கண்ணீர் மழை

மழை...
துளித்துளியாய்
தித்திக்கும் தேன்துளியாய்
நான் ரசித்த அதே மழை...
மெல்லிய சத்தத்துடன்
பூமிதொட்டு
மண்வாசனை பரப்பிய மழை....
சடசடவென்று பெய்துவிட்டு
அதிகாலையில்
வாசலில் நீர்தெளிக்கும்
அம்மாவை நினைவுபடுத்திய மழை...

முதல்துளியை
முகத்தில் முத்தமிடசெய்து
பரவசப்பட்ட பன்னீர்மழை...
இன்றோ,
கழுத்தளவு தண்ணீரில்
கலங்கடிக்கும் கண்ணீர் மழை...
கூரைவழி சொட்டியநீரில்
குடம்நிறைத்து
குதூகலித்த மழை...
இன்று,
கூரைபிரித்து
குடிசை நிரப்பியதும் அதே மழை...

என் பால்யத்தின் கரைகளில்
காகிதகப்பல்கள் மிதந்த மழைநீரில்...
இன்று,
கார்கள் மிதக்கிறது,
நான்விட்ட
காகிதகப்பலேறி
கரைஒதுங்கிய எறும்பாய்...
இன்று,
கட்டுமரமேறி
கரைஒதுங்கும் மக்கள்...

பகுத்தறிவு கரம்கொண்டு
பாரை கூராக்கி
தனதாக்கி கொண்டு,
ஆறுகளை தடுத்து
வீட்டணை போட்டதில்
நீர்குடித்து திணறும் வீடுகள்....
ஏரிகளை வாரிசுருட்டி
ஏப்பமிட்ட கட்டிடங்கள்...
இயற்கையின்
சேமிப்பு கிடங்குகளில்
செரிக்கயியலா செங்கற்களை
போட்டு நிறைத்த
நம் கோமாளித்தனத்தை
கரைத்து குடித்து
கரையேறி செல்கிறது இப்பெருமழை...

இந்த பரந்த மானுடம்,
மனிதனுக்கானதில்லை,
மனிதனுக்குமானது...
சிற்றெறும்புக்கும்,
சிறுகுருவிக்குமானது...
புல்,பூண்டுகளுக்கும்,
பூத்துகுலுங்கும் மலர்களுக்குமானது...

இப்பெருமழை,
வெறும் மழையல்ல,
நம் முன்னோரிடமிருந்தும்,
முன்னோர் வணங்கிய
இயற்கையிடமிருந்தும்,
கற்றுக்கொள்வதற்கான படிப்பினை...
இனியேனும்
கற்றுக்கொள்வோம்,
இயற்கையை நேசிக்கவும்...
அதன் அபூர்வங்களை வாசிக்கவும்...

இயற்கை
சிலநேரங்களில்
இப்படித்தான் நினைவுபடுத்தி செல்கிறது,
மறைந்துபோன ஏரிகளையும்....
மறத்துபோன மனிதத்தையும்....
பனவை பாலா....

சென்ற ஆண்டு சென்னை மழை வெள்ளத்திற்காக எழுதியது...

எழுதியவர் : பனவை பாலா (8-Dec-17, 12:07 pm)
பார்வை : 167

மேலே