ஃ பர்ஸ்ட் ரேங்க்
ஃபர்ஸ்ட் ரேங்க்
விடியற்காலை ஐந்து மணி இருக்கும். அப்பாவின் ஃபோன் தான் அழைத்தது. எடுத்தார்.
யாரு?
எப்போ?
சரி இந்தா வரேன்.
ஃபோன் சத்தத்தினால் விழித்த என்னையும் அம்மாவையும் பார்த்து, “பார்வதி அம்மா போயிடுச்சாம்”. என்று பெருமூச்சு விட்டார்.
ஐயோ!! எப்போ? பதறினாள் அம்மா.
காலைல மூனு மணிக்காம். வேட்டிய எடு கிளம்பனும்.
வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது தெருவில் பெரிதாக ஒன்றும் வெளிச்சம் இல்லை. மார்கழி மாத குளிர்காற்று காதிற்குள் உய்ய் என்றது. அம்மா அழுதுகொண்டே நடந்து வந்தாள். ஞானம் அய்யர் வீட்டில் மக்கள் வரத்தொடங்கியிருந்தனர். பார்வதி அம்மாளின் எல்லாமுமாக இருந்தவர் ஞானம் அய்யர் அதனால் அவரை கணவர் என்ற வார்த்தையில் சுருக்கிவிட முடியாது.
“குட்டி அய்யர்”, என்று அவரை ஊரில் சொல்வதற்க்கு காரணம் அவருடைய உயரம் தான். எங்கள் வீட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தால் அவரின் கால் தரையில் படாது. எனக்கு நினைவு தெரிந்து நாலு, ஐந்து முறை தான் அவரை சட்டையுடன் பார்த்திருப்பேன். மார்பு எலும்புகள் வரி வரியாய் தெரியும் அவர் துண்டை தோளில் போட்டிருக்கும் போது. எப்போதும் சவரம் செய்து, வகிடு எடுத்து சீவி திருத்தமாக இருப்பார். சதுரமா? உருண்டையா? என்ற முடிவுக்கு எளிதில் வரமுடியாத முகம். நெற்றியில் தவழும் வெள்ளி முடிகள் காற்றில் ஆடும்போது வெள்ளைக்கோடிட்டிருக்கும் விபூதி தெரியும். எப்போதும் சிரிப்பு எல்லாவற்றிற்கும் சிரிப்பு. கவலை ரேகைகளை அவரின் முகத்தில் பார்க்கவே முடியாது. ஊரில் யார் வீட்டு விசேஷத்திலும் அய்யரை பார்க்கலாம். ஓமகுண்டத்தின் புகை மூட்டத்திற்குள் ”சிவ சிவ” என்று எழுதப்பட்டிருக்கும் காவி வேட்டியும் “நமோ நாராயணா” போட்ட துண்டுமாக நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
அம்மா தான் நெஞ்சில் அடித்தவாறு அய்யரின் வீட்டிற்குள் ஓடினாள். வீட்டின் மையபகுதியில் பார்வதி அம்மா சலனமின்றி படுத்திருந்தாள். மாலைகளுக்கு மத்தியில் மஞ்சள் பூசிய முகம் ஓரளவுக்குத்தான் தெரிந்தது. உள்ளே போய் ஒருமுறை பார்த்துவிட்டு அப்பா வெளியே வந்தார். வீட்டின் வெளி திண்ணையில் உட்கார்ந்திருந்த ஞானம் அய்யர் எங்களைப்பார்த்து மெதுவாக தலையை அசைத்தார். அப்பா அவரின் அருகில் போய் உட்கார்ந்தார். மூலையில் உள்ள கிணற்றையும், துளசி மாடத்தையும் வெறித்துக்கொண்டிருந்தார் அய்யர். தாங்க முடியாத, சாத்தியம் இல்லாத மௌனம் நிலவியது. அய்யர் அப்பாவை பார்த்து , “எல்லாம் முடிஞ்சது மாப்ள”, என்றார்.
பார்வதி அம்மாளை குளிப்பாட்ட வெளியே தூக்கி வந்தார்கள். “பாத்து பாத்து”. என்று ஞானம் அய்யர் கத்தினார். வீட்டின் முற்றத்தில் பார்வதி அம்மாளை கிடத்தினார்கள். அதற்குள் வீட்டின் வெளியே போடபட்டிருந்த அவசர கொட்டகையில் வாடகை சேர்கள் வந்திறங்கியிருந்தன.
“மார்கழி மாசம் செத்திருக்கு பார்வதி கண்டிப்பா சொர்கத்துக்கு தான் போவா”, என்றது எதோ கிழவியின் குரல்.
