உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி2
" ஹேய் ஜெகன்! நாளைக்கு எங்க வீட்டுக்கு வரமுடியுமா? "
தயக்கத்துடன் ஜெனி கேட்டாள்.
" நீ சொன்ன வராமல் இருப்பேனா ஜெனி? கண்டிப்பா. எத்தனை மணிக்கு வரணும்? "
ஜெகன் அசடுவழிந்தான்.
" காலையில ஒன்பது மணிக்கு. வரும் போது பார்மலா ட்ரெஸ் பண்ணிட்டு வா. "
" ம்ம். சரி. "
" அப்போ நாளைக்கு பார்க்கலாம். "
ஜெகனும் சிரித்துக் கொண்டே விடை கொடுக்க, ஜெனி வீட்டிற்குச் சென்றாள்.
தன் அப்பா, அம்மாவிடம் ஜெகன் மறுநாள்க்குக் காலை ஒன்பது மணிக்கு வருவதாகச் சொன்னாள்..
மறுநாள் காலை, ஜெகன் பார்மலா உடை அணிந்து, தனது படிப்புச் சான்றிதழ்களுடன் கிளம்பினான்.
அதைப்பார்த்த ஜெகனின் அப்பா, அம்மா தங்கள் பிள்ளைக்கு பொறுப்பு வந்து வேலைக்கு செல்வதாக நினைத்து மகிழ்ந்தார்கள்.
ஜெனியின் வீட்டில் விருந்துணவு தயாராக இருந்தது.
ஜெனியே முன் வந்து சமையல் செய்து அனைத்து வகை உணவுகளையும் தயாராக வைத்தாள் தன் அம்மா சொன்ன கைப் பக்குவப்படி...
காலீங் பெல் ஒலித்தது.
ஜெகன் தான் வந்திருந்தான்.
ஓடிச் சென்று கதவைத் திறந்தாள் ஜெனி.
தன் மகள் இவ்வளவு சுறுசுறுப்பாக இருந்து ஜெனியின் பெற்றோர் பார்த்ததில்லை.
ஒரே சந்தோஷம்!
அதோட வியப்பும் சேர சிலையானார்கள்!
" வாவ்! ஜெகன் நீயா இது? ரொம்ப அழகா இருக்கப்பா. "
" கலாய்க்காத ஜெனி. "
" ஆமா. கையில இது என்ன பைல்? "
" மாப்பிள்ளை வேலைக்கு இன்டர்வீயூக்கு வந்திருக்கேன். அதான் என்னுடைய படிப்புச்சான்றிதழ்கள். "
" ஓகோ! ", சிறு நமட்டுச்சிரிப்புடன், " சரி உள்ளே வா. அப்பா, அம்மாவை அறிமுகம் செய்கிறேன். "
என்று அழைத்துச் சென்றாள் ஜெனி.
" அப்பா! அம்மா! இவர் தான் ஜெகன். நான் சொன்னேன்ல. "
" ஹாய் ஜெகன்! நான் கனகராஜ். ஜெனிபருடைய அப்பா. மனோதத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறேன். "
" உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி சார். "
கை குலுக்கிக் கொண்டனர்.
" அப்புறம். இது என்னோட மனைவி. ஜெனிபரோட அம்மா.
ஆசிரியராக வேலைப்பார்க்கிறார். "
" காலை வணக்கம் மேடம். "
" வணக்கம் பா. உட்காரு. "
என்றார்
ஜெனியின் அம்மா.
" நீங்க என்ன பண்றீங்கனு சொல்லவே இல்லையே. "
ஜெனிபரின் அப்பா பேச்சை வளர்த்தார்.
" என் பெயர் ஜெகன். அப்பா பெயர் கந்தசாமி. மின் பணியாளாராக இருக்கிறார். அம்மா பெயர் காயத்ரி. அவங்க வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
நான் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்புத் துறையில் பி.இ பட்டம் பெற்றவன்.
இப்போதைக்கு வேலைக்கு எதுவும் போகாமல் புறா வளர்க்கிறேன். இது எனது படிப்புச்சான்றிதழ்கள்.
", என்றவாறு ஜெகன் தான் கொண்டு வந்த பைலை நீட்டினான் கனகராஜிடம்..
பைலை வாங்கிப் பார்த்த கனகராஜ், " வெரிக்குட்! பர்ஸ்ட் கிளாஷ்ல பி.இ பாஸ் ஆயிருக்க. அப்புறம் ஏன் வேலைக்கு போகல? ", என்று சிபிஐ ஆபிஜர் போல் கேள்வி கேட்டார்.
