துப்பாக்கியால் துளைக்க முடியாது

பத்திரிக்கையைத் தோட்டாக்கள்
துளைக்கலாம்
அதில் உள்ள பத்திகளைத்
துளைக்கலாகுமோ ?

பத்திகள் எல்லாம்
சமூகத்தைப் பாதுகாக்கும் பத்திரங்கள்

சமூக உணர்வின் பசிக்கு
உணவளிக்கும் பாத்திரங்கள்

ஜாதி மதம் களைய
பயன்படும் சூத்திரங்கள்

இவன் அச்சுக் கோர்க்கும்போதெல்லாம்
மதவாதிக்கு அச்சம் வருகின்றது

இவன் அச்சுதான்
சமூக அவலங்கள் வெளிக்கொணர
அச்சாரம் இடுகின்றது

பெண்மையைக் காப்பது
இவன் பென் மை

வண்மையைக் கண்டிப்பது
இவன் மேன்மை

அனைவரும் நீல மை கொண்டு எழுத
எழுத்தாளன் சமூகத்தின் நிலைமையை எழுதினான்

மின்துறை எரியவைக்காத
விளக்குகள் எல்லாம்
இவன் பென் துறையைக் கண்டதும்
எரிந்தது

ஊனமடைந்த சாலைகளை
இவன் ஊடகத்தால் சரிசெய்தான்

பத்திரிகையாளன்
சமூகத்தை செதுக்கும் சிற்பி
இரும்பாணி கொண்டல்ல
எழுத்தாணி கொண்டு

கௌரியை துப்பாக்கிகள்
துளைத்தாலும் அவரின்
கௌரவத்தை அவை துளைக்கவில்லை



கவிஞர் புதுவைக் குமார்
31 யமுனை வீதி
வசந்தம் நகர்
அரும்பார்த்தபுரம் போஸ்ட்
புதுவை - 605110
9942994112

எழுதியவர் : குமார் (10-Dec-17, 5:37 pm)
பார்வை : 205

மேலே