உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி5

" இந்த பையன் எங்க இருக்கிறானோ? "
காயத்ரி அம்மாவின் கவலை தொடர்கதையாக, " போலீஸில் புகார் கொடுத்துட்டு வந்திருக்கேன். சீக்கிரமே வந்திருவான். "
என்று கந்தசாமி கூறிவிட்டு வேலைக்குக் கிளம்பிப் போனார்.
" குட் மார்னிங் டா. ", என்று ஜெனிபர் ஜெகனிடம் போட்டோவிற்குத் தெரிவிக்க அங்கே ஜெகன் எழுந்து ஆலங்குச்சியால் பல் விலக்கிக் கொண்டிருந்தான்.
பல்விலக்கி வாய் கொப்பளித்து முகம் கழுவ, அந்த வயதான குரங்கு வந்து அழைத்துச் சென்றது.
சூரிய உதயம் கிழக்கில் தோன்ற இரண்டு பன ஓலை முட்டிகளில் பச்சை நிற கரைசல் இருக்க, ஒரு குரங்கு அதை எடுத்துப் பருக மற்றொன்றை ஜெகனிடம் கொடுக்க அவனும் பருகினான்.
பருகிய குரங்கு ஒருவிதமான நடனம் கலந்த பயிற்சி செய்ய, அதைக் கண்ட ஜெகன் தானும் அதைப் போலே நடனம் ஆடத் தொடங்கினான்.
இப்போது அவன் உடலில் எந்தவித வலியும் இல்லை.
சிறிது தொலைவில் இருந்த சிறு நீர் வீழ்ச்சியில் குளித்து கட்டை அவிழ்த்து பார்த்தான். உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள் காணாமல் போயிருந்தன.
குளித்து முடித்து தன் ஆடைகளை அணிந்து கொண்டு வந்தான்.
அங்கு அவன் பசியாற பழங்கள் இருந்தன.
பழங்களைப் புசித்து பசியாறியவன், அங்கு நின்றிருந்த குரங்குகளிடம், " உங்கள் பாஷை புரியவில்லை. ஆனால் உங்க அன்பு புரிகிறது. அதோட உங்கள் மருத்துவ முறைகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.
உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
நன்றிகள். ", என்று இரண்டு கைகளும் ஒன்று சேர வணங்கினான்.
இவனது வார்த்தைகள் அவைகளுக்கு புரியவில்லை. ஆனால், இவனது செய்கை நன்றியை உணர்த்தியது.
அவைகளும் பதிலுக்கு வணங்கின.
காட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்று புறப்பட்டான்.
குரங்குகள் அவனை வழியனுப்ப வந்தன.
குரங்குகள் மரத்திற்கு மரம் தாவி பாய்வதைக் கண்டு அவனும் கிளைக்குக் கிளை தாண்டி குரங்குகளின் இனமென்று நிரூபிக்கும் விதமாக செய்தான்.
இப்படியே செல்கையில் அந்த இடம் கண்ணில்பட்டது. அங்கு இருக்கும் பெண்களைக் காப்பாற்ற வேண்டுமென்று எண்ணினான்.
ஆனால், துப்பாக்கிகளைச் சமாளிப்பது எப்படி?
குரங்குகளைப் பார்த்தான்.
ஆலம் விழுதுகளை சேகரித்தான்.
மறைந்திருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒவ்வொருவராக பிடித்து இருத்தான்.
அவன் இழுத்தவர்களையெல்லாம் ஆலம் விழுதுகளால் கட்டிப்போட, அதைக் கண்ட குரங்குகளும் அவ்வாறே செய்ய, துப்பாக்கியை எதிர்கொள்ள துப்பாக்கி தேவையில்லையென்பதை நிரூபிக்கும் சாட்சியாய் காட்சி அமைய ஜெகன் வென்றான்.
அங்கிருந்த ஒரு கைபேசியின் வழி தனது நண்பன் தினேஷிற்குத் தகவல் கொடுக்க, காவல்துறை அங்கே விரைந்து வந்தது.
சைரன் அலாரம் சத்தம் கேட்க, குரங்குகள் அங்கிருந்த விலகிச் சென்றன.
கட்டப்பட்டு கிடந்தவர்களை காவல்துறை கைது செய்தனர்.
ஜெகனைக் கண்ட தினேஷ் கட்டித்தழுவி பாராட்டினான்.
அங்கிருந்த பெண்கள் அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தினேஷிடம், ஐ.ஜி. சுப்பிரமணியன் , " இந்த கடத்தல் கூட்டம் பற்றிய தகவலைக் கொடுத்தவர் யார்? ", என்றார்.
