நேர்மையற்ற நீட் தேர்வு----------------------
நீட்டென்னும் நேர்மை சிறிதுமற்ற தேர்வால்
சமூகநீதிக்கு சவக்குழி வெட்டினார்
நாட்டு நலம்பேணும் நம்தமிழ்த் தலைவர்கள்
எடுத்துரைத்தும் கேளாக் காதினராய்
நடுவண் அரசும் உச்சிக் குடுமிகளும்
நயவஞ்சக நிர்மலா பொன்னார்
கேடுசெய்தனர் அனிதா எனும் அருந்தவச்
செல்வியைக் கொன்றும் போட்டனர்!
நம்பவைத்துக் கழுத்தறுத்து நட்டாற்றில் விட்டது
நடுவத்தை யாளும் மோடியரசு
நம்தமிழ் நாட்டு மாணவ மணிகள்
எதிர்காலம் இருண்டு போனது
தமிழகமே திரண்டு போராடியும் தரங்கெட்ட
தறுதலைகள் கையாலாகாத் தனத்தால்
அமிழ்ந்தது சோகத்தில் அய்யகோ அரியலூர்
மாணவி அனிதாவின் மரணம்!
ஒருமனதாய் இருசட்ட மியற்றிப் பயனில்லை
உன்மத்தர்கள் பதுங்கிக் கொண்டார்
ஒருமைப்பாட்டை உரத்துப் பேசிடும்
மனுவெறி பிடித்த காவியாட்சி
ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டமே நீட்
கொல்லைப்புற வழியாய்ப் புகுத்தினர்
உச்சிக் குடுமிகள் ஒத்தூத இடஒதுக்
கீட்டை ஒழித்துக் கட்டியது!
நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கிய ஒதுக்கீடு
அய்ம்பதுகளில் கேள்விக்குள் ளாக
நீதிமன்றத் தடையுடைத்தார் பெரியார் அரசமைப்புச்
சட்டத்தை முதன்முறை திருத்தினர்
அறுபத் தொன்பது விழுக்காடு கண்ணை
உறுத்த அடம்பிடித்தார் கூடாதென
அறுபத் தொன்பது அட்டவணை ஒன்பதில்
தமிழர் தலைவர் சட்டத்தால்!
நீட்டால் கேட்டைச் செய்யும் டில்லி
நீசரை தூக்கிச் சுமக்கும்
எட்டப்பன் எடப்பாடி குடிலன் பன்னீர்
டில்லி அடிமைகளே விலகிடு
அடிமைச் சேவகம் புரியும் உமக்கு
ஆட்சி அதிகாரம் எதற்கு?
காட்டாட்சி நடத்தும், டில்லிக்குக் காவடி
எடுக்கும் பேடிகளே விலகிடு!
எந்தமிழ் நாட்டரசு இருபத்தி ரெண்டு
மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த
அந்நியர்க்குத் தாரை வார்க்கவா? அடங்காச்
சினத்தால் எச்சரிக்கை செய்கின்றோம்
அனிதாநீ ஆயிரங் காலத்துப் பயிருன்னை
பலிகொடுத்த பின்உயிரென்ன வெல்லமா?
கண்ணைவிற்றுச் சித்திரமா கயமை ஆட்சிக்கு
முடிவுகட்ட ஆர்த்தெழுந்தது தமிழகமே!
-
கவிஞர் இனியன்,
திருச்சி - 13