“எட்டு வருஷமா படுத்த படுக்கையா கிடந்த பார்வதிக்கு மூத்திரமும் பீயும் அள்ளிக்கொட்டுன புண்ணியத்துக்கு ஞானமும் தான் போவாரு”, என்றது இன்னொரு குரல். தண்டோராவுக்கு சொல்லி ஆளனுப்பி , பாடைக்கு முன்பணம் கொடுத்துவிட்டு உள்ளே வந்த அப்பா சேர்களை பரப்பிக்கொண்டிருந்த என்னிடம் , “எதனை சேர் வந்திருக்கு”,என்றார்.
நூறு.
ஞானம் எங்க?
பார்வதி அம்மாளின் பின்னால் உட்கார்ந்திருந்தவரை சுட்டிக்காட்டினேன்.
தூக்குறது எத்தன மணிக்கு வச்சுக்கலாம்? சோதா கிளம்பிட்டானா?(சோதா வை பற்றி பின்)
இப்போதான் ஃபோன் போட்டேன் , வந்திட்ருக்கானாம். என்றார் அய்யர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மணிகண்டன் என்கிற சோதா அய்யரின் ஒரே மகன். என்னைவிட ஆறு வயது பெரியவன். நல்ல நிறம் . அபாரமாய் படிப்பான். ஸ்கூலில் எல்லா டீச்சர்களுக்கும் செல்லப்பிள்ளை. நல்லா கணக்கு போடுவான். பெரிய பெரிய ஆங்கில வார்த்தையெல்லாம் சாதரணமாக பேசுவான். உதாரணமாக நான் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தால்,”வாடா ரெடிகுலஸ்” என்பான். அதன் அர்த்தம் புரியும் வரை அதுதான் என் பட்டப்பெயராக இருந்தது தெருவில். ரெடிகுலஸ் இங்க வா!!! , ரெடிகுலஸ் கடைக்குப்போ!!! , “அய்யா எடிகுலசு” அந்த வெத்தல பொட்டிய எடுன்னு பக்கத்து வீட்டு தங்கம் பாட்டி சொல்லும்போது புல்லரித்துபோய் நின்றிருக்கிறேன் அர்த்தம் புரியாமல்.
அவன் அதிகபட்சமாக உடலை வருத்தி விளையாடும் விளையாட்டு கோலிகுண்டாகத்தான் இருக்கும்,எப்போதாவது கிரிக்கெட் விளையாட வருவான். நேரிடையாக பேட்டிங் டீமில் சேர்ந்து கொள்வான். பேட்டிங் பிடித்து விட்டு ,” அவுட் சைடு ஆஃப் தி ஆப் ஸ்டம்ப் போடு , சிலிப் வச்சுக்கோ”, என்று ஐடியா கொடுத்து விட்டு போய்விடுவான். திருவிழாக்கடைகளில் விற்கும் பாட்டுப் புத்தகங்களிலிருந்து , தியோசோபிகல் சொசைட்டியின் தோற்றமும் வளர்ச்சியும் என்று என் மூளைக்கு எட்டாத புத்தகங்களை அவன் படிக்கும் போது அவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருப்பேன். கோபமாய் வரும் ஒருவேளை பொறாமையாய் கூட இருந்திருக்கலாம்.
அந்தநேரம் சோதா பண்ணிரண்டாவதில் நான்கு இலக்கத்தில் மதிப்பெண் எடுத்து அரசு கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம். நான் ஏழாவது . படித்துக்கொண்டிருந்தேன்.ஞானம் அய்யர் தன் மகனின் வாசிப்பைபற்றி பெருமையாய் பேசுவார். ”எப்படி அண்ணா நீ மட்டும் நல்லா படிக்கிற” என்று கேட்டால் வாயில் ஆட்காட்டி விரல் வைத்து உஷ்ஷ் ரகசியம் என்பான். அந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள அவன் பின்னாலேயே அலைந்தேன். கடைசியில் ஒத்துக்கொண்டான் ரகசியத்தை சொல்வதாக. ஆனால் ஒரு நிபந்தனை என்றான்.
அது அவ்வளவு கஷ்டமானது என்று ஆரம்பத்தி நினைக்கவில்லை. ஆனால் சோதா தேன் தடவிய நாக்குக்கு சொந்தக்காரன். எதையும் ஒத்துக்கொள்ள வைக்கும் சூட்சுமம் அவனுக்கு நன்றாகவே தெரியும். அவனுக்கு காரியம் ஆகவேண்டுமானால்,எதுவும் செய்வான். ஆனால் முதலில் ஆசையைத்தான் தூண்டுவான்.
