உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி3
" என்னடா காலையிலேயே கிளம்பிப் போன! வேலை கிடச்சுடுமா? "
ஜெகனின் அம்மா காயத்ரி கேட்டார் வீட்டில் நுழைந்த ஜெகனிடம்.
" கிடைத்துவிடும்னு நினைக்கிறேன். "
என்று மழுப்பினான் ஜெகன்.
" ஏன்டா இன்டர்வீயூக்கு போன உனக்குத் தெரியாதா? "
" பார்க்கலாம் அம்மா. உறுதியா சொல்ல முடியாது. "
புறாக்களுக்கு தீனி போட்டுக் கொண்டு இருந்தான் ஜெகன்.
" இப்படிதான் ஐ.பி.எஸ் எக்ஸாம் எழுதிட்டு வந்து சொன்ன. ஆனால், அதுலயும் தேர்வாகல. "
அம்மாவின் புலம்பல்கள் ஆரம்பமாயின.
சிறிது நேரம் கழித்து தனது படுக்கை விரிப்பில் படுத்துக் கண்களை மூடினான் ஜெகன்.
" ஏன்டா காலையிலேயே சாப்பிடாமல் போன. கடையிலாவது சாப்பிட்டியோ இல்லையோ? இந்தா சாப்பிட்டு படு. "
மறுமொழி பேசாமல் சாப்பிட்டான் ஜெகன்.
சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தான். பிறகு படுத்துத் தூங்கிப் போனான்.
மறுநாள் காலை தான் எழுந்தான். புறாக்களுக்கு தீனி இட்டுவிட்டு தன் வயிறு நிரம்ப இரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான்.
ஜெனியைச் சந்திக்கக் கூடாது.
அதனால், ஜெகன் இதுவரை செல்லாத இடங்களுக்கு செல்ல வேண்டும்..
மிதிவண்டியை முடுக்கிக் கொண்டு விரைந்தான் ஊருக்கு வெளியே..
அங்கே அழகான மலையடிவாரம்.
அதன் அருகில் ஒரு குடிசை..
அக்குடிசையில் ஒரு பெரியவர் கைத்தறியால் துணி நெய்து கொண்டிருந்தார்.
அவர் பாதுகாப்பில் அங்கு மிதிவண்டியை விட்டுவிட்டு மலையில் ஏறத் தொடங்கினான்.
அது ஒரு ஒத்தையடிப்பாதை தான்.
வளைந்து நெளிந்து மேலே அழைத்துச் சென்றது.
பறவைகளின் சங்கீதம் ஜெகனுக்கு வரவேற்பு கொடுக்க, குரங்குக் கூட்டங்கள் வந்து பழங்களைப் படைக்க, நடப்பது கனவா? நனவா? வியப்பில் ஆழ்ந்தான் ஜெகன்..
பசித்தவன் பழங்களைத் தின்று பசியாறி, களைப்பாற மரக் கிளையில் இலைப்பாறி, நடந்தவன் காட்டில் திசைமாற ஒரு கல்லின் மீது அமர்ந்தான்..
அமர்ந்தவனுக்கு உடலில் உரோமங்கள் ஏனோ சிலிர்த்தன.
வேகமாய் எழுந்தவன் விரைவாக நடக்கலானான்.
திடீரென ஓடினான்.
மரத்திற்கு மரம் தாவினான்..
பலவானாக மாறினான்..
மிருகங்களெல்லாம் அவனை அரசனென்று புகழ, எழுந்தவன் உரையாற்றுகிறான், " மனித உலகிற்கு சென்றிருந்தேன். அங்கு எல்லாமே பணம் தான்.
பணம் இல்லாதவனை பிணம் என்றே அழைக்கிறார்கள்.
ஐந்து நிமிட வேலைக்கு ஐம்பது ரூபாய் கூலி.
அன்பற்ற மனிதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்..
இப்படியே சென்றால் நம்மை இடங்களை அபகரித்து இல்லாமல் செய்து விடுவார்கள்.
ஆகவே மனிதக் குலம் மீது படையெடுப்போம்.
புறப்படுங்கள், புறப்படுங்கள்.. "
என்று வீராவேஷமாகக் கூவினான்..
" டேய் மகனே! என்னாச்சுடா! ஏன்டா இப்படி கத்துற? "
என்றவாறே காயத்ரி அம்மா ஜெகனை எழுப்பினார்கள்..
எழுந்த ஜெகன், " ஒன்னுமில்லை அம்மா. " என்றான்.
இருந்தாலும் காயத்ரி அம்மா திருநீரை அள்ளி நெற்றியில் பூசிவிட்டு சாமியை வேண்டிக் கொண்டுச் சென்றார்..
மணியைப் பார்த்தான். அதிகாலை மூன்று மணி..
மீண்டும் படுத்தான். தூக்கமே வரவில்லை..
தனது டைரியை எடுத்து எழுதிக் கொண்டு இருந்தான்..