" இவர் தான் சார். என் நண்பர். தகவல் மட்டுமல்ல, அத்தனை பேர்களையும் உயிருடன் பிடித்துக் கொடுத்துள்ளார். ", என்றார் இன்ஸ்பெக்டர் தினேஷ்.
" குட் சாப். உங்க பெயர் என்ன? "
" ஜெகன். "
இடையே குறுக்கிட்ட தினேஷ், " என்னோட தான் ஐ.பி.எஸ் எழுதினார். ", என்றார்.
" ஓ அப்படியா!? அப்போ இன்றிலிருந்து இவர் நம்மில் ஒருவர். இவருக்கு உடனே ஏ.சியாக பணி நியமிக்கிறேன். ", என்றார் ஐ.ஜி.சுப்பரமணியன்.
" ரொம்ப நன்றிங்க சார். ", என்றார் ஜெகன்.
" நன்றியெல்லாம் வேண்டாம் தம்பி. உங்க திறமைக்கும், எண்ணத்திற்கும் இது அரசாங்கத்தோட பரிசு. எங்கள் காவல்துறைக்கு உங்களைப் போல் ஒருவர் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் கடமையைத் திறம்பட செய்வீர்கள் என்று நம்புகிறேன். ", என்றார் ஐ.ஜி.
" எஸ் சார். "
ஜெகன் ஐ.பி.எஸ் கம்பீரமாகச் சல்யூட் செய்தார்.
அதற்குள் ஊடகங்கள் வர, எங்கும் அதற்கு பேட்டி கொடுத்த ஐ.ஜி, " இது ஒரு ரகசியமான ஆபரேஷன். ஜெகன் ஐ.பி.எஸ் அவர்களின் தலைமையில் கடத்தல் கும்பல் பிடிபட்டது. கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். மற்ற தகவல்களை விசாரணைக்குப் பின் தான் சொல்ல முடியும். ", என்று கூறிவிட்டு தன் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
தொலைக்காட்சியில் ஜெகனைக் கண்ட ஜெகனின் பெற்றோர் பெருமையோடு மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜெனிபருக்கு ஒரே ஆச்சரியம்.
தன் பெற்றோரிடம் அதைச் சொல்லிச் சந்தோஷப்பட்டாள்.
ஜெகன் தனது மிதிவண்டியைத் தேடி எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான்.
வீட்டினுள் நுழைந்த ஜெகனை நிறுத்தி, திருஷ்டிச் சுற்றிப் போட்டார் காயத்ரி அம்மா.
கந்தசாமி பேச நாவெழாமல் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்.
அன்றிரவு ஜெகன் புறாக்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்தான்.
அந்த ஆண்புறா அங்கே வந்து அவன் தோளில் அமர்ந்தது.
அதற்கும் தீனி கொடுத்து, ஒரு காகிதத்தை எடுத்து, " ஹேய் ஜெனி! என்ன மிஸ் பண்ணியா?. நாளைக்கு உங்க வீட்டுக்கு அப்பா அம்மாவோட வாரேன். ", என்று எழுதி புறாவிடம் கொடுத்து அனுப்பினான்.
புறா நேராக பறந்து சென்று ஜெனியின் தோளில் அமர்ந்தது.
" ஹெய்! வந்திட்டியா!? ", என்ற ஜெனியிடம் அந்த காகிதத்தைக் கொடுத்துவிட்டு, தன் இணைப் புறாவிடம் சென்று கொஞ்சியது.
கடிதம் கண்ட ஜெனி, தன் பெற்றோரிடம் தெரிவித்தாள்.
பொழுது புலர்ந்தது.
ஜெகனின் வீட்டு வாசலில் கார்கள் வந்து நின்றன. அவற்றில் வந்தோர் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றியதற்காக ஜெகனுக்கு நன்றி சொல்லி, கண்ணீர் சிந்தினர்.
சிலர் பிளாங் ஷெக் கொடுத்தார்கள்.
அதெல்லாம் வேண்டாமென்று ஜெகன் அவர்கள் வழியனுப்பி வைத்தான்.
பின் மொட்டை மாடிக்குச் சென்று, அந்த குரங்குகளிடம் கற்ற நடனத்தைப் பயிற்சி செய்தான்.
பிறகு குளித்துவிட்டு ஆடையணிந்து சாப்பிட்டுவிட்டு தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு ஜெனிபரின் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு எல்லாம் தயாராக இருந்தது.
காலிங் பெல் ஒலித்தது.
ஜெனிபர் கதவைத் திறந்தாள்.
" ஹாய் ஆன்டி! வாங்க "
ஜெனி காயத்ரி அம்மாவை அழைக்க, " ஹாய் ஜெனி! ", என்றவாறு உள்ளே சென்றார்...