வர்ணனை

வர்ணனை இல்லாமல் இலக்கியம் இருக்கமுடியாது. ஏனென்றால் இலக்கியம் ஒரு நிகர்வாழ்க்கையை வாசகன் தன் கற்பனையில் வாழும்படி செய்கிறது. அந்த வாழ்க்கையின் நிலமும் சூழலும் மன உணர்வுகளும் கதையில் வர்ணனை வழியாகவே சொல்லப்படமுடியும். நிகழ்வுகள் வர்ணனை வழியாகவே அனுபவங்களாக ஆகின்றன. இலக்கியத்தின் நோக்கம் தெரிவித்தல் அல்ல வாழச்செய்தல்.

ஆனால் வர்ணனைகள் இலக்கியத்தகுதி கொள்ளவேண்டுமென்றால் அவை இலக்கிய ஆசிரியனால் உண்மையான உணர்ச்சியுடன் சொல்லப்பட்டிருக்கவேண்டும். அந்த ஆசிரியனின் சொந்தப் பார்வையின் தனித்தன்மை அதில் இருக்கும். அப்போதுதான் வர்ணனைக்கு உயிர் இருக்கும்.

அ.முத்துலிங்கம் ஒரு கதையில் ஓர் இளம்பெண்ணின் தளிர்விரல்கள் பல்லிக்குஞ்சுகள்: போலிருந்தன. ஒளி ஊடுருவுகிறதா என்று தோன்றும் என்று எழுதியிருக்கிறார். அது அவருக்கே உரிய வர்ணனை. அதுதான் . நம் கற்பனையைத் தூண்டுகிறது. நம் கண் முன் ஒரு காட்சியனுபவத்தை முன்வைக்கிறது. அதுவே அதை இலக்கியமாக்குகிறது.

மாறாக காந்தள்பூ போன்ற விரல்கள் என்று சொல்லியிருந்தால் அதில் ஆசிரியனின் உண்மையான உணர்ச்சி, அவதானிப்பு இல்லை. அது வழக்கமான வர்ணனை. தேய்வழக்கு. அது எந்த உணர்ச்சியையும் உருவாக்காது. வெறும் அணியலங்காரம் மட்டும்தான் அது. எந்த காட்சியனுபவத்தையும் உருவாக்குவதில்லை.

சாண்டில்யன் வகையறாக்களின் வர்ணனைகள் அணியலங்காரங்கள். அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இலக்கியவாதியின் வர்ணனைகள் நாம் ஐம்புலன்களால் அனுபவிக்கும் அனுபவத்தை சொற்கள் வழியாக அனுபவிக்கச்செய்கின்றன.

எழுதியவர் : (7-Dec-17, 4:39 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : varnanai
பார்வை : 757
மேலே