“நீ ஃபர்ஸ்ட் ரேன்க் வாங்கிட்டனா உங்க அப்பாகிட்ட என்ன வாங்கித்தர சொல்லுவ ?” என்று கேட்டான்.
சைக்கிள். இல்ல, கிரிக்கெட் பேட். ,இல்ல வீடியோ கேம் செட் தான் கேட்பேன். என்றேன்.
“மூணையுமே கேளு டா , கண்டிப்பா உங்கப்பா வங்கி தருவாரு. ஏன்னா நீதான் இதுவர ஃபர்ஸ்ட் ரேன்க் எடுத்ததே இல்லியே” என்று சிரித்தான்.
நெஞ்சுக்குள் “சுருக்” என்றாலும் அதுதான் உண்மை.
“எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய் உன் ஃபர்ஸ்ட் ரேன்க் நான் பொறுப்பு “ என்றான். .
அப்படி என்ன பிரமாதமான வேலை?
நீ ஓகே னு சொல்லு, அப்புறம் சொல்றேன்.
வாழ்க்கையின் முதல் ஃபர்ஸ்ட் ரேங்க் மயக்கத்தில் இருந்ததால், “நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக சொன்னாலும் போறேன்-ணா” என்றேன்.
“அவ்வளவு பெரிய வேலையெல்லாம் இல்ல,ஒரு பொருள நான் சொல்ற இடத்திலிருந்து எடுத்து வரணும்” என்று சொல்ல எனக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது. எங்க வீட்டுக்கு நைட் 8 மணிக்கு வா விவரமாய் சொல்றேன். ”இது யாருக்கும் தெரியக்கூடாது” என்று மெதுவாய், அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே சொன்னான்.
அவன் போன பிறகு நான் பாத்ரூமிற்கு ஓடினேன். ”உனக்கு எதுக்குடா ஃபர்ஸ்ட் ரேங்க்” முட்டாள், சோதா பேச்சை கேக்காதே என்று பாத்ரூம் கண்ணாடி சொல்லியது. மாணவர்களின் கரவொலிக்கு மத்தியில் நடந்து சென்று ரேங்க் கார்டை ஆசிரியரிடம் வாங்கி,”பெஸ்ட் ஆப் லக் டாப்பர்” என்ற சொற்கள் என் செவிப்பறைகளில் விழுந்தாகவேண்டும் என்ற பிடிவாதம் ஒருபுறம் என்னை கடிகாரத்தை கண்கொட்டாமல் பார்க்கவைத்தது. நொடிமுள்ளின் ஒவ்வொரு சுழற்சிக்கும் சைக்கிளும் ,வீடியோ கேம் செட்டும் தோன்றி மறைத்தன. சில சமயம் கிரிகெட் பேட் அதுவும் பாச்சா வைத்திருக்கிற அதே பிரிட்டானியா பேட் சிவப்பு லேபிள் கடிகாரத்தின் கண்ணாடியில் பளபளத்தது. கடைசியில் ஆசைதான் ஜெயித்தது.
ஆர்வமா ?பயமா? என்று பெயரிட முடியாத உணர்வுடன் என் வீட்டைவிட்டு கிளம்பினேன். ”சோதா கிட்ட டவுட் கேட்டுட்டு வரேன்”, என்று கொள்ளையில் இருந்த அம்மாவிடம் கத்தி சொல்லிவிட்டு,அவளுக்கு கேட்டிருக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டேன்.
முற்றத்தில் அய்யர் உட்கார்ந்துகொண்டு அரைகுயர் நோட்டை பார்த்துக்கொண்டிருந்தார். எதிரில் உட்கார்ந்திருந்தவர் அய்யரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ ஜாதக விவகாரம் என தோனியது. அவர்கள் வீட்டு டைகர் என்னைப்பார்த்து சம்பிரதாயத்திற்கு ஒரு லொள்ளிட்டுவிட்டு படுத்துக்கொண்டது. வால் மட்டும் எதற்கோ துடித்துக்கொண்டிருந்தது. பாவம் பொங்கலும் புளியோதாரை மட்டுமே சாப்பிடும் அனைத்துண்ணி.
வாடா மாப்ள (அது என்ன கணக்கோ தெரியவில்லை அய்யருக்கு நானும் மாப்பிள்ளை தான் என் அப்பாவும் மாப்பிள்ளை தான். கிராமங்களில் ஜாதிகள் உறவுகளை தீர்மானிப்பதில்லை) என்ன இருட்டுக்குள்ள வர்ற?அப்பா எதாவது சொல்லி விட்டாரா?
