறங்கும் பாதையை மறித்து நின்று கொண்டு “கண்டக்டரை” நீங்கள் உள்ளே சென்று போலீசை அழைத்து வருமாறு கூறினார். கண்டக்டரும் கீழே இறங்கி ஸ்டேசன் உள்ளே சென்று இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்தார். வந்தவர்கள் இவனை கீழே இறங்க சொன்னார்கள். ஒரு போலீஸ் இவனை அழைத்து உன்னோட பணம்தான் காணமா? அதிகாரமாய் கேட்டார். ஆமாங்கய்யா என்றவன் அந்த போலீசை தனியாக கூப்பிட்டு ஏதோ சொன்னான். இருவரும் ஐந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு அந்த போலீஸ் மற்ற போலீசுடன் ஏதோ சொல்ல அவரும் உள்ளே சென்று மேலும் நான்கைந்து போலீசுடன் வந்து பேருந்துக்குள் ஏறினர். உள்ளே போலீஸ் நுழைந்ததும்
டிரைவரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த மூவரும் சடாரென எழுந்து ஓட முற்பட்டனர். போலீஸ் அவர்கள் மூவரையும் பிடித்துக்கொண்டு கீழே இழுத்து வந்தனர். டிரைவர் கண்டருக்கு ஒன்றும் புரியவில்லை கீழே இறங்கிய மூவரின் முகுகில் கட்டியிருந்த பையை சோதனை செய்தனர். அதனுள் ஒரு துப்பாக்கி, கத்தி,மற்றும் நாட்டு வெடிகுண்டு போனறவைகள் இருந்தன. போலீஸ் அவர்களை உள்ளே இழுத்து சென்றது.பத்து நிமிடங்கள் கழித்து போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து அவர்களை போகலாம் என்றார். பேருந்தில் இருந்த பயணிகள் அந்த அதிகாரியை சுற்றி கொண்டு எதற்கு அந்த மூணு பேரை “பிடிச்சிட்டு” போனாங்க என்று கேட்டனர் அந்த மூவரும் பேருந்தை நடு வழியில் நிறுத்து கொள்ளை அடிக்க நினைத்ததாகவும், அதற்குள் இந்த ஆள் அவர்களின் நோக்கத்தை தெரிந்து கொண்டு இந்த நாடகத்தை தனியாக போட்டிருக்கிறான். அவனுக்கு நீங்கள் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.விலக்கி விட்டு ஸ்டேசனுக்குள் சென்று விட்டார்.
பேருந்து இப்போது அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தது.கண்டக்டர் தன்னை இவர்கள் அருகில் உட்கார சொன்னதால் அந்த மூவரில் ஒருவன் பையில் துப்பாக்கியை பார்த்தவன் அவர்களை கண்கானிக்க, அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு டிரைவரை மிரட்டி வண்டியை நிறுத்த முயற்சி செய்யப்போவதை அறிந்தவன் உடனே தன்னிடம் இல்லாத பணத்தை “காணவில்லை” என்று நாடகமாடி பயணிகளின் சொத்தை காப்பாறினான். ராஜ மரியாதையுடன் அவனும் அவனது குடும்பமும் அந்த கொள்ளையர்கள் மூவர் உட்கார்ந்திருந்த இருக்கையில் சுகமாக தூங்கிக்கொண்டு வந்தனர். இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் ஏன் ஏத்தறீங்க என்று கேட்டவர்களின் சொத்துக்களை காப்பாற்றியவன் என்ற மமதை இல்லாமல் தன் குடும்பத்தாருடன் சுகமான நித்திரையில் இருந்தான் அவன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Dec-17, 11:50 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 172

மேலே