விருது
அன்புடன் ஆசிரியருக்கு
சென்னையைச் சேர்ந்த வாசகசாலை அமைப்பு சிறந்த அறிமுக எழுத்தாளருக்கான விருதினை எனக்கு வழங்குகிறது. இது என் முதல் விருது :)
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
அன்புள்ள சுரேஷ்
அந்த விருதுடன் விருது ஏன் உங்களுக்கு அளிக்கப்படுகிறது என்னும் குறிப்பு உள்ளது. மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. உங்கள் நாவல் குறித்த மிகச்சிறந்த மதிப்பீடு. மிகச்செறிவான மொழியில் உள்ளது. எழுதியவர் ஓர் இலக்கியவாதி என்பதில் ஐயமில்லை.
விருது அவ்வாறுதான் மதிப்பு பெறுகிறது. யார், ஏன் அளிக்கிறார்கள் என்பதனால். வாழ்த்துக்கள்
ஜெ
வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் -2017
இந்த ஆண்டு வாசகசாலை விருதுகளின் சிறந்த அறிமுக எழுத்தாளர் பிரிவில் தனது “ஒளிர் நிழல்” நாவல் மற்றும் “நாயகிகள் நாயகர்கள்” சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் பொதுவாக நாவல் வடிவம் என்பது பல்வேறு சோதனை முறைகளுக்கு ஆட்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. நீண்ட செறிவான வாசிப்பிற்குப் பின் புதிதாக எழுத வரும் ஒருவர் அத்தகைய முயற்சிகளை செய்து பார்ப்பது உண்மையில் மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒன்று.அவ்வகையில் சுரேஷ் தனது முதல் நாவலில் கதை சொல்லும் முறையில், மொழிப் பயன்பாட்டில் நம்மைக் கவர்கிறார்.
தொடர்பற்று தனித்து தெரிவது போல காணப்படும் அத்தியாயங்களை, கண்ணுக்குத் தெரியாத சூட்சுமக் கயிறால் கட்டி ஒரு பொதிக்குள் நிறுத்தும் இடத்தில் நாம் கண்டடையும் வெளிச்சம் ஒரு நல்ல படைப்பாளியை நம்முன் அடையாளம் காட்டுகிறது.அதே போன்று குடும்பம், உறவுகள் பற்றிய சுரேஷின் கணிப்புகள், தேற்றங்கள் அனைத்தும் இந்த அநித்ய வாழ்வின் மாறா பேருண்மைகளை அவர் தன் படைப்பில் கையாளும் விதம் கவனிக்கத் தக்க ஒன்றாகிறது.
அதபோலவே அவரது சிறுகதைத் தொகுப்பும். தொகுப்பை வாசித்து முடிக்கும் பொழுது சுரேஷ் இக்கதைகளின் வாயிலாக எதனைக் கண்டடைய முயல்கிறார் என்பதும், அவரது மனம் எதனை நோக்கிய பயணத்தில் தன்னை முன்னிறுத்தி இயங்குகிறது என்பதும் சுவாரசியமான கேள்விகள்..!
புனைவின் இருவேறு வடிவங்களில் எளிதாக இயங்க எத்தனிப்பவராக, அதற்கான பிரயாசையும், ஆர்வமும் கேள்விகளும் உள்ளவராக சுரேஷை நாம் உற்று நோக்கலாம்.
இப்படியான ஒரு இளம் எழுத்தாளரை அடையாளப்படுத்துவதில் வாசகசாலை மிகவும் பெருமை கொள்கிறது
எழுத்தாளர் சுரேஷ் அவர்களுக்கும், இரு நூல்களையும் வெளியிட்ட ‘கிழக்கு’ பதிப்பகத்திற்கும் Badri Seshadri, வாசகசாலையின் அன்பும் வாழ்த்துகளும். நன்றி. மகிழ்ச்சி..!
===========================================================================================================
சாகித்ய அக்காதமி ஒன்றும் முதன்மையான இலக்கிய அங்கீகாரம் அல்ல. விருதுகளின் எல்லையும் அல்ல. அவ்விருது பெற்ற எத்தனைபேர் எழுத்தாளர்களாக அறியப்படுகிறார்கள் என்று மட்டும் பார்த்தாலே இது தெரியும். அரசு அளிக்கும் அங்கீகாரமாகவும் அதை நான் பார்க்கவில்லை. ஆகவே அரச அங்கீகாரத்திற்கான முனைப்போ அது எவருக்கு அளிக்கப்படவேண்டுமென்ற ஆலோசனையோ அல்ல இதெல்லாம்.
ஒன்று இவ்விருது பரவலாகக் கவனிக்கப்படுகிறது. இரண்டு தமிழகத்திற்கு வெளியே தரமான படைப்பிலக்கியவாதிகளுக்கு பெரும்பாலும் அளிக்கப்படுவதனால் இதற்கு ஒரு தரமதிப்பு உள்ளது. மூன்றாவதாக தமிழிலும் அவ்வபோது இது முக்கியமான படைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்டு ஒரு வரிசை உருவாக்கப்பட்டிருப்பதனால் ஒரு வகையான இலக்கிய அட்டவணையாக ஆகிறது. இம்மூன்று காரணங்களால் இது இலக்கியத்தகுதி அற்றவர்களுக்கு வழங்கப்படும்போது அதைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது.அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் தங்கள் மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்வதற்கான ஒரு விவாதத்தின் பொருட்டு.
[சாகித்ய அக்காதமியின் இவ்வருடத்தைய நடுவர்குழு எவர் என்பது வெளிப்படுத்தப்படவேண்டும். அந்த முகாரவிந்தங்களைத்தான் பார்த்து வைப்போமே].
*
இலக்கியமதிப்பீடுகள் என்பவை இலக்கிய அளவுகோல்களால் ஆனவை. அவற்றை எந்நிலையிலும் சமரசமில்லாமல் முன்வைப்பதே இலக்கியவாதிகளின் கடமை. வாழ்நாளில் ஒரு நல்ல கவிதையைக்கூட வாசித்திராதவர்களுக்கு கவிதை பற்றி விமர்சகர் சொல்வது என்னவென்றே புரியாது. இந்த விமர்சனங்கள் கவிதையில் ஆர்வமும் ரசனையும் கொண்ட, இலக்கியத்தை பொருட்படுத்தி வாசிக்கக்கூடிய வாசகர்களுக்காக முன்வைக்கப்படுபவை.
ஜெ