மனசு பனிக்கும் சிரிக்கும் பாலை
காலை எப்பவும் போல் எழுந்து குளித்து லிப்டில் இறங்கிய கட்டிடத்தை விட்டு ரோட்டுக்குப் போனபோதுதான் தெரிந்தது மூடுபனிக்குள் முகத்தை மூடிக்கொண்டிருக்கிறது நகரம் என்பது. ஆம் அடுத்த கட்டிடம் தெரியாத அளவுக்கு பனி மூட்டம்... ஒரே ஜிலு.. ஜிலு... குளு... குளு... லேசாக சாரல் போல் சொட்டு வைக்கும் பனி... ஸ்வெட்டருக்கு மேல் குளிரில் நடுக்கியபடி கடக்கும் மனிதர்களை ஸ்வெட்டர் எதுவும் இல்லாமல் கடந்து பேருந்து நிறுத்தம் நோக்கி பயணித்தேன். நாம இங்கு வந்தது முதல் இதுவரை ஸ்வெட்டர் வாங்கவில்லை.
இந்த குளிர்காலம் வந்தாலே பாலைக்குள் தகிக்கும் அரபு தேசம் பனிக்குள் சிரிக்க ஆரம்பித்து விடும். இன்று மூடு பனிக்கு செம மூடு போல... அடித்து ஆடியது.. எதிரே இருப்பது தெரியாத அளவுக்கு செமப் பனி... இந்தக் குளிரில் வேலைக்குப் போகணுமா என்று தோன்றினாலும் போய்த்தானே ஆகவேண்டும் என்ற காரணத்தால் மனசைத் தேத்திக் கொண்டு அவசரம் அவசரமாக பலர் போய்க் கொண்டிருந்தார்கள்... கார்கள் எல்லாம் விளக்குகள் ஒளிர மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன.
பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது ஒரு பெருங்கூட்டம் பேருந்துக்காக காத்திருந்தது. இப்படி ஒரு கூட்டம் எப்போதும் இருக்காதே... இதென்ன இன்று இவ்வளவு கூட்டம்... என்ற யோசனைக்கு பதில் கிடைக்கவில்லை. ஊரில் பள்ளிக்கு பேருந்தில் செல்ல பாஸ் வாங்கி வைத்திருக்கும் பசங்க கூட்டமா நிற்பதும் வரும் பேருந்தில் எல்லாம் ஏற எத்தனித்து 'இதில் பஸ் பாஸெல்லாம் ஏத்துறதில்லை... பின்னால டவுன் பஸ் வருது... அதுல ஏறு' என பல நடத்துனர்கள் சொல்லிச் செல்ல, தட தடக்க வரும் டவுன் பஸ்சிற்குக் காத்திருக்கும் கூட்டம் போலவே தோன்றியது.
தினமும் ஒன்றாகப் பயணிப்பதாலும் எங்க அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தில் பத்தொன்பதாவது தளத்தில் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்வதாலும் பழக்கமாகி... நட்பான தமிழக நண்பரிடம் 'என்னங்க இம்புட்டுக் கூட்டம்' என்று வினாவினேன். 'நான் வந்து இருபது நிமிடமாச்சு... ஒரு பஸ் கூட வரலைங்க... என்னன்னு தெரியல' என்றார் வருத்தமாய். ஒருவேளை அதிக பனியில ஓட்ட முடியாதுன்னு நிறுத்திட்டானுங்களோ என்றதும் 'காரெல்லாம் லைட் போட்டுப் போகுது... பஸ்க்கு என்னங்க பிரச்சினை... வேற ஏதோ பிரச்சினையா இருக்கும்...' என்று சிரித்து விட்டு போனில் பேசுவதைத் தொடர்ந்தார்.
நிற்கிறோம்... நிற்கிறோம்... எந்தப் பேருந்து வரவேயில்லை.... 7.45க்கு வரும் எங்கள் பேருந்தும் வரவில்லை... கூட்டம் மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. 7.45 பேருந்தில் ஏறினாலே எட்டு மணி ஆபீசுக்கு 8.20க்குத்தான் போய் சேருவேன். இன்னைக்கு எப்ப பஸ் வந்து... இந்த பனியில் மெல்ல மெல்லப் பயணித்து... அலுவலகத்துக்கு எப்ப போய்ச் சேருவது என்ற கவலை மனசுக்குள் மெல்ல முளைக்க ஆரம்பித்தது.
டாக்ஸியில் போய் விடலாம் என்றால் ஒரு டாக்ஸி கூட அந்த நிறுத்தத்தில் நிற்கவில்லை. அபுதாபியில் காலையில் டாக்ஸி பிடித்து வேலைக்குச் செல்வது என்பது நடக்காத காரியம். எல்லா டாக்ஸியும் சிவப்பு விளக்கி எரிய பயணித்துக் கொண்டிருக்கும்... பச்சை விளக்கு எரிந்தால்தான் பயணிகள் இல்லாத டாக்ஸி என நிறுத்தலாம்... எங்களைக் கடந்த டாக்ஸிகள் எல்லாமே சிவப்பு விளக்கோடு.
