மீள்வாசிப்பில் எஸ்பொவின் சடங்கு

நடேசன்

ஈழத் தமிழ் உலகில் எஸ்.பொ. வின் சடங்கு வித்தியாசமான நாவல் மட்டுமல்ல, அகண்ட தமிழ் இலக்கியப்பரப்பில் தனித்து நிற்கக்கூடியது. தமிழ்நாவல்களில் குறியீட்டுத்தன்மையால் சடங்கு முன்னுதாரணமாகிறது.

கதை மூன்று முக்கிய பாத்திரங்களை மட்டும் கொண்டு சொல்லப்படுகிறது. அதிலும் மூன்றாவது மனிதனாக கதை சொல்லத்தொடங்கி செந்தில்நாதனின் அகக்குரலை மட்டும் பிரதானமாக வைத்து எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் வெர்ஜினியா வுல்ஃப் ஒரே நாளில் நடப்பதாக எழுதிய (Mrs Dalloway)போன்று மனச்சாட்சியின் குரலாக (stream of consciousness)) கொண்டு செல்லும் மொடனிஸ்ட் நாவல். இங்கே எஸ்.பொ. வெள்ளிக்கிழமை தொடங்கிய கதையை புதன்கிழமையில் முடிக்கிறார்.

ஒரு சில இடத்தில் அன்னலெட்சமியின் அகக்குரலில் கதையைச் சொல்ல வந்தபோதும் நாவலின் பெரும்பகுதி செந்தில்நாதனின் அகநிலை எண்ணங்களாலேயே பின்னப்படுகிறது.

இந்த நாவல் வடபிரதேசத்தில் வடமராட்சியில் உள்ள பருத்தித்துறை வெள்ளாளச் சமூக மனிதர்களின் அகம் மற்றும் புற வெளிப்பாடாக வெளிவருகிறது. மூன்றாவது நபராக கதை சொல்லும்போது செந்தில்நாதனின் தகப்பன் நளப்பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருப்பதாக சொல்லுகிறார். அதே நேரத்தில் செந்தில்நாதன் மிகவும் ஒழுக்கமானவராகவும் காமசிந்தனைகள் வயப்படும்போது தனது கைகளுக்கு அப்பால் போகாத ஒழுக்கசீலராகவும் சித்திரிக்கப்படுகிறார்.

மேற்கத்தைய பெண்களின் தனபாரங்களை சினிமாவில் தரிசித்தாலும் இறுதியில் மனைவியின் தனபாரத்தை மட்டுமே நினைவில் மீட்டும் ஒழுக்கசீலராகவும் காட்டப்படுகிறார். இந்த மாதிரியான யதார்த்தமற்ற ஒழுக்கத்தை செந்தில்நாதனின் மேல் திணித்து யாழ்ப்பாண வெள்ளாள ஆண்களை குறிப்பாக பருத்திதுறையினரை நக்கலடிப்பது எஸ். பொன்னுத்துரையின் உள்நோக்கமாகத் தெரிகிறது.

அந்த நக்கலை ஒரு சிறந்த இலக்கியமாக படைத்து அதை காலாகாலத்துக்கும் விட்டுச்செல்வதில் வெற்றி கண்டிருக்கிறார். ஆனால் இதை பல விமர்சகர்கள் கண்டாலும் அதை மறைத்து எஸ்.பொ. வை இந்திரிய எழுத்தாளர் என முத்திரை குத்துவதோடு திருப்தியடைந்துவிடுகின்றனர்.;

செல்லப்பாக்கிய ஆச்சியை வீடு கட்டும் மேற்பார்வை, முதல் வேலி அடைப்பு மற்றும் குடும்பக்கட்டுப்பாட்டைக்கவனிக்கும் அதிகாரி போன்ற தோற்றப்பாட்டுடன், சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட பெண்ணாக வெளிபடுத்துவதிலிருந்து யாழ்ப்பாணத்து மாமிமார்களின் இராஜாங்கத்தை சித்திரிக்கிறார். இது யாழ்ப்பாணத்தாய்வழி கலாச்சாரத்தின்மேல் அவர் வைத்துள்ள கிண்டல் என்பதைப்புரிவது கடினமில்லை.

அன்னலெட்சுமி மீது கொண்ட காதல் ஆவேசத்தில் வேலையில் விடுப்பு எடுத்துக்கொண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் செந்தில்நாதன், வெறும் கைகளோடு தனது கைகளை மாத்திரம் நம்பி கொழும்பு திரும்புகிறார். ஐந்து நாட்கள் விடுமுறையிருந்தும் போனகாரியம் செய்து முடிக்க வக்கில்லாத மனிதராக செந்தில்நாதனை உருவாக்கி அவரது ஆண்மையை காமடியாக்குகிறார் எஸ்.பொ.