“இல்ல, அண்ணாவ பார்க்க வந்தேன்” ,மாமா.
“உள்ளதான் இருக்கான் போ” என்று திறந்திருந்த கதவை சுட்டிக்காட்டினார். கதவின் காலடியில் அகல்விளக்கு எண்ணைக்காக கண் சிமிட்டிக்கொண்டிருந்தது.
“வாடா ரெடிகுலஸ் பரவலையே கரெக்டா வந்துட்டியே” என்று அறையின் மூலையில் நாற்காலியின் மீது அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த சோதா அழைத்தான். நான் “ஆமாம்” என்பது போல சமாளித்து சிரித்தேன். வந்து என் பக்கத்தில் உட்கார் என்று தான் இடது கையால் நாற்காலியை இரண்டுதட்டு தட்டினான் என்னைப்பர்த்துக்கொண்டே. என் படபடப்பு அதிகமானது. டேபிளின் மீது திறந்திருந்த மை வாசத்தையும் பக்கத்து அறையிலிருந்து வரும் பார்வதி அம்மாளின் சோக இருமலையும் ஒருசேர கவனித்துக்கொண்டிருந்த என்னை ,”என்னடா ஒரு மாதிரியா இருக்க” என்ற சோதாவின் குரல் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நிகழ காலத்திற்கு கொண்டுவந்தது.
ஒன்னுமில்லையே!!
சரி , நா சொன்னத பத்தி யோசிச்சு பார்த்தியா?
பயமா இருக்குண்ணா, அதான் வேண்டாம்னு. . . .
என்னது வேண்டாமா? என்று கோபமாய் கேட்டான்.
அப்போ நீ டியுஷன் போறேன்னு சொல்லிட்டு கிரிக்கெட் விளையாட போரதையெல்லாம் உங்கப்பாகிட்ட சொல்லிடவேண்டியது தான். அவனது அடுத்த அஸ்திரத்தை எடுத்துவிட்டான். என் பயத்தை வைத்தே என்னை பகடையாக மாற்ற முயன்றான்.
வேண்டாம்ணா, திருடறது பாவம்!!
திருடுறதா யாருடா சொன்னா? உபயோகமில்லாமல் சும்மா இருக்க பொருள நாம
பயன்படுத்துரதுல என்ன தப்புங்குற?
இல்லைதான். . . . .
“பயப்படாம நான் சொல்றத கவனமா கேளு”, என்று நான் உள்ளே வந்த வாசலையும் ,பார்வதி அம்மாளின் இருமல் சத்தத்தையும் கவனித்துவிட்டு மெதுவாய் பேச ஆரம்பித்தான். ”உனக்கு நம்ம ஊர் லைப்ரரி தெரியும்ல?”
ம் . தெரியுமே!!. .
“சமத்து பையன்” என்று கன்னத்தை கிள்ளிவிட்டு ,”அங்க போய் ஒரு புத்தகத்த எடுத்துட்டு வரணும் அவ்ளோதான்”என்றான். என் மூளை ஞானம் வீட்டில் பாத்ரூம் எங்கே இருக்கும் என்று நினைவுகளில் படிந்திருந்த வீட்டின் “ப்ளூபிரிண்டை” அலசியது.
நிறைய பேர் இருப்பாங்களே?!!!! கஷ்டமாச்சே!!
ஒருத்தர் ரெண்டுபேர் தண்டா இருப்பாங்க ஈஸிதான்.
அப்புறம் என்ன நீயே போய் எடுத்துகிட்டு வரலாம்ல?
உனக்கு ஃபர்ஸ்ட் ரேங்க் வேணுமா? வேண்டாமா?
--------------------------------------
உனக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்டா, பயப்படாம பண்ணு.
பயமில்லை. . . .
“அதானே பயம்னா பைசாக்கு எவ்வளவு னு கேக்குற ஆள் ஆச்சே நீ” என்று சிரித்தான். அந்த சிரிப்பில் என்னை ஒப்புக்கொள்ள வைத்துவிட்ட பெருமிதம் தெரிந்தது. அது உண்மைதான் . நான் தயாராகிவிட்டேன்.
‘புது சைக்கிள் வந்தவுடன் எனக்கு ஒரு ரவுண்ட் கொடுக்கணும் பாலா. இனிமே கிரிக்கெட் விளையாட சைக்கிள் லையே போலாம். உன் அப்பாகிட்ட கேட்டு நல்ல பேட் வங்கிக்கோ . நா உனக்கு கவர் டிரைவ் ஆட கத்துதறேன். பாச்சாகிட்ட கூட ஒரு பேட் இருக்குல்ல” என்று என்னை ஓரக்கண்ணால் பார்த்தான். அவனுக்கு என் ஆசைகள் முழுவதுமாய் தெரிந்திருந்தது.