" வேலைக்குப் போக வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லாமல் இல்லைங்க சார். தமிழ்நாட்டுல என் மாதிரி படிச்ச பட்டதாரிகளுக்கு எங்க சார் வேலை கிடைக்கிறது?. நானும் வேலை தேடி அலைந்தேன். ஏறாத கம்பேனி படிக்கட்டுகள் இல்லை. எங்க போனாலும் முன் அனுபவம் மற்றும் முன் பணம் கேட்கிறாங்க. வாய்ப்புக் கொடுத்தால் தானே என் திறமைக் காட்டி அனுபவம் வளர்க்க முடியும். "
" நீங்க சொல்லுறது சரிதான் தம்பி. வெளி மாநிலங்களாவது போய் வேலை பார்க்கலாம். ஏன் சொல்லுறேனா? இப்போ நீங்க உங்க அப்பாவோட உழைப்பில் வாழுறீங்க. உங்க சொந்தக் காலில் நின்னா தானே உங்களுக்கு மரியாதை. உங்கள நம்பி என் மகளைக் கொடுக்க முடியும். "
மேரி அம்மாவின் வார்த்தைகள் ஜெகனின் மனதில் இருந்த சொல்ல முடியாத இரகசியத்தைத் தட்டியெழுப்பியது.
சிறிது நேரம் மௌனமாக இருந்தான்.
மேரி அம்மாவும், கனகராஜும், ஜெகனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஜெனி எழுந்து உணவை எடுத்துவரச் சென்றாள்.
தன் மௌனம் உடைத்த ஜெகன், " என் உடலில் உயிர் உள்ளவரை உங்க மகளை கண் இமைபோல் காப்பேன். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லையென்பது தெரிகிறது.
உங்கள் நம்பிக்கையைப் பெறும் வரை, நான் ஜெனிபரை சந்திக்க மாட்டேன். பேச மாட்டேன். இது என் தாயின் மீது சத்தியம். ", என்றான் இதய உணர்ச்சி மேலிட..
ஜெகன் கூறிய வார்த்தைகளின் அர்த்தமும், அவன் கண்களில் வெளிப்பட்ட உண்மையும் கனகராஜுக்குப் புரிந்தது..
ஆனாலும், அவனை சோதிக்க நினைத்தார்.
அதனால், மௌனமாக இருந்தார்.
" சரி, சாப்பிடலாம். வாங்க. ", என்று ஜெனிபர் அழைத்தாள்.
டைனிங் டேப்பிளில் அமர்ந்தான் ஜெகன்.
அமைதியாக சாப்பிட்டார்கள்.
ஜெனிபர் மேரி அம்மாவின் காதில் ஏதோ சொன்னாள்.
உடனே மேரி அம்மா, " தம்பி, சாப்பாடு எப்படி இருக்குனு ஜெனி கேட்கிறா. அவ தான் உங்களுக்காக சமையல் செய்தாள். ", என்றார் புன்னகையோடு.
" ம்ம். நல்லா இருக்கு. "
" ஆமா. ரொம்ப நாளைக்கு அப்புறமா நானும் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறேன். "
என்றார் கனகராஜ்.
" என்னது? அப்போ இத்தனை நாளா நான் சமைத்து போட்ட சாப்பாடெல்லாம் நல்ல சாப்பாடு இல்லையா? "
கோபப்பட்டார்கள் மேரி அம்மா.
" அப்படி இல்ல மேரி. "
தப்பிக்க வழிதேடினார் கனகராஜ்..
சாப்பிட்டு முடித்தார்கள்.
ஜெனி ஜெகனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவன் அவளைப் பார்க்கவில்லை அவனது புறக்கண்களால்.
" சரிங்க சார். நான் கிளம்புறேன். புறாக்களுக்கு தீனி வைக்கனும். "
என்று ஜெகன் புறப்பட்டான்.
வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள் ஜெனியின் பெற்றோர்.
ஜெகன் சென்ற பிறகு, மேரி அம்மா, " ஏம்மா ஜெனி! ஜெகன் ரொம்ப ரோசக்காரனா இருப்பான் போல. எங்க நம்பிக்கைப் பெறாமல் உன்னை சந்திக்கவோ, பேசவோ மாட்டேன் என்கிறானே. ", என்றார்.
அதற்கு கனகவேல், " அவன் வாய்ச்சொல் வீரனா? செயல் வீரனா? என்று பார்க்கலாம் மேரி. ஜெனி உனக்கு புரிகிறதா? ", என்று சிரித்தார்.
" ம்ம். நல்லா புரிகிறது அப்பா. ", என்று ஜெனியும் சிரித்தாள்.
" அப்பா, மகளுக்குள்ள என்ன திட்டமோ? எனக்கு புரியல. ", என்றார் மேரி.
" உனக்கு தெரியாமல் திட்டமா மேரி? இது அந்த பையனுக்கு நான் வைத்திருக்கும் சோதனை. எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் தான் ஜெயிப்பான். "
" எப்படி சொல்லுறீங்க? "
" அவன் காதலுக்காக எதையும் செய்வான். "