அதேபோல் உடலுறவுக்கு வாய்பற்றதால் ஓசியில் குடித்துவிட்டு குறட்டைவிடும்போது இவரை எதிர்பார்த்திருந்த மனைவி கைவிரல்களால் சுய இன்பம் பெறுகிறாள். அடுத்தநாள் அவள் மாதவிலக்கு அடைவதால் எதுவும் செய்யமுடியாது செந்தில்நாதன் திரும்புகிறார் என்பதை காட்டுவதன் மூலம் எஸ்.பொ. எதைக் குறியிட்டுக் காட்டுகிறார்?

செந்தில்நாதன் என்ற ஒழுக்கசீலர் தனது ஆண்மையை அந்த ஐந்து நாளில் காட்டமுடியாது மாமியின் காவலால் இன்பம் துய்க்காது மனவேதனையுடன் மீண்டும் கொழும்பு செல்லத்திரும்பியபோது, படலையில் விடைபெறும்போது, கிடுகு வேலியில் வெள்ளாடு போல் மெதுவான மனைவியின் உடல் உரசல் மட்டும் பெற்றபடி சாப்பாட்டுப்பார்சலுடன் வேறு எந்த முறைப்பாடும் அற்று கொழும்பு திரும்புகிறார்.

யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பு வேலி அடைப்பதில் தொடங்கி, காசு கொடுப்பதிலும் சிரட்டையில் தேநீர் கொடுப்பதிலும் தெரிகிறது. வேலி அடைக்க வந்தவன் சிரட்டைத்தேநீரை மறுத்து வேலைக்கு மட்டும் பணத்தை தந்துவிடு என்பதன் மூலம் குடிமை உறவை, முதலாளி -தொழிலாளி உறவாக்குகிறார்.

சாதிரீதியாக நான் பாதிக்கப்படவில்லை என எஸ்.பொ. சொன்னாதாக சிலர் எழுதியிருந்தார்கள். ஆனால், அவரது சுயசரிதை நூலாகிய வரலாற்றில் வாழ்தலை படித்தால் அது பொய்யெனப்புரியும். அவரது ஆரம்ப காலங்கள்-பாடசாலை பின்பு ஆசிரியராக கரம்பனுக்கு அவர் செல்லும்போதெல்லாம் யாழ்ப்பாணத்து சாதி ரீதியாக அவர் நிராகரிக்கப்படுகிறார் என்பது தெரிகிறது. அப்படியான பாதிப்புகள் அவர் மட்டக்களப்பு சென்ற பின்பும் இலக்கியவாதியாகிய பின்பும் குறைந்திருக்க முடியும்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த எஸ்.பொ. மிகவும் திறமையாக யாழ்ப்பாண வெள்ளாளரை நக்கல் அடித்தது இந்த சடங்கு மூலம்தான். ஆனால், பலர் இதை இந்திரிய எழுத்து எனப்புறந்தள்ளுவதன் மூலம் தெரிந்து செய்தார்களா தெரியாமல் செய்தார்களா என்பது எனக்குத்தெரியாது.

என்னைப்பொறுத்தவரை சடங்கு நாவல், யாழ்ப்பாணத்து வெள்ளாளரை மாமிக்குப்பயந்து மனைவியோடு கூட உடலுறவு துய்க்காத ஆண்மையற்றவர்களாக சினிமாஸ்கோப்பில் காட்டியுள்ளது.

யாழ்ப்பாண நகரத்தின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்த எஸ்.பொ. தனது சுற்றுவட்டாரத்து வெள்ளாளரை எடுக்காமல் ஏன் பருத்தித்துறையை தெரிந்தெடுத்தார்..? இங்கேதான் அவரது கூர்மையான அறிவு தெரிகிறது. வடக்கைப்பொறுத்தமட்டில் மற்றைய பகுதிகளிலும் பார்க்க சாதியம் அதிகமாகத் தவழ்ந்து விளையாடியது பருத்தித்துறை மற்றும் அதைச்சூழ்ந்த வடமராட்சி பிரதேசத்தில்தான்.

முரண்பாடுகளை முன்வைக்காமல், புளட் எனப்படும் எந்தக்கதையாக்கமற்று தனியாக ஒரு பாத்திரத்தின் நினைப்புகளுடனேயே கதையை நகர்த்திச் சென்றிருக்கிறது சடங்கு

இந்த நாவலின் தன்மையில் 1920 உருவாகிய நவீன எழுத்தாளர்களாகிய (Modernist)) வேரஜினியா வுல்ஃப் (Mrs Dalloway) ஜேம்ஸ் ஜொய்ஸ் (Ulysses) ஆகியோரின் நடையைப் பின்பற்றினாலும் கதையின் பண்பில் விலங்குப்பண்ணை போன்ற ஒரு குறியீட்டு நாவல்தான் சடங்கு.