குசுகுசு குரலில் ,”வர்ற சனிக்கிழமை தான் சரியான நாள், லைப்ரரி இன்சார்ஜ் சாப்ட கிளம்புறப்போ , படிச்சிட்டு இருக்கவங்களையெல்லாம் கிளம்ப சொல்லுவாங்க அதுதான் டைம்,நீ தூக்கிடு”.
ம் என்று நேர்கோட்டில் தலையை அசைத்தேன்.
புத்தகத்த எப்டி வெளில எட்டுத்திட்டு வருவ?
முதுகுக்கு பின்னாடி வச்சு மறைச்சு கொண்டுவர்றேன்.
“சுத்தம்!!கவனமா பாரு” என்று டேபிளின் மீதிருந்த புத்தகத்தை கையிலெடுத்து எழுந்து நின்றான். சட்டையை தூக்கி வயிற்றில் சுருட்டியிருந்த வேட்டிக்குள் பாதி புத்தகத்தை மறைத்து ,சட்டையை கீழே இறக்கிவிட்டான். உள்ளே புத்தகம் இருப்பதற்கான அடையாளம் சுத்தமாக தெரியவில்லை. இது அவனது அனுபவ அறிவாகத்தான் இருக்க வேண்டும். என தோன்றியது.
நல்லா பாத்துகிட்டியா ? ஒன்னும் குழப்பம் இல்லையே?
இல்ல. நீங்க ஏற்கனவே இப்படி பன்னிருக்கிங்களா?
வேட்டிக்குள் இருந்த புத்தகத்தை வெளியே எடுத்து மூலையில் நின்றுகொண்டிருந்த அலமாரியின் கதவைத்திறந்து உள்ளே வைத்தான்.
”எவ்வளவு புத்தகம்!!!!!
கதவை சாத்திவிட்டு,”என்ன கேட்ட?” என்றான்.
இல்ல இதுக்கு முன்னாடி இப்படி. . . .
ச்சீய் ச்சீய் இதான் ஃபர்ஸ்ட் என்றான். அது போய் என்று என் உள்மனது சொல்லியது. மணி ஒன்பதாகியிருந்தது. “நான் வீட்டுக்கு கிளம்புறேன் ணா, அந்த புத்தகம் பேரு சொல்லவே இல்லையே”??
இப்போவாது கேட்டியே ,”அஞ்ஞாடி”. நீலக்கலர் அட்டை போட்டிருக்கும். இன்னிக்கு வியாழன் இன்னும் ஒரு நாள் இருக்கு சனிக்கிழமைக்கு என்று தலையை கோதிவிட்டான். சோதாவைபார்க்க கொள்ளைக்கூட்ட தலைவனாய் தெரிந்தான். கதவினருகே இருந்த விளக்கு காற்றுக்கு இறையாகியிருந்தது.
“கிளம்பிட்டியா மாப்ள” என்றார் அய்யர்.
ஆமா மாமா.
ரோட்ல ஓரமா போகணும் சரியா?
சரி மாமா.
அய்யரின்மீது, எதிரே உட்கார்ந்திருந்த ஆசாமியின் பார்வை மாறவில்லை. டைகர் “உர்ர்ர்” என்பதோடு நிறுத்திக்கொண்டது. அய்யர் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். வீட்டை கடக்கும்போது “நேரங்காலம் நன்னா இல்லையேடா அம்பி” என்பது மட்டும் தெளிவாய் கேட்டது. அன்றிரவு என்னால் கண்ணை மூடக்கூட முடியவில்லை. அதையும் மீறி மூடினால் அஞ்ஞாடி, நீலக்கலர் அட்டை,கை தட்டல்கள்,டாப்பர், சைக்கிள்,,, இப்படி ஒவ்வொரு கன்னியாக சேர்ந்து அது ஒரு சங்கிலித்தொடராக மாறியிருந்தது.
