தமிழ் மகளே வருக தமிழ்ப் பொங்கல் தருக

வரலாறு நீபடைத்து வையகத்தில் என்றென்றும்
வளமையெல்லாம் குன்றாமல் வாழ்ந்து நிற்க
வரமெல்லாம் பெற்றவளே வாழ்கின்றோம் உன்னாலே !
வந்தோரும் வாழ்ந்திடுவர் வளமை பெற்று !
உரமோடு உலகெங்கும் உலவுகின்ற நற்றமிழே
உயிரோடும் கலந்துவிட்டாய் உண்மை அன்றோ !
தரமான செம்மொழியாய் தழைத்திங்கு வாழ்கின்றாய்
தமிழ்மொழியே !எங்களையும் காத்து நிற்பாய் !


செம்மொழியே உன்மொழியில் சீர்கெட்ட அயற்சொற்கள்
சேருகின்ற நிலைதன்னை துரத்தி விட்டு
வம்பற்ற கலைச்சொற்கள் வார்த்தெடுத்து வைத்திடவே
வையத்து வாழ்கின்ற தமிழர் எல்லாம்
நம்பிக்கை உணர்வோடு நலிவின்றி உழைக்கின்ற
நல்லவொரு வாய்ப்பினையும் நல்க வேண்டும்
கம்பர்போல் காவியங்கள் பாடுகின்ற நல்லபல
கவிஞரெல்லாம் குறைவின்றி பெருக வேண்டும்.

சொத்தாகும் இலக்கியங்கள் பிறமொழியில் தவழவைத்தால்
செந்தமிழின் செழுமையினை உலகே அறியும்
வித்தாகி வேர்விட்டு மரமாகி நிழல்கொடுக்க
வாழ்க்கைநெறி வள்ளுவமும் வரமாய் நிற்கும்
புத்தாண்டின் முதல்நாளாய் தைபிறப்பைக் கொண்டாடும்
பழக்கமதைத் தமிழரெல்லாம் போற்றி வாழ்ந்து
முத்திரையை பதித்திடவே தமிழ்மகளே வந்திடுவாய்
நாவினிக்க தமிழ்ப்பொங்கல் நன்றாய் தருவாய் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (19-Dec-17, 9:35 pm)
பார்வை : 695

மேலே