தனது அறிவுத்திறமையால் மேலாதிக்கம் செலுத்திய ஒரு சமூகத்தை நீங்கள் ஆண்மையற்றவர்கள் எனச்சொல்லவருவது ஒன்று. இரண்டாவது, காலம் காலமாக சீதனமாக வீடும்பெற்று, மாமா மாமியிடம் சீவிய உருத்தும் பெற்று வாழும் யாழ்ப்பாணத்து மாப்பிளைமாரை மாமிமாரின் சேலைத்தலப்பில் ஒதுங்குபவர்கள் எனவும் சொல்லியிருக்கிறார்.

விலங்குப்பண்ணையில் ருஷ்ய போல்சவிக்கினரை பன்றிகளாக்கியதிலும் பார்க்கக் கீழானது இந்த நாவல் உத்திமுறை. . ஆனால் போல்சவிக்காரருக்கு உடன் புரிந்துவிட்டது.தடைசெய்து விட்டார்கள். எதிரானவர்கள் உடனே அதை முக்கிய நாவலாக்கி பாடத்திட்டங்களில் சேர்த்து விட்டார்கள்.

அவுஸ்திரேலியாவில் எதற்கும் பிரயோசனமில்லாதவர்களை வாங்கர் (wanker) என்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் எந்த பெண்ணும் கிடைக்காமல் கையை மட்டும் பாவித்து கொள்பவர்களை நக்கலாக சொல்லும் வார்த்தை இதுவாகும்.இதுவும் தமிழ்நாட்டில் “ஒன்பது” போல் கோபமூட்டும் வார்த்தையாகும்.

எத்தனையோ தலித் நாவல்கள் தமிழ்நாட்டில் செய்யாத விடயத்தை எஸ். பொ. செய்துவிட்டுச் சென்றுள்ளார். சடங்கு நாவலை விமர்சனம் செய்யவோ அதைக்கொண்டாடவோ நமது பேராசிரியர்கள் மறுத்தார்கள். அதன்காரணமாக சொல்லப்படுவது முற்போக்கு அணியில் கூஜா தூக்க எஸ்.பொ. மறுத்ததேயாகும்.

வட இலங்கையில் நேர்மையான விமர்சகராக கருதப்படும் அ. யேசுராசா, சடங்கை போற்றிவிட்டு , அதில் ஒரு கதாபாத்திரமாக எஸ்.பொ. வருவதாக எழுதியிருக்கிறார். இதைக்கண்டுபிடிப்பதற்கு எங்களுக்கு யேசுராசா போன்ற விமர்சகர் தேவையா?

அதேபோல் சிறு விமர்சகர் கூட்டம் சடங்கு நாவலை தங்கள் பாடப்புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துப்படித்ததாக எழுதி பெருமைப்படும்போது, சடங்கு என்ற சிறந்த இலக்கியத்தை சரோஜாதேவி என்ற பெயரில் எழுதிய காம எழுத்தாக்குகிறார்களா??

இலக்கியவாதியின் படைப்பை பற்றி எழுதுபவர்கள் அதை பிரித்து பகிரும்போது வாசகர்களுக்குப்புரியும். அதைவிட்டுவிட்டு எழுத்தாளளைப்பற்றி எழுதுவதைத் தவிர்க்கவேண்டும். எழுத்தாளன் இறக்கும்போதோ அல்லது அறுபது வயதை அவன் அடையும்போதோ படைப்பை விட்டுவிட்டு எழுத்தாளனைப்பற்றி எழுதுங்கள்.மற்றையபொழுதில் ஒவ்வொரு எழுத்தாளனும் தனது படைப்புகளால் வாழ மட்டுமே விரும்புவான். இதை நமது தமிழ் இலக்கிய உலகம் புரிந்து கொள்ளவேண்டும்.

மனதின் குரலை (stream of consciousness) முதலாவதாக சிறப்பாக எழுதிய ஜேன் ஓஸ்ரினோ அல்லது வெர்ஜினியா வுல்ஃப் , அவைக்கு மேற்கோள் குறி( Quotation mark) போடுவதில்லை.ஆனால் சடங்கில் எஸ்பொ அங்கு பாவித்திருப்பது நெருடியது.

அறுபதுகளில் வெளிவந்த இந்த நாவல் இப்பொழுது சமூகவிமர்சனமான இலக்கியமாக பார்க்க முடியுமா? அதன்பதில் எனக்குத்தெரியாது. கம்மியுனிஸ்ட்டுகள் அற்றகாலத்தில் ஏன் விலங்குப் பண்ணை ?

எழுதியவர் : (7-Dec-17, 9:17 pm)
பார்வை : 99

மேலே