மறுநாள் பள்ளியிலும் இதே நிழலட்டங்கள். கணக்கு வகுப்பில் பார்முலா பழனியப்பன் ,”உருளையின் கண அளவு” கேட்டது, நான் முகட்டு வளையை பார்த்துக்கொண்டு நின்றது,அவர் குச்சியால் என் டிரவுசரில் உள்ள புழுதியை பறக்கவிட்டது எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. மற்ற நாளாக இருந்திருந்தால் அன்றிரவு குப்புறப்படுத்துத்தான் தூங்கவேண்டும். என் கண்ணெதிரே ராட்டினம் சுற்றுவது போல் இருந்தது. ராட்டினத்தில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் சைக்கிளாக, அஞ்ஞாடியாக,கிரிக்கெட் பேட்டாக சுற்றியது. ஆனால் ராட்டினத்தின் மையப்புள்ளி ஃபர்ஸ்ட் ரேங்க்காக இருந்தது. ஆனால் சோதாவுக்கோ அது அஞ்ஞாடியாகத்தான் இருந்திருக்கும்.
மற்றொரு சிவராத்திரியை சந்தித்த பின் அந்த வரலாற்றுச்சிறப்புமிக்க சனிக்கிழமை வந்தது. குளிக்கும் போது அரைஞான் கயிற்றை ஒரு முறை இழுத்துப்பார்த்துக்கொண்டேன். வலுவாகத்தான் இருந்தது. நூலகத்திற்குள் நான் நுழையும்போது அவ்வளவு கூட்டமில்லை. வலது பக்கமும் இடது பக்கமும் போடப்பட்டிருந்த ,இரும்புச்சட்டங்களால் ஆன அலமாரிகளில் புத்தகங்கள் நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் புத்தகங்களின் இடைவெளி வழியே பின்னால் இருக்கும் வெள்ளைச்சுவர் தெரிந்தது. இந்த இடைவெளியெல்லாம் சோதாவின் கைங்கரியம் என்று தோன்றியது. அஞ்ஞாடியை தேடுவதற்கு போதுமான சூரியவெளிச்சம் உள்ளேயிருந்தது. நூலகத்தின் பொறுப்பாளர் நடுவே உட்கார்ந்திருந்தாள். எனக்கு அவளை நன்றாக தெரியும். ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். அவளின் பின்னால் இருந்த சுவற்றில் புத்தகத்தை பற்றிய கவிதைகள் எழுதப்பட்டிருந்தன. சோதா விதிமுறைகளை தெளிவாக சொல்லியிருந்தான். நூலகத்திற்குள் நுழைந்தவுடன் வலது பக்க அலமாரியில் ஏதாவது புத்தகத்தை எடுத்துக்கொண்டு அலமாரியை எதிர்நோக்கி உட்கார்ந்துகொள்ள வேண்டும். இதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட முதல் விதிமுறை.
அடுத்து கையிலிருக்கும் புத்தகத்தை படிப்பதுபோல் எதிரே நிற்கும் அலமாரியில் “அந்த” புத்தகத்தை தேடவேண்டும். காணவில்லையென்றால் பொறுமையாக எழுந்து அடுத்த அலமாரியில் தேட வேண்டும். யாரிடமும் அந்த புத்தகத்தை பற்றிபேசக்கூடாது கண்டுபிடித்த பின்னர் யாராவது கவனிக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். பின் சரியான சந்தர்பத்திற்காக காத்திருக்கவேண்டும். இது விதிமுறை இரண்டு.
முதல் இரண்டையும் சரியாக செய்துவிட்டேன். வலது பக்க அலமாரியில் இருந்த புத்தகங்களில் என் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தேன் கண்களால். அதோ அந்த மூலையில். . . . அந்த நீலக்கலர்அட்டை. . . . அதுதானா. . . . . அதுவேதான். நாஞ்சில்நாடனுக்கும் ,வையாபுரிப்பிள்ளைக்கும்நடுவே!!!!!!. மண்டைக்குள்ராட்டினம்,கைதட்டல்கள்,சைக்கிள். பொறுப்பாளரை திரும்பி பார்த்தேன். மும்மரமாக பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள். காத்திருந்தே. . . . . . . . . ன்.
