செந்தமிழை உயர்த்தி வைப்பீர்

இலக்கணமும் இலக்கியமும் ஏற்றி வைத்து
இனிக்கின்ற தமிழ்வளர உழைத்து வந்தான்
உலகத்தில் மூத்தகுடி இவனே ஆனான்
உயர்ந்தவொரு பண்பாட்டில் வாழ்ந்து நின்றான்
அலைபாயும் கடல்கடந்து வென்றி கண்டு
அதிகாரம் இல்லாத அன்பைக் கொண்டான்
தொலைதூர வாணிபத்தால் பொருளைப் பெற்று
துயர்துடைத்து வாழுகின்ற நெஞ்சம் பெற்றான்.

முச்சங்கம் தனைஅமைத்து மொழியைக் காத்து
முத்தான காப்பியங்கள் படைத்து வைத்தான்
மெச்சுகின்ற வாழ்க்கைநெறி சொல்லு கின்ற
முப்பாலாம் திருக்குறளை இயற்றித் தந்தான்
அச்சமற்ற நெஞ்சமுடன் ஆட்சி கொண்டு
அநியாயம் செய்வோரை அடக்கி வைத்தான்
துச்சமுடன் பேசிவிட்ட கனகன் தன்னை
துணிவோடு படைநடத்தி பணியச் செய்தான்.

பொன்னாகும் நெல்விளையும் தஞ்சை உண்டு
நன்நெறியைப் புகட்டுகின்ற பாட்டும் உண்டு
விண்ணளக்கும் விஞ்ஞானம் வளர்ந்து நின்று
விந்தைபல கண்டறிந்த ஞானி உண்டு
மண்வளத்தைக் காத்திடவே மன்னர் எல்லாம்
மறக்காமல் கட்டுவித்த அணைகள் உண்டு !
எண்ணமதும் திண்ணமுற எடுத்து ரைத்த
இலக்கியமோ எண்ணிலவாம் படிப்பீர் இன்றே !

பெருமைபல கொண்டதுவே தமிழன் நாடு
பிறர்வந்து புகுந்தபோதும் அழிவே இல்லை !
ஒருமித்த உணர்வோடு வாழ்ந்து நின்று
உலகத்தில் தமிழினத்தை உயர்த்தி வைப்பீர்
முறுக்குமீசை பாரதியின் உணர்வு கொண்டு
மயங்காமல் தமிழ்மொழியின் வளமை பேணும்
உறுதியொன்றை இன்றிங்கே ஏற்று நின்று
உலகெல்லாம் செந்தமிழை உயர்த்தி வைப்பீர் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (19-Dec-17, 9:42 pm)
பார்வை : 470

மேலே