© ம. ரமேஷ் சமூகக் கவிதை 1

• இன ஊனம்
‘உம் இனத்தை
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன்’ என்றான்
கடவுள்.
‘மன்னிக்க முடியாது போ’ என்று
விரட்டினேன் நான்.
‘நீதிமன்றம் போவேன்’ என்றான்.
வழக்குத் தொடரப்பட்டது…
வாய்தா வாங்கிக் கொண்டிருந்தேன்…
ஒரு நாள் நீதிபதி முன்பு -
‘வரம் கொடுக்க முடியாது’ என்றேன்.
மறு முறை -
நீதிதேவதையின்
கண் திறக்கப்பட்டிருந்ததால்…
‘தயவுசெய்து மன்னித்துவிடு’ என்றாள்.
அவளிடமும் மறுத்துரைத்தேன்.
உயர்நீதி மன்றம்
5 ஆண்டுகள்…
உச்சநீதி மன்றம்
6 ஆண்டுகள்…
சிறப்பு தனிநபர் கமிட்டி விசாரணை
20 ஆண்டுகள் எனத்தொடர்ந்தது…
ஒருநாள் கடவுள்
தள்ளாடிக்கொண்டு என்னிடம்
‘உன் மொழி பேசிய இனத்தைக்
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன்’ என்றுகூறி
மேலும் சொன்னான்…
‘எல்லா ஊரும் உங்கள் ஊரில்லை’
கண்ணதாசன் சொன்னானே
‘யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே’ என்று.
இதுதான் இனிமேல்
எல்லோருக்கும் பொருந்தும் என்றான்.
‘சரி உன் இனத்தை அழைத்து வா
சொர்க்கத்துக்குப் போவோம்’ என்றான்.
நான் என் இனத்தோடு மறுத்து
அவருக்கு சொர்க்கத்தை வழிகாட்டினேன்.