காலை விடிந்ததும் மிதிவண்டியை முடுக்கிக் கொண்டு விரைந்தான்..
கனவில் பார்த்த அதே மலையடிவாரம்.
குடிசை இருந்தது.
அங்கு யாரும் இல்லை.
அதில் மிதிவண்டியை மறைத்துவிட்டு, மலை மேலே ஏறிச் சென்றான்.
பாதைகள் வளைத்து வளைந்து சென்றது.
சிறிது தூரத்தில் ஏதோ சப்தம் கேட்பது போல் தோன்றியது.
அருகே நெருங்கினான்.
அங்கே ஒரு கட்டிடம் இருந்தது.
அதை நுழைவாயிலிலும் அதைச் சுற்றிலும் பலர் காவல் காத்தார்கள் துப்பாக்கி கையில் ஏந்தி..
மறைந்திருந்து அங்கு நடப்பதை வேவு பார்த்தான்.
அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டவை இவனுக்குப் புரியவில்லை..
அங்கு ஒரு பெண்ணை இழுத்து வந்தார்கள்.
அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தான்.
காணவில்லை என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முகம்.
இப்போது ஜெகனுக்குப் புரிந்தது அது ஒரு கடத்தல் கும்பல்..
போலீஸிற்கு தகவல் கொடுக்க எழுந்தான்.
ஜெகனை அந்தக் கூட்டம் பார்த்துவிட்டது..
" டேய்! ஒருத்தன் பார்த்துட்டு தப்பித்து போறான்டா. "
" அவனைச் சுட்டுத் தள்ளுங்க டா. "
மறுநொடியில் துப்பாக்கிகளின் சத்தம் மலையே அதிர, குண்டுகளால் துளைக்கப்பட நிலையில் ஜெகன் மலைச் சரிவில் உருண்டு ஆற்றில் போய் விழுந்தான்..
ஜெனிபர் ஜெகனைத் தேடினாள்.
" எப்போதும் தன்னைப் பார்க்க வருபவனை இன்று காணவில்லையே. கோபமா இருக்கிறானோ? "
மனதில் ஆயிரம் கேள்விகள் உருவம் பெற அவனைத் தேடி அலைகிறாள்.
தேடியவள் கண்களுக்கு ஜெகன் தென்படாததால் பேதையவன் கண் கலங்க தன் வீட்டிற்கு வந்தாள்.
" என்னாச்சு அம்மா? கண்கள் கலங்கி இருக்கிறதே. "
என்று கேட்டார் மேரி அம்மா.
" ஜெகனை பார்க்க முடியவில்லை. எங்கு தேடியும் அவன் தென்படவில்லை.
நான் தேடும் முன் ஓடிவருபவன், உங்கள் வார்த்தைகளாலே புண்பட்டு எங்கே சென்றானோ? "
தன் பெற்றோரின் மீது கோபப்பட்டாள் ஜெனி.
கனகராஜும், மேரி அம்மாவும் கவலைப்பட ஜெனி தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
ஜோடி புறாகளிடம் வந்து அழுதாள்..
புறாகளில் ஒன்று ஒரு சீட்டை நீட்டியது.
அச்சீட்டைத் திறந்து பார்த்தாள்.
" கூண்டைத் திறந்து விடு. " , என்று எழுதப்பட்டிருந்தது.
கூண்டைத் திறந்தாள்.
ஆண்புறா மட்டும் புறப்பட்டுச் சென்றது.
பெண்புறா கூட்டிலேயே இருந்தது..
ஜெனிபருக்குச் சிறிது நம்பிக்கை பிறந்தது.
பிரார்த்தை செய்தாள்.
பிறகு சாப்பிட வந்தாள்.
தன் அப்பா, அம்மாவிடம், " என்னை மன்னிச்சுடுங்க அப்பா. மன்னிச்சுடுங்க அம்மா.
நான் தான் அவசரப் பட்டேன். ", என்று கெஞ்சினாள்.
" பரவாயில்லை. நீ அவனை எவ்வளவு நேசிக்கிறாய் என்று தெரிகிறது. ", என்றார் கனகராஜ்..
" சரி வாங்க. சாப்பிடலாம். ", என்றார் மேரி அம்மா.
சாப்பிட்டு முடிந்ததும் தூங்கச் சென்றார்கள்..
" காலையில போனவன் இன்னும் வரல. ", என்று கவலையாக இருந்தார் காயத்ரி அம்மா.
" கவலைப்படாத. அவன் திரும்ப வந்திருவான். ", என்று கந்தசாமி சொன்னார்.
கவலையோடு சாப்பிட்டார்கள் ஜெகனுக்கு ஏதும் ஆகவில்லையென்ற நம்பிக்கையில்.
சாப்பிட்டு முடித்ததும் கந்தசாமி புறாகளுக்கு தீனி போட்டார்...
தூங்கச் சென்றனர்...