இறுதியாக அந்த நிமிடம் வந்தது. வெளியில் யாரோ மாலதி என்று அழைக்க அவள் எழுந்து போனாள். (ஆம் அவள் பெயர் மாலதி தான். அஞ்ஞாடி அவசரத்தில் மறந்துவிட்டேன் ,மன்னிக்கவும்) இப்போது அறையினுள்ளே நான் மட்டும் , கண்ணெதிரே புத்தகம். மெதுவாக எழுந்து அலமாரியின் அருகே சென்றேன். கை படபடத்தது. ஊர் தலைவரின் உபய மின்விசிறியால் கூட என் வியர்வையை கட்டுப்படுத்த முடியவில்லை. கைகளால் அந்த புத்தகத்தை எடுத்துப்பார்த்தேன். கணமாக இருந்தது. அதே நீலநிற அட்டை , பெயர் சரிதானா என்று தெளிவு செய்த பின்னர், மண்டைக்குள் சோதா ,”தூக்கிடு “ என்று உச்சஸ்தானியில் கத்தினான். நான் வேகமாக புத்தகத்தை அடிவயிற்றினுள் செருகிக்கொண்டிருக்கும்போதுதான் அலமாரியின் அப்பால் இருந்த மாலதியின் ஜோடிக்கண்கள் கனல் பறக்க என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை கண்டேன். கையும் களவுமாக இல்லை வயிறும் களவுமாக மாட்டிக்கொண்டேன். தொண்டை அடைத்தது,அழுகை வரும்போலிருந்தது. தொண்டைக்குள் பம்பரம் சுற்றியது.
எனக்கு நேராய் வந்து நின்று ,”எத்தனை நாளை இந்த திருட்டு வேல”? என்றாள்.
“இதுதான் பர்ஸ்ட் டைம்”, என்று மூளைக்குள் உதயமான வார்த்தைகள் வாயை வந்தடையவில்லை.
“நட உங்க வீட்டுக்கு போலாம்”,என்றாள்.
அக்கா ப்ளீஸ்க்கா வேண்டாம்கா. . . . . .
“இத இப்படியே விட்டா தப்பாகிடும்,வா உங்க அப்பாகிட்ட சொல்றேன்”, என்றதும் அண்டசராசரமும் அஸ்த்தமித்துவிட்டது.
பரவாயில்லை நான் பயந்தது போல் அடி விழவில்லை என்ற எண்ணம் அலையாக தோன்றும்போது ,கன்னத்தில்”பளார்” என்று அறை விழுந்தது. கன்னத்தில் தீப்பிடித்தது போல் இருந்தது. நிலை தடுமாறி சுதாரிப்பதற்குள் அடுத்த கன்னத்திற்கு தீ பரவியது. ”இவன இப்படியே விட்டா இன்னும் திருடுவான்”, என்ற சோதாவின் குரல் மயங்குவதற்கு முன் தெளிவாய் கேட்டது.
தெளிந்து உட்காரும்போது சோதாவும்,மாலதியும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். மாலதி தான் குடிக்க தண்ணீர் தந்தாள். ”இப்படியா அடிக்கிறது இங்க பாரு செவந்து போச்சு கன்னம்”, என்று பச்சாதாபப்பட்டாள்.
“இவன் பண்ண காரியத்துக்கு என்று பற்களை நறநறவென்று கடித்தான்”, அந்த உத்தமன்.
என் கன்னத்தை தடவிக்கொண்டே ,“இனிமே இப்படி பண்ணக்கூடாது சரியா”, என்று மாலதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே,”வாடா போலாம் உங்க வீட்டுக்கு என்று என் கையை பிடித்து தரதரவென அவன் வீட்டிற்கு இழுத்துச்சென்றான்.
கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிட்டியே ராஸ்கல்!!!!!
அடுத்த தடவை ஒழுங்கா பண்ணிடுறேன் ணா
தொர, நீங்க பண்ணதே போதும். போய்டு!!!!
----------------------------
போடான்னு சொல்றேன்ல!!
அந்த ஃபர்ஸ்ட் ரேங்க் டிரிக். . . . . . . . . .
பல்லப்பேத்துடுவேன் போய்டு. . .
அதன் பிறகு சோதாவிடம் அவ்வளவாக பேசவேயில்லை. என் ராட்டினம் சுக்குநூறாக உடைந்து போனது. முதல் ரேங்கை சந்திக்காமலேயே நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டேன். அவனுக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருப்பதாக அய்யர் சொன்னார். கடைசியாக சோதாவை அவன் கல்யாணத்தில் பார்த்தது. மீசையை எல்லாம் வழித்துக்கொண்டு வடநாட்டுக்காரன் மாதிரி இருந்தான். அதன் பின் இதோ காரைவிட்டு இறங்கி, குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறானே இப்போதுதான் பார்க்கிறேன்.