மேலும் டாக்ஸிக்கான கட்டணத்தை கன்னாபின்னான்னு ஏத்தி வச்சிருக்கானுங்க... குறைந்த பட்சம் 12 திர்ஹாம்... முதல் நிறுத்தத்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினால் இந்த குறைந்தபட்சம் கொடுத்த ஆகவேண்டும். எங்க அலுவலகம் செல்ல எப்படியும் முப்பது திர்ஹாம் ஆகும். நானும் நண்பரும் சேர்ந்து பயணித்து ஆளுக்கு பாதி கொடுக்கலாம் என்று முடிவெடுத்தாலும் டாக்ஸி கிடைப்பதில் சிக்கல்... அப்படியே ஒரு டாக்ஸி ஒதுங்கினாலும் நிற்கிற கூட்டத்தில் நமக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் வேறு.
மணியும் நகர்கின்றது... மூடு பனியும் விலக மறுக்கிறது... பேருந்தும் வரவில்லை. இனி ஒருவேளை பேருந்து வந்தாலும் நமக்கு முன்னால் இருக்கிற நிறுத்தங்களில் நிறைந்து அல்லவா வரும்..? நம்மூரு போல புட்போர்டிலும் உச்சியில் ஏன் பின்னால் இருக்கும் ஏணிப்படியிலும் ஏறியும் தொங்கியும் செல்ல இங்கு வழியில்லை. உள்ளுக்குள் நிறைந்து கதவு அடைபட, சென்சார் வேலை செய்ய ஒதுங்கி வழி கொடுத்தால்தான் வண்டி நகரும்.. இல்லையேல் டிரைவர் மைக்கில் திட்ட ஆரம்பித்து... இருக்கையில் இருப்பவர்கள் எல்லாம் ஆளாளுக்கு சப்தமிட்டு படியில் நிற்பவர் இடித்துப் புடித்து உள்ளே சற்றே தள்ளி கதவு அடைபட்டு பேருந்து நக்ருதல் என்பது ஒவ்வொரு நிறுத்தத்தில் தொடரும். என்ன செய்வது என இருவரும் யோசித்தபோது ஒரு யோசனை தோன்றியது.
அது என்னன்னா...
என்னுடன் வேலை செய்யும் எகிப்துக்காரனான சர்வே இன்சினியர் ரோட்டுக்கு அந்தப் பக்கம் தங்கியிருந்தான். எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பான். மாலை அலுவலகத்தில் இருந்து வரும் போது என்னைத் தன் காரில் கூட்டி வருபவன் என்பதால் அவனுக்கு போனடித்துப் பார்க்கலாம் என்ற யோசனை எழ, அவனுக்கு போன் பண்ணினேன். எடுத்தவன் 'என்ன குமார்' என்றான். 'எங்கே இருக்கே' என்றதும் 'ஆபீஸ் போறேன்... கார்னிச் ரோட்டில் இருக்கிறேன்' என்றான். 'சரி அப்ப போ' என்றேன்... நாம இன்னைக்கு தாமதமாகப் போய்க்கலாம் என்ற நினைப்புடன்.
'என்ன விஷயம்... சும்மா சொல்லு' என்றான். விபரத்தைச் சொன்னதும் 'அங்கயே நில்லு... நான் வர்றேன்...' என்றான். 'வேணான்டா பாத்துக்கலாம்' என்றதற்கு 'நோ பிராப்ளம்... நான் வர்றேன் இரு' என்றான். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அவனது வண்டி என்னையும் நண்பரையும் சுமந்து கொண்டு பனி மூடிய கார்னிச் ரோட்டில் மெல்லப் பயணித்தது.
கடலும் தெரியல... மரங்களும் தெரியல... முன்னே போற கார்களும் தெரியல... என்ன சிக்னல் விழுதுன்னும் தெரியல... என்ன பனி... என்ன பனி...
நேற்றிரவு பார்க்கிங் பைசா போட மறந்துட்டேன்... பதினொன்னு நாப்பதுக்கு அபராத பில் வச்சிட்டுப் போயிருக்கான்... 200 திர்ஹாம் தண்டம் எனப் புலம்பியபடி வண்டி ஓட்டினான். இரவு 12 மணி முதல் காலை 8 மணி கட்டணம் இல்லை என்றாலும் ரொம்ப சின்சியரா 11.40க்கு வச்சிட்டுப் போயிருக்கான் பாருங்க...
நாங்க காரை பார்க் பண்ணிட்டு இறங்கினால் தன் காரில் வைத்திருந்த அபராத பில்லை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு ''இப்ப என்ன மணியாச்சு... இப்ப வச்சிட்டுப் போயிருக்கான்' என பக்கத்தில் நின்ற பையனிடம் கத்திக் கொண்டிருந்தது ஒரு அரபிப் பாட்டி
அடடா பனிக் காலையில் பாலை அழகுதான். வெயிலில் தகிக்கும் பாலை குளிர் காலத்தில் ஊட்டி, கொடைக்கானல் போல் ஆவது விசித்திரம்தான்...
ஏசியில்லாம் அறைக்குள் குளிர்ந்து கொண்டிருக்கிறது.
படங்கள் செல்போனில் எடுத்தது.
-'பரிவை' சே.குமார்.