நாலடி தூரத்தில் அவன் மனைவி நடந்து வந்தாள். எல்லோரையும் பார்த்து மெதுவாக தலையை ஆட்டினான். கண்ணாடிப்பெட்டிக்குள் கிடத்தியிருந்த பார்வதி அம்மாளை தரிசித்துவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்றுகொண்டான். குழந்தை காரணம் புரியாமல் அழுதுகொண்டிருந்தது. அய்யர் கண்ணாடி குடுவையின் பக்கத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். மரணம் ஜனித்த வீடுகளில் நேரமும் மரணித்துவிடுகிறது. அம்மாளின் கடைசி ஊர்வலத்தில் , வஸ்துக்களின் துணையோடு சிலர் ஆடிக்கொண்டிருந்தனர். சோதா கயிற்றில் கட்டப்பட்டிருந்த மண்பானையை தூக்கிக்கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்தான். சலனம் இல்லா விழிகளோடு அய்யர் நடந்து வந்தார். எல்லாம் முடிந்து வீட்டிற்குள் நுழையும் போது மணி பத்தாகிவிட்டது.
ஐந்தாம் நாளே காரியம் வைத்திருந்தார் அய்யர். வெகுசிலரே வந்திருந்தனர். நானும் அப்பாவும் சென்றபோது புகை சமாச்சாரங்கள் முடிவடைந்திருந்தன. வெளியே போடப்பட்டிருந்த வாடகை சேர்களில் சோதாவும் அவன் மனைவியும் இருந்தார்கள். எங்களைப்பர்த்தவுடன் அய்யர் , அப்பாவிடம் வந்து ஏதோ சொன்னார்.
சோதாவிற்கு எதிரே இருந்த சேரில் உட்கார்ந்துகொண்டே ,” ஏன்டா சோதா உங்க அப்பாவையும் கூட்டிட்டு போயிடு பெங்களூருக்கு. ஏன் சொல்றேன்னா , இங்க ஒத்தையா கெடக்குரதுக்கு உன்கூட இருந்தா கொஞ்சம் சந்தோஷமாய் இருப்பாரு பாரு. ” என்றார் அப்பா.
அய்யரை முறைத்துவிட்டு பின் அப்பாவிடம் திரும்பி,”அது சரியா வராது, வாடகை வீடு எங்க மூணு பேருக்கே சிரமமா இருக்கு . அதோட இவர் அங்க வந்து என்ன பண்ண போறார். பேசாம இங்கயே இருக்கட்டும். அங்க அவருக்கும் கஷ்டம் எங்களுக்கும் கஷ்டம்”, என்றான் கடுப்பாக. அதான் மாசாமாசாம் பணம் அனுப்புறேன்னு சொல்றேன்ல? அப்புறம் என்னவாம் இவருக்கு?
எவ்வளவு?
2000
போதுமா?
ஏன்?? ஒரு ஆளுக்கு தாராளம்!!!
அந்தச்சத்தம் , ஐயோ !! அப்பா பல்லைக்கடிக்கிறார். சதாவின் பின்னால் கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அப்பாவைப்பார்த்து இடவலமாக தலையை ஆட்டினார்.
பார்வதி அம்மாளின் விசேஷத்திற்காக ஷேவ் செய்யப்பட்ட மண் தரைகளில் சோதாவின் மகன் விளையாடிக்கொண்டிருந்ததை அவன் கால் இடறி கீழே விழுந்து வீலிடும் வரை யாரும் கவனிக்கவில்லை. சோதாவும் அவன் மனைவியும் குழந்தையை தூக்க ஓடினார்கள். ஞானம் அய்யர் மெதுவாக அப்பாவிடம் வந்து,”வேணாம் விட்ருங்கோ மாப்ள “ என்றார் மெதுவாக. அவரின் குரல் உடைந்திருந்தது. ஞானம் அய்யருக்கும் அழுகை வருமா?????? துண்டை கண்களில் ஒற்றிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
குழந்தையின் உதடெல்லாம் மண். தலையில் ஒட்டியிருந்த தூசிக்களை தட்டிக்கொண்டே , “சே ஹலோ டு தெம்”, என்றான் சோதா குழந்தையைப் பார்த்து.
“ஹலோ” என்று அழகாய் வாயை சுழித்தது குழந்தை.
அதன்கன்னத்தை கிள்ளிக்கொண்டே,” உம் பேரு என்ன?” என்றார் அப்பா.
அபினவ்.
ஸ்கூல்ல சேர்த்திட்டியாடா சோதா?
என்ன இப்படி கேட்டுட்டிங்க , செகண்ட் ஸ்டாண்டர்ட் போறான்.
நல்லா படிக்கணும் அபினவ் சரியா? என்றார் அப்பா.
குழந்தையை சோதாவிடமிருந்து வாங்கிக்கொண்டே அவன் மனைவி,”படிப்பில அப்படியே அவங்க அப்பா மாதிரி, எப்போவும் ஃபர்ஸ்ட் ரேன்க் தான் “ என்றாள்.
சோதா பெருமையாய் சிரித்தான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------